என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

மிரட்டல் திருவிழா!

மிரட்டல் திருவிழா!

##~##
சு
டுகாட்டு நாயகன் சிவபெருமான் ருத்ர தாண்டவமாடும் மிரட்டல் திருவிழாதான் மயானக் கொள்ளை! மாசி மாதம் சிவராத்திரியை ஒட்டி வரும் அமாவாசை நாளில் நடக்கும் இந்த மயானக் கொள்ளை, சேலம் வட்டாரத்தின் திகீர் திருவிழா!

அன்றைய தினம் சேலம் காக்காயன் சுடுகாடு விழாக் கோலத்தில் திமிலோகப்படும். ''வருஷத்துக்கு ஒருமுறை பொங்கலுக்கு எப்படி வீட்டைச் சுத்தம் செஞ்சு பண்டிகை கொண்டாடுறோமோ... அதுபோல சுடுகாட்டை சிவபெருமான் சுத்தப்படுத்துறதுதான் மயானக் கொள்ளை. அந்த நாள்ல பெரியாண்டிச்சி அம்மன் வேஷத்தில் சிவபெருமான் சுடுகாட்டுக்குள் புகுந்து, அங்கே சிதறிக்கிடக்கிற மனித எலும்புகளை எடுத்துக் கடிப்பார். பிணங்களை எரிச்ச சாம்பலை எடுத்து உடம்பெல்லாம் பூசிக்குவார்னு ஐதீகம். அதனால், பலரும் வேஷம் போட்டுக்கிட்டு ஆடி வருவாங்க. உண்மையான பக்தியுடன் ஆடிட்டு இருக்கிற சிலரோட உடம்புலதான் சாமி புகுந்து வருவாரு. அப்படி சிவன் புகுந்தவங்களை அடக்குறது சாதாரண விஷயம் இல்லை!'' என்கிறார் ஏரியா பூசாரி ஒருவர்.

மிரட்டல் திருவிழா!

கோரைப் பல், விரித்த தலைமுடி சகிதமாக மிரட்டல் கோலத்தில் ஒருவர் ஆடிக்கொண்டு வர... அவரை நான்கைந்து பேர் தாங்கிப் பிடித்து வந்தனர். பக்தர் ஒருவர் கையில் ஆட்டுக் குட்டியைப் பிடித்திருக்க, சாமியாடி வந்தவர், அந்த ஆட்டுக் குட்டியை அலேக்காகத் தூக்கி, அதன் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்ச, துடிதுடித்து அடங்கியது ஆட்டுக் குட்டி. பிறகு, குட்டியைத் தூக்கி வீசி விட்டுத் தனது ஆட்டத்தைத் தொடர்ந்தார். இன்னொரு பக்கம், பெண்மணி ஒருவர் நறநறவெனப் பற்களால் சேவலின் கழுத்தைக் கடித்து ரத்தம் உறிஞ்சிக்கொண்டு இருந்தார்.

இன்னொரு சாமியாடி, வேகமாக ஓடிப் பிணங்களை எரிக்கும் இடத்தில் இருந்த சாம்பலை அள்ளி உடல் முழுவதும் பூசிக்கொண்டார். சுடுகாடு முழுக்கப் பக்தர்கள் வரிசையாகப் படுத்திருக்க, சாமியாடி வந்தவர்கள் அவர்கள் மேலே ஏறி மிதித்தபடியே சென்றார்கள். பிணம் எரிக்கும் இடத்தில் அன்றைய தினம் ஃப்ரெஷ்ஷாக(!) எரித்த  பிணங்களின் சாம்பலை வாங்க போட்டா போட்டி. அதைச் சாப்பிட்டால் ஆயுசு கெட்டியாம். குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியமும் கிடைக்குமாம். சிவ சிவா!

- கே.ராஜாதிருவேங்கடம் படங்கள்: எம்.விஜயகுமார்