என் பள்ளி நாட்களில்... இரண்டு நண்பர்களுக்கு இடையே ஒரு சண்டை. விஷயம் இதுதான். அவர்கள் இருவரில் யார் சிவப்பு என்பதுதான் கேள்வி. இந்தப் பஞ்சாயத்து இன்னொரு நண்பனின் முன் வந்தது. அவனிடம் இரண்டு பேரும், 'டே... நல்லாப் பார்த்துச் சொல்லு. நான்தானே சிவப்பு!' என்றார்கள்.
நண்பன் கொஞ்சம் யோசித்தான். உடனே ஒருவன், 'முகத்தை மட்டும் பார்க்காதே. என் கையைப் பாரு. எவ்வளவு வெள்ளையா இருக்கு. நல்ல முடிவாச் சொல்லு' என மன்றாடினான். பஞ்சாயத்து பண்ணிய நண்பன் ஆழமாக யோசித்துவிட்டுச் சொன்னான். 'உங்க கேள்வியே தப்பு. உங்க ரெண்டு பேர்ல யார் ரொம்பக் கறுப்புன்னு வேண்ணா சொல்றேன். அதுதான் நியாயம்' என்றான். ஆம், அந்த இரண்டு நண்பர்களுமே அவ்வளவு கறுப்பாக இருப்பார்கள்.
இது மாதிரி வேடிக்கையான விஷயங்கள் உங்களுடைய கல்லூரி வளாகத்திலும், அலுவலகத்திலும்கூட நடக்கலாம். கறுப்பைப் பரிகாசம் செய்வதும், அதை மதிப்பீட்டுக் குறைவுடன் அணுகுவதும் பன்னெடுங்காலமாக இருக்கும் விஷயம். அது விளையாட்டாக இருக்கும் வரை சரி. வேதனைப்படுத்தும்விதமாக அமைந்துவிட்டால், ஆபத்து.
நிறத்தின் மீதான பழக்கப்படுத்தப்பட்ட பார்வை தனி மனிதனுக்குள் தன்னம்பிக்கைக் குறைவை ஏற்படுத்திவிடுகிறது. 'நிறம் ஒரு பொருட்டல்ல' என்று உணர்வதற்கு முன்னதாகவே அது தொடர்ப£ன கேலியும் கிண்டலும் சிலரை அவர்கள் அறியாமலே ஒடுங்கிப்போகச் செய்துவிடுகிறது. நாமும் அப்போதைய சந்தோஷத்துக்காக இந்தக் கிண்டல்களின் வீரியம் தெரியாமல் விளையாடி வருகிறோம்.
சென்னையில் ஒருநாள் இரவுக் காட்சி சினிமா பார்த்துக்கொண்டு இருந்தேன். படம் ஆரம்பித்து சற்று தாமதமாக வந்த ஒரு மாணவர், தன் நண்பனின் பெயரைச் சத்தமாகச் சொல்லி 'பல்லைக் காட்டிச் சிரி... நீ எங்கே இருக்கேன்னு தெரியலை' என்றார். தியேட்டர் அமைதியாக இருந்த நேரத்தில் அவர் சொன்னதால், எல்லாருமே சிரித்துவிட்டார்கள். அந்தப் பையன் யாரென்று யாருக்கும் தெரியாது. ஆனாலும், சம்பந்தப்பட்ட இளைஞர் சங்கடப்பட்டு இருப்பார் என்று தோன்றியது.
உலக வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், நிற பேதத்துக்கு எதிரான புரட்சி மிகப் பெரியது. இன்று அதைத் தாண்டிய இடத்துக்கு வந்தாலும், நிறம் தொடர்பான மனத் தடைகள் அப்படியேதான் இருக்கின்றன.
நம் தலைவர்கள், ஹீரோக்கள், நிஜ வாழ்வில் கடினமாக உழைத்து முன்னுதாரணமாகத் திகழ்பவர்கள் எனப் பலரும் கறுப்பு நிறமாக இருந்தாலும், சிவப்பாக மாற வேண்டும் என்ற உந்துதல் அதிக மானவர்களிடம் இருக்கிறது. 'வசீகரத்தின் அடையாளம், அங்கீகாரத்தின் அடையாளம், அதிகாரத்தின் அடையாளம் கறுப்பு அல்ல' என்று ஆழ்மனதில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இன்றைக்குக் கல்லூரி அளவிலும் அலுவலகச் சூழலிலும் சிவப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் செயற்கையான புறச் சூழல்களால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஊடகங்கள், விளம்பரங்கள் வாயிலாக சிவப்பாக இல்லை என்றால் உன்னால் வெற்றி பெற முடியாது என்ற கருத்தாக்கம் ஆழமாக விதைக்கப்பட்டு வருகிறது.
வெள்ளை வெளேர் என்று இருக்கும் ஐரோப்பியர்கள் தோல் நோய்களைத் தடுக்கவும், ஆரோக்கியமான சருமத்தைப் பெறவும் சூரிய ஒளி படும்படி சன் பாத் எடுத்துக்கொண்டு இருக்கையில், அத்தகைய சருமத்தை இயற்கையிலேயே பெற்று இருக்கிற நாம் சிவப்பாக மாற என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சிந்தித்துக் |