மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - நீங்கள் அன்பளித்தது எப்போது? -எஸ்.ராமகிருஷ்ணன் - 37

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - நீங்கள் அன்பளித்தது எப்போது? -எஸ்.ராமகிருஷ்ணன் - 37

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - நீங்கள் அன்பளித்தது எப்போது? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 37
சிறிது வெளிச்சம்! - நீங்கள் அன்பளித்தது எப்போது? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 37
நீங்கள் அன்பளித்தது எப்போது?
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! - நீங்கள் அன்பளித்தது எப்போது? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 37
சிறிது வெளிச்சம்! - நீங்கள் அன்பளித்தது எப்போது? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 37

திருமண நாள், பிறந்த நாள், பண்டிகை... இது அல்லாமல் வேறு எப் போதாவது, யாருக்காவது நீங்கள் பரிசு அளித்து இருக்கிறீர்களா? எந்த முன்பரிச் சயமும் இல்லாத எவராவது உங்களுக்காக ஏதாவது பரிசு அளித்து இருக்கிறாரா? உங்கள் வீட்டு வாசலில் என்றாவது ஒரு நாள் அழகான பரிசு ஒன்று, யார் அனுப்பி யது என்று தெரியாமல் கிடைத்திருக்கிறதா? நம்மில் பெரும்பான்மையினர் இந்த மூன்று கேள்விக்கும், இல்லை என்றுதான் பதில் சொல்வோம்.

கல்யாண வீட்டுக்குப் போகும் நாளில்தான் ஏதாவது பரிசு வாங்கிப் போக வேண்டும் என்ற எண்ணமே ஏற்படுகிறது. அதற்காக அதிக கவனம் எடுத்துக்கொள்வது இல்லை. கடிகாரம், தேநீர்க் குவளைகள், போட்டோ ஃப்ரேம், பேனா, பொம்மை அல்லது குக்கர், மிக்ஸி இதைத் தவிர எதையும் எவரும் வாங்கித் தருவது இல்லை.

அடுத்தவருக்கான பரிசு என்பதில், எப்போதுமே நமது அக்கறை இரண்டாம்பட்சம்தான். இதையே உங்களுக்காக ஒரு பரிசு தேர்வு செய்துகொள்ளுங்கள் என்று எவராவது சொன்னால், எவ்வளவு கவனமாக, தேடிச் சலித்து விரும்பிய தைத் தேர்வு செய்வோம்! இன்று பரிசு தருதலை வெறும் சடங்காக்கிவிட்டோம். நமது குழந்தைகளுக்குக்கூட அவர் களின் பிறந்த நாள் தவிர, வேறு நாட்களில் நாம் பரிசு அளிப்பது இல்லை. அப்போதும்கூட அவர்களது விருப்பத்தைப் பெரும்பாலும் கேட்பதே இல்லை.

சமீபத்தில் என் நண்பர் ஒருவர், கிராமத்தில் வசிக்கும் தன் வயதான தாய்க்கு ஒரு செல்போன் பரிசாகத் தந்தார். அம்மாவோ, 'எனக்கு எதுக்கு செல்போன்? இதில் எப்படிப் பேசுவது... எனக்கு வேண்டாம்!' என்று மறுத்தார். 'வெச்சுக்கோம்மா... இருக்கட்டும்!' என்று நண்பர் தந்துவிட்டு ஊர் திரும்பியதும், அம்மாவின் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. இத்தனைக்கும் அவர் செல்போனை உபயோகிக்கவே இல்லை. அதை இயக்கக்கூடக் கற்றுக்கொள்ளவில்லை. ஆனால், போகிற வருகிறவர்களிடம் அதைக் காட்டிக் காட்டி அடைந்த சந்தோஷம் அளவில்லாதது. அத்துடன், 'நண்பரின் அப்பா இறந்துபோன இந்த ஆறு வருடத்தில், யாரும் ஒரு போதும் தனக்காக எதையும் வாங்கித் தந்ததே இல்லை; இதுவே தனக்குக் கிடைத்த முதல் பரிசு' என்று அம்மா கண்ணீர்விட்டிருக்கிறார்.

