மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! : எப்படிக் கடந்து செல்வது? -எஸ்.ராமகிருஷ்ணன் - 45

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! : எப்படிக் கடந்து செல்வது? -எஸ்.ராமகிருஷ்ணன் - 45

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! : எப்படிக் கடந்து செல்வது? -எஸ்.ராமகிருஷ்ணன் - 45
சிறிது வெளிச்சம்! : எப்படிக் கடந்து செல்வது? -எஸ்.ராமகிருஷ்ணன் - 45
எப்படிக் கடந்து செல்வது?
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! : எப்படிக் கடந்து செல்வது? -எஸ்.ராமகிருஷ்ணன் - 45
.
சிறிது வெளிச்சம்! : எப்படிக் கடந்து செல்வது? -எஸ்.ராமகிருஷ்ணன் - 45

காதலின் விசித்திரம் புரிந்துகொள்ள முடியாதது. 20 வயதில் தோன்றும் காதல் இயற்கையானது. ஆனால், நடுத்தர வயதில் தோன்றும் காதல்? அதை எப்படி எதிர்கொள்வது. எப்படிக் கடந்து செல்வது? 45 வயதில் ஏற்படும் எதிர்பாராத காதல், பல ஆண்களைத் தடுமாறி அலையவைத்திருக்கிறது. தவறான முடிவுகளுக்குக் கொண்டுசென்றிருக்கிறது. அதுபோலவே 30-ஐக் கடந்த பெண்ணுக்கு ஏற்படும் காதலும். குடும்பம், கணவன், குழந்தைகள் என்ற இயல்பான உலகில் இருந்து அவளை வெளியேற்றுகிறது. அவளது அன்றாட வாழ்வு சிடுக்கும் சிக்கலும் ஆகிவிடுகிறது.

குடும்பத்துக்காகவும், சமூகக் கட்டுப்பாடுகளுக்காகவும் பெண்ணோ, ஆணோ தங்களது ரகசியக் காதலை வெளியே சொல்லாமல் இருக்கக்கூடும். ஆனால், நடுத்தர வயதில் திடீரெனக் காதல்வசப்படுவது பலருக்கும் நடந்தேறி இருக்கிறது. அதை அவர்கள் எதிர்கொண்ட விதமும் பின்விளைவுகளும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் கசப்புமானவை.

தங்கள் வயதை மறந்து அவர்கள் நடந்துகொள்ளும் விளையாட்டுத்தனம் ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் தங்கள் வயதை நினைத்து அவர்கள் போடும் வேஷங்களும் ஒளிவுமறைவுகளும் இந்தக் காதலைக் குழப்பத்தின் உச்சத்துக்குக் கொண்டு செல்கின்றன. அல்லது ஆறாத மன வலியை, ஏமாற்றத்தைத் தருகின்றன.

நடுத்தர வயதின் காதல் அற்ப நாளில் முடிந்து போய்விடும் சிலந்தி வலை போன்றது என்று அறிந்தே காதலிக்கத் துவங்குகிறார்கள். பல நேரங்களில் அதைக் கைவிட முடியாமல் தொடரவும் முடியாமல் சிக்கிக்கொண்டு துயரப்படுகிறார்கள். நாளிதழ்கள், வார இதழ்களில் காணப்படும் பெரும்பகுதி குற்றச் சம்பவங்களுக்கும் நடுத்தர வயதின் காதலுக்கும் மிக நெருக்கமான உறவு இருக்கிறது.

யூசுப் சௌராணி என்ற உருது எழுத்தாளரின் 'தொடர்புஎல்லை' என்ற சிறுகதையைச் சமீபத்தில் வாசித்தேன். காப்பீட்டு வங்கியில் பணியாற்றும் 38 வயதான ஜப்ரா அழகான பெண். திறமையான நிர்வாகி. திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சொந்த வீடு, சமூக அந்தஸ்து என்று வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டு இருக்கிறது.

