ஆண்களைவிடப் பெண்கள் ஒருவருக்கொருவர் பார்த்த மறு நிமிடம் பழகிவிடுகிறார்கள். அதுபோலவே உறங்கப் போவதற்குள் பிரிந்தும்விடுகிறார்கள். ஆண்களோ யாரோடு பேசுவது என்று தயங்கித் தயங்கித் தேர்வு செய்கிறார்கள். பிறகு, சிறிய யோசனை. அது கலைந்து ஐந்தாம் நிமிடத்தில் பேசத் துவங்கி, அடுத்த பத்தாம் நிமிடத்தில் வார இதழ்களைப் பரிமாறிக்கொண்டு, அரசியல், சினிமா, நாட்டுநடப்பை விவாதித்தபடியே கொண்டுவந்த உணவைப் பகிர்ந்துகொண்டு நட்பாகிறார்கள்.
இரவு உறங்குவதற்குள் அவரவர் கவலைகள், ஆதங்கங்கள் என வாழ்வின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு, விடியும்போது இறங்க வேண்டிய ரயில் நிறுத்தத்தில் முந்தைய நாளின் நினைவு எதுவும் இன்றிப் பிரிந்துவிடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு பயணத்திலும் யாராவது அறிமுகமாகிறார்கள்.
இப்போது ரயில் சினேகம்கூட அறுபட்டுப்போய் இருக்கிறது. ரயிலில் ஏறினால், அது ஊர் போய்ச் சேரும் வரை செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். வாய் ஓயாத செல்போன் உரையாடல்களால் ரயில் பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. இன்று ரயில் பயணம் குறித்த கிளர்ச்சியைவிட, குற்றச்சாட்டுகளே அதிகமாகி இருக்கின்றன. வரலாறு, ரயிலையும் சில குறிப்பிட்ட ரயில் பயணங்களையும் தனது கடந்த காலத்தின் மறக்க முடியாத சாட்சியாக வைத்திருக்கிறது. ஹிட்லரின் நாஜி அதிகாரம், யூதர்களை ஆடு மாடுகள்போல கொல்வதற்கு அழைத்துச் சென்ற மரண ரயிலும், தனுஷ்கோடி புயலில் சிக்கிப் பலியான ரயிலும், இன்றும் மனதைத் துயரம்கொள்ளவைக்கின்றன.
அந்த வரிசையில் மிக முக்கியமான திரைப்படம் Train to Pakistan. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை யின்போது ஏற்பட்ட வன்முறை யும், கற்பழிப்பும், உயிரிழப்பும் மறக்க முடியாதது. லட்சத்துக்கும் மேலான மக்கள் இதில் பலியாகி இருக்கிறார்கள். இந்தியப் பிரிவினை தமிழ்நாட்டில் வெறும் செய்தி மட்டுமே. வடக்கே பயணம் செய்தால், அதுவும் பஞ்சாப் மாநிலத்தில் பயணம் செய்தால், ஒவ்வொரு குடும்பத்திலும் பிரிவினையின் வலி இன்னமும் இருந்துகொண்டே இருப்பதை உணரலாம்.
இந்தத் திரைப்படம் குஷ்வந்த் சிங்கின் நாவலை மையமாகக்கொண்டது. பமீலா ரூக்ஸ் இதை இயக்கியிருக்கிறார். சட்லஜ் ஆற்றின் கரையில் உள்ள மனோ மஜ்ரா என்ற கிராமம் எப்படி இந்தியப் பிரிவினையால் சூறையாடப்படுகிறது என்பதே படத்தின் மையக் கதை. இந்த ஊரில் ஒரு சிறிய ரயில் நிலையம் உள்ளது. லாகூருக்கும் டெல்லிக்கும் இடையில் ஓடும் இரண்டு ரயில்கள் அதைக் கடந்துபோகின்றன. எல்லைப்புறக் கிராமம் அது. இந்தக் கிராமத்தில் சீக்கியர்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வசிக்கிறார்கள். ஒரே ஒரு இந்துக் குடும்பம் இருக்கிறது.
இந்திய - பாகிஸ்தான் பிரி வினையின்போது இரண்டு பக்கமும் கலவரம் மூள்கிறது. வீடுகள் சூறையாடப்படுகின்றன. இளம் பெண்களைக் கூட்டமாக வந்து கற்பழிக்கிறார்கள். எதிர்ப்பவர்கள், அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள். உயிர் தப்பி வர ரயிலின் கூரை மீதுகூட ஏறிக்கொள்கிறார்கள். அப்படி லாகூரில் இருந்து புறப்பட்டு வந்த ரயிலில் எண்ணிக்கையற்ற மனிதர்கள் உயிரிழந்து, உடமை இழந்து உயிரைக் காப்பாற்றத் தப்பி வருகிறார்கள். இந்தச் சம்பவம், ஒன்றாக வாழ்ந்த கிராம மக்களுக்குள் பிரிவினையைத் தூண்டுகிறது. அமைதியாக வாழ்ந்துகொண்டு இருந்த சிறிய கிராமம் பிரிவினை காரணமாகப் பற்றி எரியத் துவங்கி, மயானம் போலாகிறது.
|