'வருடந்தோறும் புத்தாடை வாங்கித் தருகிறேன்; மாதம் பணம் அனுப்பிவிடுகிறேன்; இதை எல்லாம் அம்மா பெரிதாக நினைக்கவே இல்லை. இந்தப் பரிசு தந்தசந்தோஷம் அவரிடம் முழுமையாக வெளிப்படுகிறது. ஏன் அப்படி?' என்று நண்பர் என்னிடம்கேட்டார்.

சிறிது வெளிச்சம்! - நீங்கள் அன்பளித்தது எப்போது? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 37

நாம் எப்போதும் ஒரு பரிசினைப் பெறும்போது வயதை மறந்து குழந்தையாகிவிடுகிறோம். அதிலும் வயது அதிகமாக அதிகமாக பரிசை எதிர்பார்ப்பதும் அதிகமாகிறது. ஆனால், அதைக் காட்டிக்கொள்வது இல்லை. பிரிக்கப்படாமலேயே பரிசை தன் முன் வைத்துப் பார்த்துக்கொண்டே இருக்கும் முதிய வர்களைக் கண்டிருக்கிறேன். அது ஒரு நம்பிக்கை. நாம் அவர்கள் மீது வைத்துள்ள அன்பின் வெளிப் படையான வடிவம். 'பரிசு கொடுங்கள். உங்களுக்குப் பரிசு கிடைக்கும்' என்றேன்.

தமிழின் மிக முக்கியச் சிறுகதை ஆசிரியரான கு.அழகிரிசாமி 'அன்பளிப்பு' என்றொரு கதைஎழுதி இருக்கிறார். மனச்சாட்சியை உலுக்கும் கதை அது. பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்யும் ஓர் எழுத்தாளர், தன் தாயுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டுக்கு அருகில்நாலைந்து சிறுவர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் எந்த நேரமும் எழுத்தாளர் வீட்டில் விளையாடுவது, கதை பேசுவது, சதுரங்கம் ஆடுவது வழக்கம். அவருக்கும் குழந்தைகள் என்றால் உயிர். அதில் 13 வயது சுந்தரராஜனும், ஒன்பது வயது சித்ராவும் அவருக்குப் பிடித்தமான குழந்தைகள். இருவரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் என்பதால் அதிகம் செல்லமாக வளர்க்கப்பட்டவர்கள். இந்தக் குழந்தைகளுக்கு மாறாக, சாரங்கன் என்ற சிறுவனும் பிருந்தா என்ற சிறுமியும் ஏழை வீட்டுப் பிள்ளைகள். அவர்களும் தினமும் விளையாட வருகிறார்கள்.

இதில், சாரங்கன் மிக கவனமாக நடந்துகொள்ளும் சிறுவன். எதையும் வாய்விட்டுக் கேட்க மாட் டான். ஒருநாள் அவர்கள் விளையாடும்போது, அலமாரியில் இருந்த புத்தகங்களைத் தள்ளி விடுகிறார்கள். எங்கே எழுத்தாளர் கோபித்துக் கொள்வாரோ என்று பயந்து நிற்கையில், அவர் அது ஒன்றும் பெரிய தவறு இல்லை என்றதோடு, தான் படித்து முடித்துவைத்திருந்த புத்தகத்தில் சிலவற்றை எடுத்து 'சித்ராவுக்கும் சுந்தரராஜனுக்கும் தனது அன்பளிப்பு' என்று கையெழுத்துப் போட்டுப் பரிசாகத் தருகிறார்.

அதை கண்ட பிருந்தா, 'மாமா! எனக்கும் ஒரு பரிசு வேண்டும்!' என்று வாய்விட்டுக் கேட்கிறாள். அவரோ, 'சித்ரா படித்த பிறகு அதை வாங்கிக் கொள்' என்கிறார். பிருந்தாவுக்கு மிக ஏமாற்றமாகி விடுகிறது. அந்த ஏக்கத்திலேயே மறுநாள் அவளுக்குக் காய்ச்சல் வந்துவிடுகிறது. அப்போதும் அவர் குழந் தைகளிடம் பேதம் காட்டுவதைப்பற்றி யோசிக்கவே இல்லை. சில நாட்களில் புது வருடம் துவங்குகிறது. அழகான சிவப்பு நிற டைரிகள் இரண்டு வாங்கி வந்து சித்ராவுக்கும்சுந்தரராஜனுக்கும் பரிசாகத் தருகிறார். சாரங்கனுக்குப் பரிசு தரவில்லை. அவன் ஆதங்கத்துடன் எழுத்தாளரைப் பார்த்தபடியே இருக்கிறான். வாய்விட்டுக் கேட்க அவனுக்கு மனம் வரவில்லை. அங்கிருந்து வெளியேறிவிடுகிறான்.