ஒருநாள் அவளது காப்பீட்டு நிறுவனத்தில் இழப்பீடு வழக்குபற்றிப் புகார் தருவதற்காக இப்ராகிம் என்ற 25 வயது இளைஞன் வருகை தருகிறான். அவன் விளையாட்டு ஆசிரியராகப் பணியாற்றுவதாகச் சொல்கிறான். மற்ற வாடிக்கையாளர்போல இல்லாமல் அவனிடம் ஏனோ ஓர் ஈர்ப்பு அவளுக்கு உருவாகிறது. இப்ராகிமின் பிரச்னையைத் தானே சரிசெய்வதாக ஜப்ரா உறுதி சொல்கிறாள். இப்ராகிம் அடிக்கடி அலுவலகம் வரத் துவங்குகிறான். தொலைபேசியில் பேசுகிறான்.

சிறிது வெளிச்சம்! : எப்படிக் கடந்து செல்வது? -எஸ்.ராமகிருஷ்ணன் - 45

ஒவ்வொரு முறையும் அவன் வெளிப்படையாக ஜப்ரா அணிந்துள்ள உடை மற்றும் அவளது கேசம், வாசனைத் திரவியம்பற்றி வியந்து பேசுகிறான். திருமணமாகி 18 ஆண்டுகள் முடிந்துபோனதால் ஜப்ராவின் அழகை அவளது கணவன் கண்டுகொள்வதே இல்லை. ஆகவே, இப்ராகிமின் பாராட்டுக்கள் அவளை மிக சந்தோஷப்படுத்துகின்றன. தன்னை ஒருவன் ரசிக்கிறான். தனது திறமைகளைப் பாராட்டுகிறான் என்பதே அவன் மீதான ஈர்ப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

இருவரும் ஒன்றாகத் தேநீர் அருந்துகிறார்கள். திரைப்படம் பார்க்கப் போகிறார்கள். தான் 38 வயதில் காதலிப்பது அவளுக்கு உள்ளூர சந்தோஷமாக இருக்கிறது. அதே நேரம், இது வெளியே தெரிந்தால் பிள்ளைகள் தன்னை வெறுப்பார்கள். கணவன் தன்னைக் கைவிட்டுவிடுவார் என்ற பயமும் ஏற்படுகிறது. இந்தக் காதல் திருமணத்தை நோக்கி செல்லப்போவது இல்லை. ஆனால், அதை எப்படி எடுத்துக்கொள்வது. யாரிடம் இதைப்பற்றிப் பேசுவது என்று அவளுக்குப் புரியவில்லை.

அடிக்கடி இப்ராகிமோடு பேச வேண்டும் என்று விரும்புகிறாள். அலுவலகம், வீடு, பிள்ளைகள் என்று சலிப்பூட்டிக்கொண்டு இருந்த அவளது தினசரி உலகை அவனது காதல் முழுவதுமாக மாற்றிவிட்டதாக உணர்கிறாள். அவனுக்காகத் தேடித் தேடிப் பரிசுகள் வாங்குகிறாள். அவனைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருக்கிறாள். அவளது தோற்றமே மாறத் துவங்குகிறது.

இப்ராகிமைத் தன் வீட்டுக்குப் பொய்யான ஒரு காரணம் சொல்லி அழைத்து வருகிறாள். கணவன் குழந்தைகள் அவனோடு எப்படிப் பழகுகிறார்கள் என்று உன்னிப்பாகக் கவனிக்கிறாள். இப்ராகிம் அவர்கள் முன்னால் அவளோடு ஒரு வார்த்தை அதிகம் பேசுவது இல்லை. உரிமை எடுத்துக்கொள்வது இல்லை. ஆகவே, அந்த நாடகம் அவளுக்குப் பிடித்திருக்கிறது.

