என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

நெஞ்சை உலுக்கும் குறும்படங்கள்!

நெஞ்சை உலுக்கும் குறும்படங்கள்!

நெஞ்சை உலுக்கும் குறும்படங்கள்!

 ##~##
'வா
டிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்பது வள்ளலாரின் திருமந்திரம். ஈரோட்டில் வள்ளலார் புத்தக நிலையம் நடத்தும் மணிகிருஷ்ணனுக்கும் அதுதான் மந்திரம்!

சமூக அவலங்கள் குறித்துக் குறும்படங்கள் எடுக்கிறார். 'குப்பை’, 'பித்தன்’, 'வாக்குமூலம்’ ஆகியவை இவர் எடுத்த குறும்படங்கள். படங்களின் ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை கனக்கச் செய்யும் முயற்சி!

நெஞ்சை உலுக்கும் குறும்படங்கள்!

சமூகத்தில் முதியோர்கள் எப்படி எல்லாம்  உதாசீனப்படுத்தப்படுகிறார்கள் என்பதை முகத்தில் அறைவதுபோலச் சொல்கிறது 'குப்பை’. சில மாதங்களுக்கு முன் பவானி பகுதியில் சாலையில் இறந்துகிடந்த முதியவர் ஒருவரை நகராட்சியின் குப்பை வண்டியில் தூக்கிப் போட்டுச் சென்றார்கள். அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. 'பித்தம்’ - மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எப்படி எல்லாம் அல்லாடுகிறார்கள் என்பதைப் புரியவைக்கும் படம். 'வாக்குமூலம்’ - புகைபிடிப்பதால் ஏற்படும் அபாயத்தை விளக்குகிறது.

இவரது குறும்படங்களை உள்ளூர் சேனல்கள் தன்னார்வத்துடன் ஒளிபரப்புகின்றன. ''இளைஞர்களுக்கு சமூக சிந்தனையும் அக்கறையும் வேண்டும். கல்வி கற்பது... சம்பாதிப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. வீட்டில் அனைவரும் அமர்ந்து டி.வி. பார்க்கும்போதுகூட, நாம் தாத்தா - பாட்டிகளின் விருப்பத்துக்கு ஏற்ப டி.வி சேனலை மாற்றுவது இல்லை. அவர்களின் மனநிலை உணர்ந்து இளைய சமுதாயம் செயல்பட வேண்டும். ஏனெனில், நாளை நாமும் முதியவர்கள் ஆவோம்!'' என்கிறார் மணிகிருஷ்ணன்.

உண்மைதானே!

- வீ.கே.ரமேஷ்

சினிமாவே வேணாம்!

நெஞ்சை உலுக்கும் குறும்படங்கள்!

கோவை 'டி’ டி.வி-யின் செல்லக்குட்டி திஷா மோகன். படிப்பது பள்ளிக்கூடம் (கிளாஸ் சொன்னா வயசு தெரிஞ்சு டுமாம்!). ஆனா, பொண்ணு கலக்குவது 'காலேஜ் கஃபே’ நிகழ்ச்சியில். சமீபமாக 'டிஜிட்டல் மசாலா’விலும் கமகமக்கிறார். பேச்சில் மலையாள வாடை. சொந்த ஊர் திருவனந்தபுரம். ''என்கிட்ட பேசுற நேயர்கள் 'நீங்க சினிமாவுல நடிக்கலாமே’னு கேட்குறாங்க. அப்பலாம் எதுவும் பேசாம சிரிச்சு சமாளிப்பேன். ஆனா, இப்ப உண்மை சொல்றேன். நான் நைன்த் படிக்கிறப்பவே மலையாள சினிமாவில் தலைகாட்டினேன். ஆனா, ஏனோ சினிமா பிடிக்காம விலகிட்டேன். இப்பவும் நிறைய சான்ஸ் வருது. ஆனா, வேண்டாம்னு ஸ்ட்ரிக்ட்டா தவிர்த்துட்டு இருக்கேன். எனக்கு ஃபேஷன் டிசைனர் ஆகணும்னு ஆசை. டி.வி-யில் வேலை பார்ப்பதே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. என்ன, லவ் லெட்டர் தொல்லைதான் தாங்க முடியலை!''- செல்லமாக அலுத்துக்கொள்கிறார் திஷா மோகன். லவ் பண்ணுங்க மேடம்... (அந்தப் பையன்) லைஃப் நல்லா இருக்கும்!

-   தி.விஜய்