மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும்... நானும்! : கோபிநாத் - 07

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும்... நானும்! : கோபிநாத் - 07

16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்
நீயும்... நானும்! : கோபிநாத் - 07
நீயும்... நானும்! : கோபிநாத் - 07
நீயும்... நானும்!
கோபிநாத்
நீயும்... நானும்! : கோபிநாத் - 07
நீயும்... நானும்! : கோபிநாத் - 07

திகாலை ஐந்து மணி, இரவு 12 மணிக்கு வேலை முடித்து வந்த பையன், அவசரஅவசரமாக எழுந்து தலை சீவி, புது பேன்ட், ஷர்ட் எடுத்து அணிந்துகொண்டு, காலைப் பனியைப் பொருட்படுத்தாமல் தெருவில் இறங்கி நடக்கிறான். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாதஅந்த அதிகாலையில், சாலையில் இடமும் வலமுமாக யாரையோ தேடியபடியே நடந்து வருகிறாள் சுடிதார் அணிந்த ஒரு பெண். திடீரெனக் கண்களில் ஒரு பிரகாசம்... குளிரில் நடுங்கியபடி அந்த இளைஞன் பஸ் ஸ்டாப்பை நோக்கி வருகிறான்.இப்போது, அந்தப் பெண்ணின் கண்கள் பஸ் எப்போது வரும் என்று தேடுவதுபோல் நடிக்கிறது.

அவளுக்கும் அவனுக்கும் இடையில் சில அடிகள்தான் இடைவெளி. இருவரின் மனசுக்குள்ளும் சின்னதாக ஒரு படபடப்பு, ஒரு பரவசம். பஸ் வருகிறது... சுடிதார்பெண் படிக்கட்டில் ஏறியபடி எங்கோ பார்ப்பதுபோல அவனைப் பார்க்கிறாள். அவள் கண்களும் அவன் கண்களும் ஒருகணம் சந்திக்கின்றன. தடதடவென ரத்த ஓட்டத்தில் ஒரு புது உற்சாகம். பார்வையில் இருந்து பஸ் மறைகிற வரை பார்த்துவிட்டுத் துள்ளலும் குதூகலமுமாக வீடு திரும்புகிறான் அந்த இளைஞன். ஏறக்குறைய இது இரண்டு ஆண்டுகளாக நடக்கிறது.
ஒரே ஒரு பார்வைப் பரிமாற்றம் மட்டும்தான். பேச்சு இல்லை, சிரிப்பு இல்லை, சிவப்பு ரோஜாவும் வாழ்த்து அட்டையும் கொடுத்து ஐ லவ் யூ சொல்லவில்லை. இரண்டு ஆண்டுகளாக பார்வைப் பரிமாற்றத்திலேயே பயணிக்கிறது இரண்டு இதயங்களும்!

நீயும்... நானும்! : கோபிநாத் - 07

கோயில் திருவிழா... ஸ்டிக்கர் பொட்டுப் பாக்கெட்டும், ஒரு டஜன் பிளாஸ்டிக் வளையல்களுமாகக் கட்டிய பொட்டலத்தை யாருக்கும் தெரியாமல் அவள் கைகளில் திணித்துவிட்டு, ஹீரோ சிரிப்புடன் நடந்து போகிற அத்தை மகனை ஓரக்கண்ணால் ரசிக்கிற கிராமத்து இதயங்கள்!

'ஹலோ! என் பேரு கௌஷிக். பார்த்தேன்... நீங்க நல்லாப் பாடுறீங்க... யு நோ... என் அம்மாகூட ரொம்ப நல்லாப் பாடுவாங்க. என் அம்மா மாதிரி ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்கறதுதான் என் ஆசை. ஷல் வி மேரி?' என்று மணிரத்னம் பட ஹீரோ மாதிரி கேட்கிற காதல்.

புத்தகத்தை அவளிடம் கொடுத்துவிட்டுப் படிக்கட்டில் தொங்குகிற காதல்... அவனுக்குப் பிடிக்கும் என்பதால், சிவப்பு சுடிதார் அணிந்துகொள்கிற காதல்... கொட்டுகிற மழையிலும் கொளுத்துகிற வெயிலிலும் குடை பிடிக்காமல் நடக்கிற காதல்... இரவு 12 மணிக்கு ஹாஸ்டல் சுவர் ஏறிக் குதித்து, ஜன்னல் வழியே பூங்கொத்து வீசி ஹேப்பி பர்த்டே சொல்லுகிற காதல்... எப்படிப் பார்த்தாலும் காதல் அழகாகத்தான் இருக்கிறது. இலக்கியங்களில் தொடங்கி, இன்றைய சினிமா வரைக்கும் காதல்... காதல்... காதல்!

