பிரான்ஸ் நாட்டுத் தத்துவஞானி பாஸ்கலி டம் அவர் நண்பர் ஒரு முறை சொன்னாராம், ''உனக்கு இருக்கிற மூளை மட்டும் எனக்கு இருந் திருந்தால், நான் உன்னைவிடப் பெரிய ஆளாகி இருப்பேன்.''
பாஸ்கல் சிரித்துக்கொண்டே சொன்னார், ''நீ பெரிய ஆளானால், என் மூளை தானாகவே உனக்கு வந்து சேரும்!'' பாஸ்கலின் நண்பராவது தன் எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்லிவிட் டார். நம்மில் பலரோ, 'நமக்கு வாய்ச்சது அவ் வளவுதான்' என்று வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
பாஸ்கலின் மூளை தனக்கு இல் லையே என்று நினைத்த நண்பர், தனக்கு இருக்கிற மூளை என்னசெய்து கொண்டு இருக்கிறது என்று யோசிக் கவே இல்லை. 'பாஸ்கலின் மூளைக்குத் தத்துவார்த்த சிந்தனைகளை யோசிக்கத் தெரியும். என் மூளைக்கு? என் மூளைதான் பாஸ்கலின் மூளையைப்பற்றியே யோசித்துக்கொண்டு இருக் கிறதே?'
நமக்குத் தேவைப்படுவது வெளிச்சம். ஆனால், எப்போதும் இருட்டைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருக்கிறோம். வெளிச்சத்தைப் பெறுவதற்காகச் செயல்படுத்தப்பட வேண்டிய ஆற்றல், இருட்டைப்பற்றிய எண்ணத்திலேயே விரயமாகிறது. இந்த விரயத்தால் ஏற்பட்டவெற்றி டம்தான் அடுத்தவன் வெற்றி குறித்துப் பொறாமை கொள்ளவைக்கிறது.
'அவனுக்கு என்னப்பா... அவங்க அப்பா எல்லா வசதியும் பண்ணிக் குடுத்து இருக் காரு. சின்ன வயசுல இருந்தே அவன் இங் கிலீஷ் மீடியம். ஏழு தலைமுறைக்குச் சொத்து இருக்கு. அவன் ஆயிரம் பிசினஸ் பண்ணு வான். அவர் மாமா செக்ரட்டேரியட்ல வேலை பார்க்கறாரு. மினிஸ்டர்கிட்ட பேசி வேலையை முடிச்சுக் கொடுத்துருவாரு. நாம அப்படியா?' - இப்படி எண்ணற்ற சமாதா னங்கள் சொல்லி, ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். இந்த அத்தனை சமாதானப் புலம்பல்களுக்குப் பின்னாலும் ஒளிந்திருப்பது நம்மிடம் எதுவெல்லாம் இல்லை என்கிற பட்டியல்தான்.
இந்தப் பட்டியலில் இருக்கிற விஷயங்கள் எல்லாம் இருந்தால் ஜெயித்துவிடலாம் என்றால், அதை வைத்திருக்கிற எல்லோரும் ஜெயித்திருக்க வேண்டுமே? இந்த உலகத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றவர்கள் எல்லோரும் தங்களிடம் என்ன இருக்கிறது என்று பார்த்தவர்கள்தான்.
இன்றைக்கும் அமெரிக்க மக்களிடையே கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிற ஓப்ரா வின்ஃப்ரேயிடம் என்ன இருந்தது? ஏழ்மை, 14 வயதில் உறவினரின் பாலியல் வன்மத் துக்கு ஆளான துயரம். இதையெல்லாம் தாண்டி ஒரு செய்திவாசிப்பின் அந்தஸ்துக்கு வந்தும் அவரால் பெரிய அளவுக்கு வெற்றி பெறமுடிய வில்லை.
'நமக்கெல்லாம் இது முடியாதுப்பா! அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்; வெள்ளைத்தோல் வேணும்; டி.வி-ல நமக்குத் தெரிஞ்சவங்க யாராவது பெரிய பதவியில இருக்கணும். நம்மை நம்பி யாராவது ஒரு பெரிய ஷோ தயாரிக்கணும். அப்பதான் எல் லாம் நடக்கும்' என்று அவர் தயங்கி நிற்கவில்லையே!
சிந்திப்பதற்கு மூளை இருக்கிறது, செயல்படுத்த ஆற்றல் இருக்கிறது, போராடத் தைரியம் இருக்கிறது, அப்புறம் என்ன என்று வேகத்தோடு மோதினார். அதனால்தான் இன்றைக்கு ஓப்ராவை உலகமே கொண்டாடுகிறது.
மதுரையில் ஒரு கல்லூரி விழாவுக்குப் பேசச் சென்றிருந்தேன். வட இந்தியாவில் இருந்து ஓர் எழுத்தாளரும் வந்திருந்தார். அவரிடம் மாணவர்கள் கேள்வி கேட்டனர். அதில் ஒரு மாணவரின் கேள்வி, 'என் தந்தை ரொம்ப ஏழ்மையானவர், கடன் வாங்கி, சேமிப்பு செய்து, நகைகளை விற்று என்னைப் படிக்கவைத்துக்கொண்டு இருக்கிறார். எனக்கு ஆங்கிலம் சரியாக வராது. பெரிய நிறுவனங்களில் வேலை வாங்கிக்கொடுக்க ஆள் இல்லை. பணக்கார மாணவர்களைப்போல் பணம் செலவு செய்ய முடியாது. நான் எப்படிப் பெரிய வேலையில் சேர்ந்து நிறையச் சம்பாதிப்பது?'
அந்த எழுத்தாளர் சொன்னார்... 'உன் அப்பாதான் உனக்குப் பதில். உன் தந்தை தன்னிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்று யோசித்தார். அதனால், நீ இன்ஜினீ யர் ஆகியிருக்கிறாய். நீ உன்னிடம்என்ன வெல்லாம் இல்லை என்று கணக்குப்போடு கிறாய். போய் உன் அப்பாவிடம் பேசு!' என்றார்.
|