மறுநாள், யாரும் இல்லாத நேரம் பார்த்து வரும் சாரங்கன், தன் பாக்கெட்டில் இருந்து ஒரு டைரியை எடுத்து அவர் முன் நீட்டுகிறான். அது அவர் சித்ராவுக்கு தந்தது போன்ற அதே டைரி. சாரங்கன் தான் விலைக்கு வாங்கியதாகச் சொல்கிறான். பிறகு தலைகவிழ்ந்தபடியே 'சாரங்கனுக்கு அன்புப் பரிசு' என்று கையெழுத்துப் போட்டாவது கொடுங்கள் என்று கேட்கிறான். அது எழுத்தாளரது முகத்தில் அறைவதுபோல் இருக்கிறது என்று கதை முடிகிறது.

வருடத்துக்கு ஒரே ஒரு முறை ஏன் பிறந்த நாள் வரு கிறது, பல முறை வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கக்கூடியவர்கள் சிறுவர்கள். அதற்கு முக்கியக் காரணம், பரிசுகள். அந்த எதிர்பாராமை தரும் சந்தோ ஷம் அவர்களை உற்சாகமூட்டுகிறது. ஆனால், ஒரு குழந்தைக்குப் பரிசு கிடைத்து மற்றொரு குழந்தைக்குப் பரிசு கிடைக்காமல் போய்விட்டால், அவமானம் தாங்க முடியாமல் தேம்பி அழுகிறது. அதைச் சமாதானம் செய் வதுஎளிதானது இல்லை. இந்த மனப்பாங்கு பெரியவர் கள் ஆனாலும் மறைந்துவிடுவது இல்லை. மறைத்துக் கொள்ளப்படுகிறது; ஏளனம் செய்வார்களே என்று ஒளித்துக்கொள்ளப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் லண்டனில் உள்ள வணிக நிறுவனம் தனது புதிய கிளை ஒன்றினைத் துவங்கும்போது நகரில் உள்ள ஜேப்படித் திருடர்களைப் பயன்படுத்தி,

சிறிது வெளிச்சம்! - நீங்கள் அன்பளித்தது எப்போது? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 37

பயணிகளுக்குத் தெரியாமல் அவர்களது பாக் கெட்டில் தங்களது பரிசுப் பொருளைவைத்து விட்டார்கள். எதிர்பாராத பரிசைக் கண்ட மக்கள், அந்த நிறுவனத்தின் புதிய கிளை திறக் கப்படும் நாளில் பெருந்திரளாகக் குவிந்து சந்தோஷத்தைத் தெரிவித்தார்கள். வழிமுறை தவறாக இருந்தாலும் அந்த உத்தி, நிறுவனத் தின் வெற்றிக்குத் துணையாக இருந்தது.

ஏதாவது ஒரு காரணத்துக்காகக் கொடுக்கப்படும் பரிசு பெரிய விஷயம் இல்லை. மாறாக, எதிர்பாராத நிமிடத்தில் தரப்படும் பரிசே அரியது. அது அகவிருப்பத்தில் இருந்து உரு வாகிறது. உங்கள் மனைவிக்கு, குழந்தைகளுக்கு, நண்பர்களுக்கு, சக ஊழியர்களுக்கு என்று எதிர்பாராமல் ஒரு பரிசைத் தந்து பாருங்கள். அது அவர்களிடம் முன்னில்லாத மாற்றத்தை உருவாக்கும். ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் பத்து பேருக்காவது பரிசு தந்து பாருங்கள். அது சந்தோஷத்தை விதைப்பது போன்ற செயல். பின்னாளில் அதன் பலன் உங்களுக்கு வந்து சேரும்.

மைக் டாலின் இயக்கத்தில் ஹாலிவுட்டில் வெளியான 'ரேடியோ' (Radio) என்ற படம் அன்பு ஒரு மனிதனை எவ்வளவு மேம்படுத்தும் என்பதையும், அதற்குப் பரிசு தருதல் எவ்வளவு பெரிய வினையாற்றுகிறது என்பதையும்சுட்டிக் காட்டுகிறது.

