நம்பிக்'கை'யே வாழ்க்கை!
##~## |
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி மலை அடிவாரத்தின் காட்டுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு குடிசைதான் அழகேசனின் இருப்பிடம். எட்டா வது படிக்கும் வரை ஓடியாடி விளையாடியவருக்கு கரும்பு மெஷினில் அடிபட்டு இரண்டு கை களும் முழங்கையில் இருந்து வெட்டுப்பட்டுவிட்டன. இரண்டு கைகளையும் இழந்து ஊருக்குள் வந்தவர், அடியோடு முடங்கி விடாமல், 'மீண்டும் ஏன் நம்மால் எழுந்து நடக்க முடியாது, சைக்கிள் ஓட்ட முடியாது, டிராக்டர் ஓட்ட முடியாது?’ என நம்பிக்கை துணைகொண்டு செயல்படத் துவங்கினார். வாழ்க்கை வசப்படாமலா போகும்? தனக்கென மிஞ்சியிருந்த நிலத்தில் விவசாயம் மேற்கொண்டு யாரையும் சார்ந்திருக்காமல் செயல்படத் துவங்கினார். கைகள் இழந்த நிலையிலும், அவரை முழு மனதோடு மணம் முடித்தார் செல்வி. தம்பதிக்கு இப்போது சௌமியா, சமீதா, சாரதி என மூன்று குழந்தைகள்.

முழங்கை வரையிலான பகுதியைக்கொண்டே டிராக்டரை இயக்குகிறார் அழகேசன். அது மட்டுமல்லாமல்; இரண்டு வயல் களுக்கு இடையில் வரப்பில் கெத்தாக பைக் ஓட்டிக் காட்டுகிறார். அதுவும் அழகேசனை நம்பி பைக்கில் ட்ரிபிள்ஸ் அடிப்பதற்கெல்லாம் ஊரில் ஆட்கள் இருக்கிறார்களாம்!
வாழ்க்கை என்றால் வாழ்வது மட்டுமல்ல... அர்த்தத்துடன் வாழ்வது என்பதை உணர்த்துகிறார் இந்த அழகேசன்!
- அற்புதராஜ், படங்கள்: பா.கந்தகுமார்