காதலுக்காக வாழ்வது, காதலிலேயே வீழ்வது, காதலாக வாழ்வது என்று இங்கு நிறையக் காதல்கள் உண்டு. கையில் கால்குலேட்டரை வைத்துக்கொண்டு எதிர்காலத்தைத் திட்டம் போடுகிற காதல், வேலைக்கு ஆள் எடுக்கிற மாதிரி அளந்து, யோசித்து நடக்கிற காதல், சென்ட்ரல் கவர்மென்ட் ஜாப், அப்பா - அம்மா தொந்தரவு இல்லை. ஓ.கே. என்று முடிவெடுக்கிற காதல் எனப் பல காதல்கள் உண்டு. ஆனாலும், அதிக வெளிப்பாடுகள் இல்லாவிட்டாலும், உன்னை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா என்றெல்லாம் சொல்லாவிட்டாலும், ஆழமாக வேரூன்றுகிற வாழ்க்கைக் காதல் ரொம்பவும் அழகானது.

சச்சின் டெண்டுல்கர் ஒவ்வொரு முறை செஞ்சுரி அடிக்கிறபோதும், அந்த வெற்றிக்குப் பின்னால் தன்னை அமைதியாக மறைத்துக்கொண்டு இருக்கிற அஞ்சலியின் காதல் நமக்கு நினைவு வராமல் போகலாம். சச்சினுக்கு நிச்சயம் அஞ்சலிதான் கண் முன்னால் வந்து போவார். எவ்வளவு அழகான வாழ்க்கைக் காதல் அது!

கிரிக்கெட் உலகின் ராஜாவாக வலம் வந்த சச்சின், இந்தியாவின் எந்தப் பணக்காரக் குடும்பத்திலும் பெண் எடுத்திருக்கலாம். ஏர்போர்ட்டில் ஒரு பெண்ணைப் பார்க்கிறார்... அவர் யார் என்பதெல்லாம் தெரியாது. பிடித்து விடுகிறது... புரிந்துகொள்கிறார்கள்... திருமணம் செய்கிறார்கள்... அஞ்சலி ஒரு டாக்டர். தன்னைவிட மூத்தவர் என்பதெல்லாம் சச்சின் மனதில் அஞ்சலி பதிந்த பிறகு தெரிந்த விஷயம்!

உலகின் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் நேசிக்கிற ஒரு மனிதனை அவனது அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது அஞ்சலியின் காதல்!

சச்சினின் புகழ் வெளிச்சத்தில் நின்றுகொண்டு அனுபவிக்கவோ, அவரது வெற்றி விழாக்களில் பங்கேற்பதில் முனைப்பு காட்டவோ விழையாமல், நித்தமும் கிரிக்கெட்டோடு வாழ்ந்துகொண்டு இருக்கும் சச்சினுக்குத் தன் காதலால் ஆத்மார்த்தமான உணர்வைத் தந்துகொண்டே இருக்கிறது, அஞ்சலியின் வாழ்க்கைக் காதல்.

அந்த ஆழமான புரிதல்தான் சச்சினை ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக மட்டுமில்லாமல், கண்ணியமான, உலகம் மதிக்கிற மனிதராகவும் உயர்த்தி இருக்கிறது. கிரிக்கெட் அல்லாத நேரங்களில் குழந்தைகளோடும், குடும்பத்தோடும் செலவிடுகிற நல்ல அப்பாவாக்கி இருக்கிறது.

மீடியா வெளிச்சங்களில் விழாமல், விளையாட்டையும் குடும்பத்தையும் தனித் தனியே நிறைவாகக் கையாளுகிற பக்குவத்தை சச்சினின் காதல் அவருக்குத் தந்திருக்கிறது. சச்சின் 'மேன் ஆஃப் தி மேட்ச்'. ஆனால், சச்சினின் வாழ்க்கையில் அஞ்சலிதான் என்றைக்கும் 'வுமன் ஆஃப் தி சீரிஸ்'!
இரண்டு ஆஸ்கர் விருதுகள், இரண்டு கிராமி விருதுகள், இசை உலகில் எண்ணற்ற சாதனைகள், ஐக்கிய நாடுகள் சபையில் தொடங்கி இந்தியக் கிராமங்கள் வரை எங்கும் நிரம்பிக்கிடக்கிறது, ஏ.ஆர்.ரஹ்மான் என்ற எளிமையான தமிழனின் இசை!

இவ்வளவு புகழையும் தாங்கிக்கொண்டு எந்தச் சலனமும் இல்லாமல் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அடக்கமாகச் சொல்கிறார், மக்கள் மனதில் மரியாதைக்குரிய இடத்தைப் பிடித்திருக்கும் அந்த இளைஞர்.

