ஓர் இரவு, அவன் கையூன்றி நடந்தபோது தொலைவில் ஒரு வீடு கண்ணில் தென்படுகிறது. பதுங்கிப் பதுங்கி அந்த வீட்டை நெருங்கிச் சென்று, துப்பாக்கி முனையில் அங்குள்ள வயதான ஜெர்மனியப் பெண்ணை மிரட்டுகிறான். அவள் தன்னிடம் உணவு எதுவும் இல்லை என்று சொல்கிறாள். 'ஏதாவது சாப்பிடத் தா! இல்லாவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்' என்று கத்துகிறான். அந்தப் பெண் தன்னிடம் இருந்த தானியத்தைக்கொண்டு சூடாகக் கஞ்சி தயாரித்துத் தருகிறாள்.
கஞ்சியைக் கண்டதும், ராணுவ வீரன் வாய்விட்டுக் கதறி அழுகிறான். அவனால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கேவிக் கேவி அழுகிறான். அந்தப் பெண் ஒரு குழந்தையைத் தூக்கிவைத்து உணவு புகட்டுவதைப்போல, ரஷ்ய வீரனுக்கு உணவு புகட்டுகிறாள். சாப்பிட்டு முடித்துவிட்டு, அவன் தன் துப்பாக்கியைத் தூக்கி எறிந்துவிட்டு, அவள் கால்களைப் பற்றிக்கொண்டு, 'பசியோடு அலைந்தபோது கடவுள் என்ற ஒருவர் உலகில் இல்லை என்று ஆத்திரமாகக் கத்தினேன். இப்போது கடவுள் இருப்பதை உணர்கி றேன். நீதான் எனது கடவுள்!' என்று புலம்புகிறான்.
பசியின் முன்னால் நண்பர்கள் - எதிரிகள் இல்லை. நம் வயதும் படிப்பும்கூடக் காணாமல் போய்விடுகிறது. பசித்த வயிறுதான் உலகை இயக்கிக்கொண்டு இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ளத் தவறும் புள்ளியில் இருந்தே பிரச்னைகள் ஆரம்பமாகின்றன.
'இரண்டு குழந்தைகள்' என்று ஜெயகாந்தன் ஒரு சிறுகதை எழுதிஇருக்கிறார். பசியைப்பற்றிய மிக அற்புதமான கதை. ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பஞ்ச காலத்தில் பிழைக்க வழியில்லாமல் சிவப்பி என்ற பெண் தன் குழந்தையோடு தஞ்சைப் பகுதிக்குச் செல்கிறாள். அங்கே ஓடியாடி வீட்டு வேலைகள் செய்கிறாள். கிடைத்ததைவைத்து வயிற்றை நிரப்புகிறாள். அவளுக்கு ஒரு பையன். எப்போதும் அம்மாவின் இடுப்பிலே தொற்றிக்கொண்டு இருக்கிறான்.
ஏதாவது வேலை வரும்போது பையனை ஓர் இடத்தில் உட்காரவைத்து, அவன் கையில் ஒரு முறுக்கைக் கொடுத்துவிட்டு சிவப்பி அந்த வேலையைக் கவனிக்கப் போய்விடுவாள். சிவப்பி எங்கே சுற்றினாலும், மதிய நேரம் சுப்பையர் வீட்டுக்குப் போய்விடுவாள். அதற்கு முக்கியக் காரணம், அவர்கள் வீட்டில் கிடைக்கும் வடித்த கஞ்சி. அந்தக் கஞ்சியின் ருசி அவளுக்கு மிகவும் பிடித்தமானது. அதற்காகத் தன் பிள்ளையைத் தூக்கிக்கொண்டுபோய் வடிகஞ்சியை யாசிப்பது வழக்கம்.
சுப்பையரின் மனைவிக்கு அவள் மீது வாஞ்சை உண்டு. ஆனால், சுப்பையர் வடிகஞ்சியில் நாலைந்து பருக்கைகள் சேர்ந்து விழுந்துவிடுகின்றனவா என்று கண்கொத்திப் பாம்பாகப் பார்க்கக்கூடியவர். வடிகஞ்சியைக் குடித்தே இந்தப் பெண் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறாளே என்று எரிச்சலும் படக்கூடியவர்.
அதனால், மனைவி யாரோ ஒரு வேலைக்காரப் பெண்ணுக்கு வடிகஞ்சியைத் தானம் கொடுப்பதைத் தாங்க முடியாமல், 'இனிமேல் சாதத்தைப் பொங்கிவிடு. வடிக்காதே!' என்று திட்டுகிறார். 'ஒரு குவளை வடித்த கஞ்சியைத் தருவதால் என்ன |