என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

''வள்ளலாரும் ஆயுதம் ஏந்துவார்!''தங்கர்பச்சான்

##~##
''த
மிழ் மண்தான் எனது மண்; தமிழன் வாழும் ஊரெல்லாம் எனது ஊர். இருந்தும் நான் பிறந்த இடத்தைப் பற்றி எழுதச் சொன்னதால்தான், இதனை எழுதுகிறேன். கலைக்கும், சிந்தனைக்கும், போராட்டத்துக்கும், புரட்சிக்கும் வித்திட்ட தென் ஆற்காடு மண், இன்று வளங்கள் நிறைந்திருந்தும் மிகவும் பின் தங்கிய மாவட்டமாக இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த அதே கடலூர்தான், அதே பண்ருட்டிதான்,அதே விழுப்புரம்தான், அதே சிதம்பரம்தான், அதே விருத்தாசலம்தான்.... ஆனால், இன்று அந்த நகரங்கள் பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன!

15 வயது வரையில் ஊரோடு வாழ்ந்தேன். சென்னைக்கு இடம்பெயர்ந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், இன்றும் என்னையும், எனது படைப்புகளையும் இயக்கிக்கொண்டு இருப்பது பத்திரக்கோட்டை கிராமத்தில் அனுபவித்த இளமைப் பருவம்தான்.

என் ஊர்!

உயிர்களை நேசிக்கக் கற்றுக்கொடுத்த வள்ளலாரும், எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும், கவிஞர் பழமலயும், போராட்டச் சிந்தனையை உருவாக்கிய புலவர் கலியபெருமாளும், போராளி தமிழரசனும், இன்று தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய, எங்களுக்கெல்லாம் அரசியல் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கக்கூடியமருத்துவர் ராமதாஸும், திருமாவளவனும் பாடம் படித்தது இந்த மண் சார்ந்த மக்களிடத்திலும், உயிர்களிடத் திலும்தான்.

அவ்வளவு பேர் இருந்தும் எங்களின் கலைகளைக் காப்பாற்ற யாராலும் முடியவில்லை. 'வாடிய பயிரைக் கண்டு வருந்திய’ வள்ளலார் இன்று இருந்திருந்தால், அவரும் நிச்சயம் ஆயுதம் ஏந்தியிருப்பார். ஈழத் தமிழனின் இன ஒழிப்பும், அகதிகளான இடம் பெயர்வும்தான் உங்களுக்குத் தெரியும். அவை எல்லாம் நம் எதிரிகளால் நிகழ்த்தப்பட்டவை. சொந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து, அவர்களை நோயாளிகளாக்கி கொஞ்சம் கொஞ்ச மாகக் கொன்றும், சொந்த மண்ணுக்குள்ளேயே அகதிகளாக்கும் செயலையும் செய்துகொண்டு இருக்கும் நம் இந்திய அரசாங்கத்தையும், அதற்குத் துணையாக நிற்கும் மாநில அரசாங்கத்தையும் நம் நாட்டில்தான் காண முடியும். என்று நெய்வேலியில் நிலக்கரி கண்டு பிடித்தானோ, அன்று தொடங்கிய துயரம், எல்லாமும் முடிந்த பின்தான் முடிவுக்கு வரும்போல் இருக்கிறது. நிலக்கரி சுரங்கத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வரைபடத்தில் இருந்தே நீக்கப்பட்டு காணாமல் போய்விட்டன. அந்த மக்கள் எல்லாம் காலங்காலமாக வாழ்ந்த வீடுகளையும், நிலங்களையும், கோயில் குளங்களையும்

என் ஊர்!

விட்டுவிட்டு அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டார்கள். 24 மணி நேரமும் நிலத்தடி நீரை உறிஞ்சி கரிப் புகையைக் கக்கிக் கொண்டு இருக்கும் புகை போக்கிக் குழாயினைப் பல மைல்களுக்கு அப்பால் இருந்து, வேதனை யோடு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் தங்களுக்குத்தான் வேண்டும் என போட்டி போட்டுக்கொண்டு போராட்டத்தில் குதித்த விவசாயிகள், அடிமண் கலந்த தண்ணீர் பாய்ச்சியதால் நிலங்கள் வளம் இழந்து விவசாயத்துக்குப் பயன்படாமல் பாழாகிப்போனதால், அந்தத் தண்ணீரை நிறுத்தச் சொல்லி இப்போது போராடிக்கொண்டு இருக்கிறார்கள். 20 கிலோ மீட்டர் வரைக்கும் கரித்தூள் படிவதால் விவசாயம் முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டது. ஆர்டீசியன் ஊற்று சுரந்த பூமியில், இன்று மின்சாரம் இருந்தால் மட்டுமே குடிநீருக்கே தண்ணீர் என்கிற நிலை!

முந்திரியில் வருமானம் இல்லை என இரண்டு மாதங்களுக்கு முன் 26 ஏக்கர் முந்திரித் தோப்பை அழித்து விவசாயம் செய்யத் தொடங்கினேன். இவை ஒரு புறம் இருக்க, தமிழ்நாட்டில் ஒரு போபால் இருப்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும் ஆபத்தை விளைவித்துக்கொண்டு இருக்கும் கடலூர் சிப்காட் பகுதிதான் அது. அந்தப் பகுதியைக் கடப்பதற்கு முன் நாற்றத்தால் மூச்சடைத்து உயிர் உதறிப் போவீர்கள். உலக சுகாதார அமைப்பால் தடை செய்யப்பட்ட தொழிற் சாலைகள் உள்ளே நுழைந்துவிட்டன.

உழவனாகவும் தொழில் செய்துகொண்டு இருக்கிற நான், இப்போது அடிக்கடி என் கிராமத்துக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. சென்னையில் இருந்து விக்கிரவாண்டிக்கு 150 கி.மீ. செல்ல இரண்டு மணி நேரம்தான். விக்கிரவாண்டியில் இருந்து பண்ருட்டி வழியாக 40 கி.மீ பயணித்து, என் கிராமமான பத்திரக்கோட்டையை அடையவும் இரண்டு மணி நேரம்தான். அந்த அளவுக்கு 'நேர்த்தியான’ சாலை வசதி. இந்தப் பகுதி மக்கள் தங்களுக்குள் கனன்றுகொண்டு இருக்கும் கோபத்தைத் தீர்த்துக்கொள்ளும் ஒரே கருவியாகத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.

இத்தனை பிரச்னைகள் இருந்தும் என் மண்ணை மறக்காமல் 'செம்புலம்’ எனும் பெயரிட்ட என் சென்னை வீட்டில் நான் காலம் தள்ளுகிறேன்!''