அவனோடு ஓர் உணவகத்தில் சேர்ந்து உணவு அருந்திக்கொண்டு இருக்கும்போது மகள் பார்த்துவிடுகிறாள். அன்று இரவே வீட்டுக்கு உண்மை தெரிந்துவிடுகிறது. 16 வயது மகன் அம்மாவின் கள்ளக்காதல் தனக்குப் பிடிக்கவில்லை என்று திட்டுகிறான். அம்மா இப்படி ஒரு துரோகம் செய்பவளாக மாறுவாள் என்று எதிர்பார்க்கவில்லை என்று மகள் கத்துகிறாள். கணவன் மட்டும் அமைதியாக ஜப்ராவிடம், 'உனக்கு அவனைப் பிடித்திருக்கிறதா' என்று கேட்கிறான். அவள் குழப்பத்துடன் ஆமோதிக்கிறாள்.

சிறிது வெளிச்சம்! : எப்படிக் கடந்து செல்வது? -எஸ்.ராமகிருஷ்ணன் - 45

அவனோடு இரண்டு நாள் இருந்து பார். அதன் பிறகு இந்த உறவைத் தொடர்வதா... வேண்டாமா என்று முடிவு செய்யலாம் என்று பிள்ளைகளின் கோபத்தை மீறி அவளை இப்ராகிமைச் சந்திக்க அனுப்பிவைக்கிறான். அவள் போவதா... வேண்டாமா என்று குழம்புகிறாள். மறுநாள் இப்ராகிமைத் தேடிப் போகிறாள்.

அவனது உறவைப்பற்றித் தன் கணவனிடம் சொல்லிவிட்டதாகத் தெரிவிக்கிறாள். இப்ராகிம் கத்துகிறான். அவள் தன்னை ஏமாற்றி நடிப்பதாகக் கூச்சலிடுகிறான். ஒரே நாளில் அவனது இயல்பும் கோபங்களும் விருப்பு வெறுப்புகளும் அவளுக்குப் புரிந்துவிடுகிறது. அவன் தான் நினைத்தது போன்றவன் இல்லை என்று உணர்ந்துகொள்கிறாள். அன்று இரவே தன் வீட்டுக்குத் திரும்பிவிடுகிறாள். கணவன் அவளை ஆறுதல்படுத்துவதுபோலச் சொல்கிறான்.

'திருமணத்துக்குப் பிறகு ஏதோ ஒரு வயதில் ஆணோ, பெண்ணோ திடீரெனக் காதல்கொள்வது இயல்பானதே. அதற்குக் காரணம், நம்மோடு கூடவே இருப்பவள்தானே என்று நாம் கண்டுகொள்ளாமல் விடுவதுதான். உண்மையில் புறக்கணிப்பும் ரசனை இன்மையும்தான் இன்னொருவனை அந்த இடத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.

திடீரென உருவாகும் உறவுக்கான ஆதாரக் காரணங்கள் கணவனோ, மனைவியோ ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்துகொள்ளாமை. பாலுறவில் நாட்டமின்மை, ரசனையற்று இருப்பது. பாராட்ட மறுப்பது, அங்கீகாரமற்று தேவையற்ற எரிச்சலும் கோபம்கொள்வதும் போன்றவையே. உன்னிடத்தில் நான் இருந்தாலும் இப்படித்தான் நடந்துகொண்டு இருப்பேன். உண்மையில் நீ என் புறக்கணிப்பின் குற்றத்தைச்

சிறிது வெளிச்சம்! : எப்படிக் கடந்து செல்வது? -எஸ்.ராமகிருஷ்ணன் - 45

சுட்டிக்காட்டி இருக்கிறாய். இதற்கு மேல் இதில் எதுவும் இல்லை. நீ போய் உறங்கு' என்று அவளைப் படுக்கைக்கு அனுப்பிவைக்கிறான். என்பதோடு கதை முடிகிறது.

எத்தனையோ நடுத்தர வயது ஆண் - பெண்களின் வாழ்வில் நடந்துள்ள, ஆனால் வெளியே பகிர்ந்துகொள்ளப்படாத காதல் வலியை இந்தக் கதை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறது. பலவீனமும் தடுமாற்றமும் மனித இயல்புகளில் ஒன்றுதான். அதை எதிர்கொள்வதும் தீர்த்துக்கொள்வதிலுமே பிரச்னைகள் உருவாகின்றன.

