லிட்டில் இங்கிலாந்து!
##~## |
''இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் அத்தனை பேரும் வெள்ளந்தி மனிதர்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மும்மொழிக் கலாசாரத்தையும் அன்பு என்கிற ஒற்றைப் புள்ளியில் இணைப்பவர்கள். கிருஷ்ணகிரியின் முக்கிய நகரமான ஓசூரின் தட்பவெப்ப நிலை ஒரு வழிப் பாதை மாதிரி... வந்தவர்களைப் போக விடாது. தமிழகத்தில் அற்புத நிலவியல் அமைப்புகொண்டது கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர், பாகலூர், தேன்கனிக்கோட்டை, தளி, ராயக்கோட்டை, கெலமங்கலம்... ஒருமுறை இந்த ஊர்களுக்குச் சென்று பாருங்கள் புரியும்!

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்கள் கூம்புபோல் ஓங்கி இருப்பதால் அவற்றைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரத்தில் இருக்கிறது தேன்கனிக் கோட்டை. இருந்தாலும், இது கூம்புபோல் உயர்ந்து நிற்கும் மலை அல்ல. அதிசய சமதளம்!
தளி பகுதியில் இருக்கும் ஒவ்வொரு கிராமமும், அங்கு உள்ள மக்களும், அவர்களின் வாழ்வியலும், வசீகர நேர்த்திகள். இந்தப் மலைப் பகுதிகள் ஒவ்வொரு நாளும் புதிது போலவே தோன்றும். தளியை 'லிட்டில் இங்கிலாந்து’ என்பார்கள். சாலைகளைத் தவிர்த்த மற்ற எல்லா இடங்களிலும் பரந்த புல்வெளி, மரங்கள், ரோஜாப் பண்ணைகள் எனக் கண்கவர் காட்சிகள்!

மத்திகிரி கால்நடைப் பண்ணையில் காலார நடந்தால், மனம் லேசாகிவிடும். பூந்தோட்டங்கள், பனி பூத்த புல்வெளிகள், சுடாத வெயில், கம்பீரக் குதிரைகள் என மொத்தக் கொடைக்கானலையும் இந்த ஒரு பண்ணையில் தரிசிக்கலாம்.
தேவகானப்பள்ளியில் நீர்நிலைகள் அதிகம். தாமரைகள், புதுப் புது பறவை இனங்கள், அகன்று வளர்ந்து விழுதுவிட்ட ஆல மரங்கள், அதன் அடியில் காவல் தெய்வங்களின் கோயில்கள், அங்கே நடக்கும் விருந்து விசேஷங்கள்... இப்படி இயற்கையும் கலாசாரமும் ஒன்றிப் போய்... அப்பப்பா!
இந்தப் பிரதேசங்களைத் தேடித் தேடிச் சென்று எங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் திறந்தவெளிக் கூட்டங்களை நடத்துவோம். இப்போது ராகி, தினை, சாமை போன்ற உணவுப் பயிர்களில் இருந்து பூ, காய்கறி ஆகிய பணப் பயிர்களுக்கு விவசாயம் மாறிவிட்டது. பரவாயில்லை. விவசாயியின் மனமும் வயிறும் குளிர்ந்தால் சந்தோஷமே!
எங்கள் கிராமப் பாறைகளில் எனது மாணவப் பருவத் தாரைகள் இன்றும் மிச்சம் இருக்கின்றன. பாறை இடுக்குகளில் எல்லாம் உட்கார்ந்து படித்தவன் என்பதாலோ என்னவோ, பாறைகள் மீது எப்போதுமே எனக்கு ஏகாந்தக் காதல் உண்டு. இன்றளவும் பாறைகளுடன் தனிமையில் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அதற்காகவே அடிக்கடி இங்குள்ள சந்திர சூடேஸ்வரர் மலைக்குச் செல்வேன்.
நல்ல விஷயங்களுக்கு நடுவே வருத்தங்களும் இல்லாமல் இல்லை. இயற்கைச் செல்வங்களான பாறைகள், மலைகள், நீர்நிலைகள் இன்று யாரோ சிலரின் லாபத்துக்காகக் களவாடப்படுவது நெஞ்சில் ரத்தம் சொட்டவைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, குளிரில் இதம் காண வெயிலைத் தேடி ஓடுவோம். இப்போது இயற்கை கொஞ்சம் மாறிவிட்டது... கோடை பிறக்கும் முன்பே காத்தாடி சுழல வேண்டிய அவசியம்.
கடந்த 70-களில் தொடங்கி, சுமார் 25 ஆண்டுகளில் லாரி தயாரிப்பில் தொடங்கி, குட்டி விமானத் தயாரிப்பு வரை அபார வளர்ச்சி காட்டிய நகரம் ஓசூர். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் தொழில் மந்தமாகி விட்டது. ஆலைகள் பலவற்றுக்குப் பூட்டு போட்டுவிட்டார்கள்.
இன்று ரியல் எஸ்டேட் தொழில்தான் ஓசூரின் உயிர்நாடி. பெரும் போட்டியை மையமாகக்கொண்ட இந்தத் தொழில், சமீபகாலமாக உறவுகளையும் கொல்லத் துணியும் மனோபாவத்தை வளர்த்து இருப்பது வேதனை. இவை எல்லாம் தாண்டி, ஓசூரில் மிச்சம் இருக்கும் இயற்கை அழகைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்!''
- எஸ்.ராஜாசெல்லம்