ரேடியோ என்பது ஜேம்ஸ் ராபர்ட்டின் கேலிப் பெயர். பதின்வயதைச் சேர்ந்த அவன் மனவளர்ச்சி குன்றியவன். யாருடனும் ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டான். ஒரு தள்ளுவண்டியை வைத்துக்கொண்டு உபயோகமற்றதாகக் கருதி தூக்கி எறியப்படும் பொருள்களை சேகரித்துக்கொண்டு வருவது அவனது வேலை. ஒருநாள், அவன் மைதானம் ஒன்றின் அருகில் நின்று கால்பந்து விளையாட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தபோது, வேகமாக உதைக்கபட்ட பந்து வெளியே வந்து விழுகி றது. அதைத் தனக்கு வேண்டும் என்று எடுத்துவைத்துக்கொள்கிறான் ரேடியோ. பந்தை அவனே வைத்துக்கொள்ளட்டும் என்று கோச் ஜோன்ஸ் விட்டுவிடுகிறார்.

ஆனால், விளையாட்டு வீரர்கள் அவனைத் தனியே மடக்கிப் பிடித்து அடித்துப் பந்தைப் பிடுங்குகிறார்கள். பிறகு, அவன் கால் கையை கட்டி ஓர் அறையில் தள்ளிவிடுகிறார்கள். அவன் கத்திக் கூப்பாடு போடுகிறான். கோச் வந்து அவனை விடுவிக்கிறார். அவன்மீது அவருக்குப் பாசம் உருவாகிறது. மறுநாள் முதல் படிப்பதற்காக பள்ளிக்கூடத்துக்கும் ஓய்வு நேரங்களில் மைதானத்துக்கும் வந்து உதவி செய்ய வேண்டும் என்று அவனுக்கு உத்தரவிடுகிறார். அவன் வரத் துவங்குகிறான்.

ஒருநாள், புதிய ரேடியோ ஒன்றை அவனுக்குப் பரிசாகத் தருகிறார் கோச். அது தந்த உற்சாகம் அவனை மாற்றத் துவங்குகிறது. நமக்குப் பிடித்தமான பாடல்களைப் போட்டு உற்சாகப்படுத்துவதுதானே ரேடியோ கருவியின் வேலை! அது தனக்குப் பிடித்துஇருக்கிறது என்று ரேடியோவை எப் போதும் கையில் வைத்துக் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

தனது உடல் குறைபாடுகளை மீறி ரேடியோ எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கிறான். மற்றவர்களை தன்னால் முடிந்த அளவு உற்சாகப்படுத்துகிறான். யாரைப் பார்த்தாலும் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவிக்கி றான். அவனது புன்னகை அலாதியா னது என்பதை கோச் கண்டுகொள்கி றார். ஒவ்வொரு போட்டியின்போதும் அவன் தனது அணியின் வெற்றிக்காக கூச்சலிடுகிறான். வென்றவர்களை ஆரத்தழுவிப் பாராட்டுகிறான்.

சிறிது வெளிச்சம்! - நீங்கள் அன்பளித்தது எப்போது? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 37

ஒருநாள், ஃபுட்பால் அணியின் பிளேயர் ஒருவன், பெண்கள் குளியல் அறையில் உதவி கேட்டு யாரோ கூப்பிடுகிறார்கள் என்று ரேடியோவிடம் கூறுகிறான். அறியாப் பையனான ரேடியோ பெண்கள் குளியல் அறைக்குள் நுழைந்து விடவே, அது பெரிய பிரச்னையாகிறது. முடிவில் உண்மை தெரிந்து கோச் அந்த பிளேயரைத் தண்டிக்கிறார். தவறு தன்னுடையது என்று வருந்துகிறான் ரேடியோ.

அப்போது கிறிஸ்துமஸ் வருகிறது. விளையாட்டு வீரர்கள், பள்ளி நண்பர்கள் எனப் பலரும் ரேடியோவுக்குப் பரிசு தருகிறார் கள். ஒரு கார் நிறையப் பரிசு சேர்ந்துவிடுகிறது. மறுநாள் விடிகாலை அதை ஒரு தள்ளுவண்டியில் வைத்து ஒவ்வொரு வீடாகப் போய் அவர்களின் அடைத்த கதவின் முன் ஒரு பரிசை வைத்துவாழ்த்துச் சொல்லிப் போகிறான் ரேடியோ.