டுத்தர வயது மனிதனின் காதலை மிக ஆழமாகவும் வலியோடும் சொல்கிறது 'DISGRACE' திரைப்படம். இது நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஜெ.எம்.கூட்ஸின் நாவலில் இருந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. டேவிட் லூரி 50 வயதைக் கடந்த ஆங்கிலப் பேராசிரியர். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். விவாகரத்து ஆனவர். ஆகவே, தனித்து வாழ்கிறார். ஒரு மழை நாளில் பல்கலைக்கழக வளாகத்தின் நுழைவாயிலில் மெலனி என்ற மாணவியைச் சந்திக்கிறார் லூரி. அவள் அவரது இலக்கிய வகுப்பில் படிப்பவள். அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். தன்னுடன் இரவு தங்கும்படியாகச் சொல்கிறார். அவள் மறுக்கிறாள். தொடர்ந்து அவளுடன் பேசிப் பேசி அவளை ஈர்க்கிறார்.

முடிவில் ஒருநாள் பெண்களின் அழகு உலகத்துக்குப் பகிர்ந்து தருவதற்காக அளிக்கப்பட்டது. அது உனக்கு மட்டுமே உரிமையானது இல்லை. உன் அழகை நான் அறிய வேண்டாமா என்று கவித்துவமாகப் பேசி அவளை அடைந்துவிடுகிறார். 50 வயதில் தனக்குள் உருவான அந்தக் காதலை லூரி தொடர விரும்புகிறார். அவளோ அவர் தன்னைத் தந்திரமாகப் பயன்படுத்தி உடலுறவு கொண்டுவிட்டதாகவே உணர்கிறாள். இதைப்பற்றித் தனது நண்பனிடம் ஆத்திரப்படுகிறாள் மெலனி.

அவன் மறுநாள் பேராசிரியரை அவரது அறையில் சென்று மிரட்டி வருகிறான். அந்த மிரட்டல் லூரிக்கு மெலனி மீதான காதலை அதிகப்படுத்துகிறது. அவள் பரீட்சைக்கு வராதபோதும் அவளுக்கு மதிப்பெண் போடுகிறார். விலகி விலகிச் செல்லும் அவளை எப்படியாவது தன்வசமாக்க முயல்கிறார். ஆனால், நிலை கைமீறிப் போய்விடுகிறது. அவரைக் காமவெறி பிடித்த பேராசிரியர் என்று அடையாளம் காட்டுகிறாள் மெலனி. விசாரணை நடைபெறுகிறது. மாணவியைப் பலாத்காரம் செய்துவிட்டார் என்ற குற்றசாட்டு பெரிதாகிறது.

விசாரணையின்போது லூரி குற்றத்தை ஒப்புக்கொண்டு பதவி விலகுகிறார். இனி, அந்த ஊரில் இருந்தால் அவமானம் தன்னைப் பின்தொடரும் என்று மகள் லூசியைத் தேடிப் போகிறார். ஆப்பிரிக்காவின் சிறு நகரில் தனித்து வாழும் அவள், அப்பாவை வரவேற்றுத் தன்னுடன் இருக்கச் சொல்கிறாள்.

ஒருநாள் மூன்று உள்ளூர் இளைஞர்கள் லூரியை அடித்துப்போட்டு அவர் கண் முன்னால் மகளை கதறக் கதறக் கற்பழிக்கிறார்கள். அதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. காவல் துறையில் புகார் செய்யப் போகிறார். மகளோ, தனக்கு நடந்ததைப்பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று தடுக்கிறாள். இது அநியாயம் என்று அப்பா மிகவும் கோபப்படுகிறார். நான் இங்கேயே வாழ்கிறவள். இவர்களைப் பகைத்துக்கொண்டு என்னால் வாழ முடியாது. அதைப் புரிந்துகொள்ளுங்கள் என்று மகள் கத்துகிறாள்.

