என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

''திமிங்கிலம் ஏன் சார் குண்டா இருக்கு?''

''திமிங்கிலம் ஏன் சார் குண்டா இருக்கு?''

##~##
ரும்பலகையில் எழுதி அழிக்கலாம். காலத்தால் சில நினைவுகளை அழிக்க முடியாது. அத்தகைய மறக்க முடியாத நினைவுகளைக் கையளிப்பதில் பள்ளிக்கூடத்துக்கு  முக்கியப் பங்கு உண்டு.

திருவண்ணாமலையில் இருந்து தண்டாரம்பட்டு செல்லும் வழியில் கொட்டையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இது. ஏழாம் வகுப்பு சி பிரிவில், ஸ்ரீதேவி டீச்சர் கணக்கு பாடம் நடத்திக்கொண்டு இருக்க... கடைசி வரிசையில் ஒரு மாணவன் அற்புதமாக(?) தூங்கிக்கொண்டு இருந்தான். அதைக் கவனித்த டீச்சர் அவனை எழுப்பி, 'இப்போ நான் என்ன சொன்னேன், சொல்லு?’ என்று கேட்டார். அவனோ திருதிருவென விழிக்க, 'ஏன் இப்படி வகுப்பறையில் தூங்குறே?’ எனக் கோபமாகக் கேட்டார் டீச்சர். 'காலையில் இருந்து சாப்பிடலை டீச்சர். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை!’ என்றான். உடனே கோபம் தணிந்த டீச்சர், தனது சாப்பாட்டைக் கொண்டுவரச் சொல்லி, அவனிடம் சாப்பிடச் சொல்லி நீட்டினார். அந்த நெகிழ்வின் ஈரம் காய்வதற்குள் ஆறாம் வகுப்புக்குள் சென்றோம்.

''திமிங்கிலம் ஏன் சார் குண்டா இருக்கு?''

அப்போது அவர்களுக்கு விளையாட்டு வகுப்பு. அனைவரும் மைதானத்தில் ஆஜர். உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் அந்த மாணவர்களுக்கு ஆரோக்கிய அறிவுரை வழங்கிக்கொண்டு இருந்தார். 'பசங்களா, யார் யாருக்கு நீச்சல் தெரியும்... கை தூக்குங்க’ என்று அவர் கேட்க, மொத்த மாணவர்களுள் இருவர் மட்டும் கை தூக்கவில்லை. 'நீச்சல் கத்துக்கணும்ப்பா. நீச்சல் உடம்புக்கு ரொம்ப நல்லது. தினமும் நீச்சல் அடிச்சா, உடம்பு ஸ்லிம் ஆகும்!’ என அவர் சீரியஸாகச் சொல்லிக்கொண்டு இருக்க, உடனே ஒரு குறும்புக்கார மாணவன், 'அப்ப ஏன் சார் திமிங்கிலம் குண்டா இருக்கு?’ எனச் சந்தேகம் கேட்க... ஏரியா முழுக்க டப்பாஸு டமாஸு!  

''திமிங்கிலம் ஏன் சார் குண்டா இருக்கு?''

மதிய உணவுக்குப் பிறகு எட்டாம் வகுப்பு. அங்கு டீச்சர் பாடம் நடத்திக்கொண்டு இருக்க... ஒரு மாணவன் தன் முன் அமர்ந்திருந்த மாணவியின் ஜடையைப் பிடித்து இழுத்துக்கொண்டே இருந்தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, டீச்சரிடம் சொல்லிவிட்டார். 'ஏன் அப்படிச் செஞ்சே?’ என்று கேட்க, 'நேத்து அவ என் பேனாவை உடைச்சுட்டா டீச்சர்’ என்றான். 'நீ ஏன் அவன் பேனாவை உடைச்சே?’ என்று மாணவியைக் கேட்க... அவளோ, 'என் ஜாமென்ட்ரி பாக்ஸைத் தூக்கிக் கிணத்துல போட்டுட்டான் இவன்!’ என்றாள். 'டேய்..!’ என்று மீண்டும் டீச்சர் அவன் பக்கம் திரும்ப, 'நான் கணக்குல சந்தேகம் கேட்டேன். அவ தப்புத் தப்பா சொல்லித் தந்தா!’ என்று விடாமல் மல்லுக்கட்டினான். 'நீ ஏம்மா அப்படி சொல்லிக் கொடுத்தே?’ என்று டீச்சர் அந்தப் பெண்ணிடம் கேட்க, சட்டென அவள், 'டீச்சர் அன்னிக்கு நீங்க சொல்லிக் கொடுத்ததைத்தான் சொன்னேன். அப்போ நீங்க சொல்லிக் கொடுத்தது தப்பா?’ என்று வெகுளியாக... இப்போ டீச்சர் முகத்தில் சிரிப்பு!

சூப்பரப்பு!

- கோ.செந்தில்குமார், படங்கள்:பா.கந்தகுமார்