அழகான ஏற்பாட்டுத் திருமணம். ஒரு சாதாரண இசைக் கலைஞராகக் கருதப்பட்டவரை உலகம் அறியவைத்திருப்பது ரஹ்மானின் வாழ்க்கைக் காதல். அவரது இசைப் பயணத்தில் சத்தமே இல்லாமல் அமைதியான சங்கீதமாக ஒலிக்கிறது ரஹ்மானின் மனைவி அவர் மீது வைத்திருக்கும் ஆத்மார்த்தமான அன்பு. உலகின் எந்த மூலைக்குப் போனாலும் கண்ணியத்தையும், பெருந்தன்மையையும் பேணுகிற ரஹ்மானின் மனசுக்குள் நதிபோல ஓடிக்கொண்டு இருக்கிறது அவரது குடும்பத்தின் மீதான வாழ்க்கைக் காதல்.

எல்லாச் சூழலும் சாதகமாக இருக்கும்போது நடக்கிற வேதியல் மாற்றம் காதல் என்று கருதப்படலாம். ஆனால், அதைத்தாண்டி காதலுக்கு வெவ்வேறு அடையாளங்கள் இருக்கின்றன. குழந்தைத்தனங்கள், கோமாளித்தனங்கள், பக்குவம், புரிந்துகொள்ளல், விட்டுக்கொடுத்தல் இது எல்லாவற்றையும் கடந்த அர்ப்பணிப்பும் தியாகமும் காதலோடு தொடர்ந்து இயங்க அவசியப்படுகிறது.

நீயும்... நானும்! : கோபிநாத் - 07

'சிகரம் தொட்ட மனிதர்கள்' நிகழ்ச்சிக்காக சிவகுமாரிடம் பேசியபோது, ஒரு நெகிழ்வான விஷயம் சொன்னார், '15 வருட உழைப்பு, ஷூட்டிங் ஷூட்டிங் என்று ஓடி ஓடி உழைத்துத் திரும்பிப் பார்க்கிறபோது, என் பிள்ளைகள் வளர்ந்து இருந்தார்கள். படித்துக்கொண்டு இருந்தார்கள். நான் எனது வேலையிலேயே திளைத்திருந்தேன். என்னை என் ஆசைகளின் பின்னாலும், கலையார்வத்தின் பின்னாலும் சுதந்திரமாகச் செல்லும் வழி தந்துவிட்டு, தனி மனுஷியாக என் பிள்ளைகளை வளர்த்து, குடும்பத்தை நிர்வகித்து, என்னையும் கவனித்துக்கொண்டு எனக்காகவே வாழ்கிறாள் என் மனைவி என்று புரிந்தபோது, கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.'

ஆம், அறிந்துகொள்ளவும், உணர்ந்துகொள்ளவும் அழகான வாழ்க்கைக் காதல் நமக்குள்ளேயே நிறைந்துகிடக்கிறது. ராஜ்தூத் பைக்கில் என்னை முன்னால் வைத்துக்கொண்டு அப்பா எங்கள் கிராமத்துக்குப் போவார். முறுக்கிய மீசையும், ராஜ நடையுமாக ஊருக்குள் அப்படி வருகிறபோதே மரியாதையும் கம்பீரமும் தானாக வரும்.

ஊர்ப் பிரச்னையில் அப்பா பேசும்போது மிடுக்கு தெறிக்கும். 'சண்டியர் மவனே, எத்தனாங் கிளாஸ் படிக்கிற?' என்று ஒரு பாட்டி என்னிடம் கேட்கும். அப்பாவைப் பார்த்து நிறையப் பேர் பயப்படுவார்கள்... அவர் கோபக்காரர் என்றும் ஒரு பயம் உண்டு.

ஆனால், அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்றால், அவர் ஒரு குழந்தையாக மாறிப்போவார். காதல் எவ்வளவு பலமானது என்று அப்போது தோன்றும். காபி போட்டுக் கொடுப்பதில் தொடங்கி, அம்மாவுக்கு மாத்திரை எடுத்துத் தருவது வரை அவரின் வாழ்க்கைக் காதலில் அவ்வளவு பாசம் இருக்கும்.

அம்மா கோடீஸ்வரன் வீட்டுப் பெண். அப்பாவின் மரியாதைக்குக் கீறல் விழும் என்று தோன்றியவுடன், தன் கோடீஸ்வரத் தந்தை வீட்டுக்குள் நுழைவதைக்கூட நிறுத்திவிட்டு, எல்லா சங்கடங்களிலும் அப்பாவின் தோளாக நின்ற மனுஷி.
என் வீட்டில், உங்கள் வீட்டில், எனப் பலரிடமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைக் காதல் நிறைய இருக்கிறது.

எனக்கும் விரைவில் திருமணம். அம்மாக்களிடமும், அப்பாக்களிடமும் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும்... வாழ்க்கைக் காதலை!

'ரசிப்பதற்கு
ஒருத்தி இருக்கிறாள்
என்பதைவிட
வேறென்ன வேண்டும்
வாழ்க்கையை ரசிக்க!'

- ஒரு சிறிய இடைவேளை

 
நீயும்... நானும்! : கோபிநாத் - 07
-படம் : 'தேனி' ஈஸ்வர்
நீயும்... நானும்! : கோபிநாத் - 07