சிறிது வெளிச்சம்! : எப்படிக் கடந்து செல்வது? -எஸ்.ராமகிருஷ்ணன் - 45

இயலாமையும் அவமானமும் அவரை நிலைகுலையச் செய்கிறது. பின்னொரு நாள் மகள் அந்தக் கற்பழிப்பு காரணமாகத் தான் கர்ப்பமாகிவிட்டதாக அப்பாவிடம் சொல்கிறாள். அந்தக் கர்ப்பத்தை அழித்துவிடும்படி லூரி மன்றாடுகிறார். பெண்களுக்குக் குழந்தை என்பது ஓர் உயிர். அதன் தகப்பன் யார் என்பது பெரிய விஷயம் இல்லை என்று மகள் மறுத்துவிடுகிறாள்.

தனது பாலியல் வேட்கைக்காக மெலனியின் வாழ்வில் விளையாடிய குற்றம் லூரியை உறுத்த ஆரம்பிக்கிறது. அந்தப் பெண்ணின் வீட்டினைத் தேடிப் போகிறார். மெலனியின் அப்பாவிடம் தனது முறைகேடான செயலுக்காக மன்னிப்புக் கேட்கிறார். அவளது அம்மாவின் முன்பாக மண்டியிட்டுத் தனது தவறுக்காக வருந்துவதாகச் சொல்லி, மன்னிக்கும்படி மன்றாடுகிறார். அவர்கள் அவரை மன்னிக்கவே இல்லை.

நடுத்தர வயதின் காதல், அவமானத்தை மட்டுமே உருவாக்கக்கூடியது. அது ஒரு தற்கொலை முயற்சி போன்றது. தனது அன்பு உலகால் புரிந்துகொள்ளப்பட முடியாத மாபெரும் மன நெருக்கடி என்று அழுது ஓய்கிறார். முடிவில் தான் நேசித்த நாயைத் தானே கொன்றுவிட்டுத் தனியே அடையாளமற்று வாழப் புறப்பட்டுப் போகிறார்.

நடுத்தர வயதில் ஏற்படும் காதல் வலி சொற்களால் ஆறுதல்படுத்த முடியாதது. அது அணையாத நெருப்புபோல நமக்குள் உள்ள காதலின் மிச்சத்தால் உருவாக்கப்படுகிறது. அதைப் புரிந்துகொள்ளவும் சிக்கல் இன்றித் தீர்த்துக்கொள்ளவும் திறந்த மனதும் பக்குவமும் நிஜமான அக்கறையும் வேண்டி யிருக்கிறது. அது இல்லாமல்போனதே இன்றுள்ள உறவுச் சிக்கல்களுக்கான முக்கியக் குறைபாடு ஆகும்!

பார்வை வெளிச்சம்

சிறிது வெளிச்சம்! : எப்படிக் கடந்து செல்வது? -எஸ்.ராமகிருஷ்ணன் - 45

அமெரிக்காவைச் சேர்ந்த ஜூலியா பட்டர்பிளை ஹில்ஸ் ஒரு சுற்றுச்சூழல் போராளி. 180 அடி உயரமும் 1,500 வருடப் பழமையான ரெட்வுட் மரம் ஒன்றை பசிபிக் மர கம்பெனியினர் வெட்ட இருக்கிறார்கள் என்று அறிந்த ஜூலியா, அந்த மரத்தில் ஏறிக்கொண்டு 738 நாட்கள் மரத்திலேயே தங்கியிருந்து, அதை வெட்டவிடாமல் காப்பாற்றி இருக்கிறார். மரக் கிளையில் தங்கும் இடம் அமைத்துக்கொண்டு அங்கேயே படுத்து உறங்கி, படித்து, உரையாற்றித் தனது எதிர்ப்பு உணர்வை உலகுக்குப் புரியவைத்து இருக்கிறார் இந்த இயற்கைப் போராளி!

 
சிறிது வெளிச்சம்! : எப்படிக் கடந்து செல்வது? -எஸ்.ராமகிருஷ்ணன் - 45
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! : எப்படிக் கடந்து செல்வது? -எஸ்.ராமகிருஷ்ணன் - 45