அதைக் கண்ட ரோந்து போலீஸ்காரர் ஒருவர் ரேடியோவைத் திருடன் எனச் சந்தேகம்கொண்டு கைது செய்து சிறையில் அடைக்கிறார். முடிவில் உண்மையைத் தெரிந்து அந்த போலீஸ்காரர், போலீஸ் காரிலேயே வீடு வீடாகப் போய் பரிசு தர ஏற்பாடு செய்கிறார். ரேடியோவைப் பள்ளியில் இருந்து விலக்க வேண்டும் என்று பள்ளி முடிவு செய்யும்போது 'உண்மையில் நாம் எதையும் அவனுக்கு கற்றுத் தரவில்லை. அவன்தான் நமக்கு நிறையக் கற்றுத் தந்திருக்கிறான். தனக்குக் கிடைத்த பரிசு மொத்தமும் மற்றவர்களுக்குத் தருவதற்கு பெரிய மனது வேண்டும். அது ரேடியோவிடம் இருக்கிறது' என்று ஜோன்ஸ் உணர்ச்சிவசப்பட்டுப் பாராட்டிவிட்டு, தான் கோச் வேலையைவிட்டு விலகிக்கொள்வதாக விடைபெறுகிறார்.

முடிவில், பள்ளிக்கூடம் ரேடியோவுக்கு கௌரவப் பட்டம் வழங்குகிறது. அவன் பள்ளியில் கால்பந்து பயிற்சியாளராக வேலைக்குச் சேர்கிறான். நிறைய பிளேயர்களை உருவாக்குகிறான். இது ஒரு உண்மைச் சம்பவத்தில் இருந்து உருவான கதை. ஒரு பரிசு ஒரு மனிதனின் வாழ்வைப் புரட்டிபோட்டுவிடும் என்பதையும், நாம் எவரைத் துச்சமாக நினைக்கிறோமோ அவர் நம்மைவிடப் பல நேரங்களில் உயர்வானவர் என்பதையும் இந்தப் படம் மிக அழ காக வெளிப்படுத்துகிறது. வாழ்வின் உண்மைகள் மிக எளிமை யானவை. அதை உணர்ந்துகொள்ள நாம் தவறிவிடுகிறோம் என்பதே நிஜம்!

இன்னும் பரவும்...

பார்வை வெளிச்சம்!

அமெரிக்காவில் 1996-ம் ஆண்டு, நான்கு வய தான அலெக்சாண்ட்ரா என்ற சிறுமிக்குப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்ப கட்ட சிகிச்சைகளில், அவள் அதிக நாள் உயிர் வாழ மாட் டாள் என்பது தெரிந்துவிட்டது. சிறுமியோ மனம் தளராமல் ஆரம்ப சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும், தன் வீட்டு வாசலில் எலுமிச்சை ஜூஸ் விற்கும் கடை திறந்தாள். அதன் முக்கிய நோக்கம், அதில் கிடைக்கும் பணத்தில், தன்னைப்போல புற்றுநோய் பாதித்த சிறுவர் களுக்கு உதவி செய்வது. அந்தஅக்கறையும் ஈடுபாடும் 2,000 டாலரை ஒரே வருடத்தில் வசூல் செய்து தந்தது. தன்னையத்த சிறுவர்களின் நலனுக்காக அதைச் செலவிட்ட அலெக்சாண்ட்ரா, நோய் முற்றி 2004-ம் ஆண்டு இறந்துவிட்டாள். ஆனால், அவள் துவக்கிவைத்த எலுமிச்சை ஜூஸ் கடைகள் உலகெங்கும் பரவி, இன்று சிறுவர்களைப் புற்றுநோயில் இருந்து காக்க உதவும் அரிய திட்டமாக வளர்ந்திருக்கின்றன. ஒரு சிறுமி முன்னெடுத்த காரியம், இன்று பல கோடி நிதி திரட்டி, உலகுக்கே வழிகாட்டிக்கொண்டு இருக்கிறது!

 
சிறிது வெளிச்சம்! - நீங்கள் அன்பளித்தது எப்போது? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 37
-
சிறிது வெளிச்சம்! - நீங்கள் அன்பளித்தது எப்போது? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 37