''ஒருநாள் வேலை இல்லாம இருந்தாக்கூட பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு.''
''ஒரு சண்டே கிடைச்சா நிம்மதியாத் தூங்கலாம்னு தோணுது. ஆனா, மத்தியானத்துக்கு மேல என்ன செய் யுறதுன்னே தெரியலை!''
வேலை இல்லாத நேரங்களில், வழக்கமான பணி களில் இருந்து ஒதுங்கியிருக்கும் நாட்களில் 'என்ன செய்வது என்றே தெரியவில்லை' என்பது பலருக்கும் இருக்கும் பிரச்னை. இன்னும் சிலருக்குத் தூங்கி எழுந்ததுமே படபடப்பாக இருக்கும். 'அடடா, இவ்வளவு நேரம் தூங்கிட்டேனே... இந்த நேரத்துக்கு அதைச் செய்திருக்கலாமே, இதைச் செய்திருக்கலாமே' என்று கவலை வரும்.
நண்பனோடு போனில் பேசும்போது, டி.வி.பார்க்கும் போது, சினிமாவுக்குப் போகும்போது, உறவினர்வீட்டுக் கல்யாணத்தில் உட்கார்ந்திருக்கும்போது, பஸ்சுக்காகக் காத்திருக்கும்போது... இப்படி நிறைய நேரங்களில் மன சுக்குள் ஓரமாக ஒரு கவலை வரும். 'நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டு இருக்கோமோ?'
இந்தப் பதற்றம் ஒரு வகையில் நியாயமானதுதான். அதற்குக் காரணமும் உண்டு. வழக்கமாகச் செய்யவேண்டிய வேலைகளுக்கு என்று ஒரு செயல் திட்டம் இருப்பதைப்போல, நமக்குப் பிடித்தமான விஷயங்களைத் தேர்வுசெய்து, அதனைத் தொடர்ந்து செய்துகொண்டு இருக்க ஒரு திட்டம் இருப்பது இல்லை.படிப் பது, பள்ளிக்கூடம் போவது, கல்லூரிக்குப் போவது, வேலைக்குப் போவது, டியூஷன் போவது... இவை தவிர, தனக்குப் பிடித்தமான விஷயம் என்ற ஒன்றைப் பலரும் அடையாளம் கண்டுகொள்வது இல்லை.
உங்களுக்கே உங்களுக்கு என்று பிடித்த விஷயம் எது? கொஞ்சம் ஆழமாக யோசியுங்கள். வெகுசிலரைத் தவிர, பலரும் அதை இன்னும் கண்டறியவே இல்லை என்பதுதான் உண்மை. பிடித்த பொழுதுபோக்கு...ஞாபகத்தில் இருக்கலாம். வழக்கமான வேலைகளைத் தவிர, பிடித்த இன்னொரு விஷயம் எது? உதட்டைப் பிதுக்கி 'ம்ஹ§ம்... ஒண்ணும் தோணலை' என்பதேபலரது பதிலாக இருக்கும்.
மனித மனங்கள் பற்றிய ஆழமான ஆய்வு ஒன்று... 'தனக்குப் பிடித்தமான விஷயங்களைக் கண்டறிந்து அதனைச் செய்யாமல் இருப்பவர்கள், வழக்கமாகச்செய் யும் வேலைகளையும் கடனே என்று செய்கிறார்கள்' என்கிறது.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மனத் திருப்தி, சுயசந்தோஷம் என்கிற அடிப்படையில் ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபாட்டோடு இருக்கப் பழகுவது இன் றைய பரபரப்பான வாழ்க்கை முறையில்மனசைலேசாக்கு வதற்கு அவசியம்.
அது தேடித் தேடி ஸ்டாம்ப் சேகரிப்பதாக இருக்க லாம்; பழைய நாணயங்களைப் பத்திரப்படுத்துவதாக இருக்கலாம்; ஓவியம், கவிதை, இசை, மலையேறுதல், கிராமங்களுக்குப் பயணித்தல், டென்னிஸ் விளையா டுதல்... இப்படி ஏதோ ஒன்று. ஆனால், அது உங்களுக் காக, உங்கள் சுய சந்தோஷத்துக்காகச் செய்கிற விஷ யமாக இருக்க வேண்டும்.
உங்களை மறந்து, உங்களை உங்களுக்குள் தேடுகிற லயிப்பும் வாஞ்சையும் அதற்குள் இருக்க வேண்டும். இப்போது இன்னமும் அழகாக யோசியுங்கள். அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா உங்களிடம்?
கல்வியின் நோக்கம் ஒன்றாக இருந்தாலும், இன் றைக்கு யதார்த்தம் வேறாகத்தான் இருக்கிறது. பள்ளிக் கூடத்தில் படிப்பது, கல்லூரியில் சேர; கல்லூரியில் சேருவது, வேலையைப் பெற; வேலையில் இருப்பது, கல்யாணம் செய்ய; கல்யாணம் பண்ணுவது, குடும்பம் தழைக்க... இப்படி ஒவ்வொரு காரியமும் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கிறது. இதில் உங்களுக்கே உங்களுக்கு என்று வாழ்ந்தது எப்போது?
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தி, தனது ஊழியர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி யிருந்தார். 'இன்றைய இளைய தலைமுறை வேலையே வாழ்க்கை என்று வாழ்கிறது. 'வாழ்தல்' என்பது வேலை பார்ப்பது மட்டுமல்ல' என்று அழகாகச் சொல்லியிருந்தார் அவர்.
சென்னையின் மிகப் பெரிய கட்டடங்களில் நள்ளிர வுக்குப் பிறகும், பணி நேரத்துக்குப் பிறகும் விளக்குகள் எரிந்துகொண்டு இருக்கின்றன. இளைஞர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை களிலும் இவர்கள் பணி தொடர்கிறது. வீட்டில் இருப் பதற்குப் பதிலாக ஆபீசுக்குப் போனால் ஏதாவது செய்யலாமே என்று, எப்போதும் வேலைக்குள்ளேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். காரணம், வேலையைத் தவிர செய்வதற்கு என்று வேறு எதுவும் அவர்களுக்குத் தெரி யாது. அலுவலகம், வேலை இதைச் சுற்றியே இவர் களின் வாழ்க்கை நடக்கிறது. 'இரண்டு நாள் லீவில் என்னதான் செய்வது? அதான் ஆபீசுக்கு வந்துடு றோம். விடுமுறை நாளில் இன்னமும் ரிலாக்ஸ்டாக வேலை பார்க்கலாம், தெரியுமா!' என்று விளக்கமும் தருவார்கள்.
|