மாலையில் வீடு திரும்பும் வீட்டின் உரிமையாளர்கள் தன்னுடைய வீடு எப்படி உருமாறியிருக்கிறது என்று சந்தேகம்கொள்கிறார்கள். யார் தனது அழுக்கு உடைகளைச் சுத்தம் செய்தது என்று திகைக்கிறார்கள். யாரோ திருடன் வந்திருக்கக்கூடும் என்று பயந்து அவசரமாகத் தங்களது பணம், நகைகளைச் சரிபார்க்கிறார்கள். எதுவும் திருடுபோகவில்லை. ஆனால், ஒரு திருடன் வீட்டுக் குள் நுழைந்திருக்கிறான். எதற்காக அவன் உள்ளே வந்தான் என்று அவர்களுக்குப் புரியவில்லை. அவன் மீது எவரும் காவல் துறையில் புகார் தரவும் இல்லை.
திருடன் ஒருமுறை இதுபோல யாருமில்லாத வீடு ஒன்றில் திருடப்போகிறான். மிகப் பெரிய வீடு. ஆனால், அலங்கோலமாக இருக்கிறது. அதைச் சுத்தம் செய்துவிட்டு சமைக்க உள்ளே நுழையும்போது, ஒரு பெண்ணை யாரோ அடித்துக் கட்டிப்போட்டு இருப்பதைக் காண்கிறான். என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்தப் பெண் அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ஏன் பூட்டப்பட்ட வீட்டில் ஒரு பெண் கட்டிப்போடப்பட்டிருக்கிறாள் என்று யோசிக்கிறான்.
திருடனைப் பார்த்த பயம் அந்தப் பெண்ணின் கண்களில் இல்லை. மாறாக, தன்னை அவன் விடுவிக்க வேண்டும் என அந்தப் பார்வை கெஞ்சு கிறது. அவளை விடுவிக்கிறான். அவள் தன்னை எப்படியாவது அங்கிருந்து வெளியே கொண்டுபோய்விடும்படிக் கெஞ்சுகிறாள். அவள் யார். எதற்காக அங்கே அடைப்பட்டு கிடக்கிறாள் என்று கேட்கிறான். தனது கணவன் தன்னை அடித்துக்கொடுமைப் படுத்துவதாகவும், அவன் ஒரு சந்தேகப்பிராணி என்று அழுகிறாள். அவளைக் காப்பாற்ற முடிவு செய்து அழைத்துக்கொண்டு புறப்படும் நேரம் அந்தப் பெண்ணின் கணவன் காரில் வந்துவிடு கிறான். வேறு வழியில்லாமல் அவனை அடித்துப் போட்டுவிட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்றி வெளியே அழைத்துப் போகிறான்.
புறநகர்ப் பகுதி ஒன்றில் அவளை விட்டுவிட்டுப் பிரிந்து போக நினைக்கிறான். அந்தப் பெண் தன்னை வெளியே அனுப்பினால், கணவன் பிடித்துச் சென்று கொன்றுவிடுவான். ஆகவே, அவனோடு வருவதாகச் சொல்கிறாள். என்ன செய்வது என்று தெரியாமல் அவளைத் தன்னோடு அழைத்துப் போகிறான்.
அதன் பிறகு, அவர்கள் இருவரும் ஒன்றாக முன்புபோல யாரும் இல்லாத வீடுகளில் பகல் நேரங்களில் நுழைகிறார்கள். அந்தப் பெண் வீட்டைச் சுத்தம் செய்கிறாள். அவன் சமைக்கிறான். அந்தப் பெண் துணி துவைப்பாள். அவன் இஸ்திரி போடுவான். இப்படித் தங்களால் முடிந்த சேவையை இருவரும் பகிர்ந்துகொள்கிறார்கள்.
அதே நேரம் அவர்கள் இருவரும் அந்த வீட் டைத் தங்களது புதிய வீடுபோல கொண்டாடுவார்கள். புதிதாகத் திருமணமாகி வந்தவர்கள்போல கேலி செய்வதும், சிரிப்பதும், ஒன்றாகச் சாப்பி டுவதும், டி.வி பார்ப்பதும் என்று அந்த வீட்டில் தங்கும் பகலினை முழுமையாக அனுபவிப்பார்கள். மாலையில் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.
ஒருமுறை திருடன் அந்தப் பெண்ணிடம் சொல்கிறான்... 'யாராவது ஒரு வீட்டில் முகம் அறியாத நமக்கு இதுபோல உணவும் உபசரிப்பும் தருவார் களா என்ன? சுயநலம்தான் திருட்டை உருவாக்குகிறது. என்னை எவரும் எங்கேயும் அனுமதிக்கவே இல்லை. கண்டுகொள்ளவும் இல்லை. உலகின் கண்களுக்கு நான் ஒரு உதவாக்கரை. வெட்டி ஆள். ஆகவேதான் நான் அவர்கள் மீது எனக்குள்ள உரிமையை நானே எடுத்துக்கொண்டேன். என்னை அவர்களுக்கு ஒருபோதும் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால், நானும் இந்த வீட்டில் ஒருநாள் வசித்திருக்கிறேன். விசித்திரமான உறவில்லையா?' என்று கேட்பான்.
|