உடைகள் ஏற்படுத்தும் கனவுகள் வாழ்வில் மறக்க முடியாதவை. ஒவ்வொரு வயதி லும் ஒருவித உடை ஆதங்கமாகவே இருந்துவந்திருக்கிறது. எனது பள்ளி வயதில் என்னோடு படித்த ஒரு சிறுவன் சிவப்பு நிறத்தில் இளமஞ்சள் வட்டமிட்ட ஒரு புதுச் சட்டையை அணிந்து வந்திருந்தான். அதுபோன்ற ஒரு சட்டை தனக்குக் கிடைக்காதா என்று வகுப்பில் இருந்த ஒவ்வொரு பையனும் ஆசைப்பட்டார் கள்.
அந்த சட்டைத் துணி எங்கே கிடைக்கிறது, எந்த டெய்லரிடம் அதைத் தைத்தான் என்று மாறிமாறி விசாரித்தார்கள். பையனோ பெருமிதத்துடன், தனது அப்பா மிலிட்டரியில் இருந்து திரும்பி வரும்போது, நாக்பூரில் வாங்கி வந்தது என்றான். ஏன் நமது அப்பாக்கள் மிலிட்டரியில் வேலை செய்யவில்லை என்று என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிறுவன் பெருமூச்சுவிட்டான்.
இவனுக்காகவே அதுபோன்ற ஒரு சட்டையை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று துடித்தேன். அடுத்த பிறந்த நாளுக்குச் சட்டை வாங்கச் சென்றபோது அதே நிறம், அதுபோன்ற வட்டம் உள்ள சட்டை கிடைத்துவிடாதா என்று கடை கடையாகத் தேடினேன். ஆனால், அது போன்ற சட்டை கிடைக்கவே இல்லை.
வேறு நிறத்தில் புதுச் சட்டை வாங்கியபோதும் மனதின் ஆதங்கம் தீரவில்லை. அந்தச் சிறுவன் பள்ளி மாறி வேறு ஊருக்குச் சென்றுவிட்டான். அவன் பெயர்கூட இன்று மறந்துவிட்டது. ஆனால், அந்தச் சிவப்பு நிற வட்டம்போட்ட சட்டை மனதில் அப்படியே இருக்கிறது. இப்படி உடைகள் நமக்குள் மறக்க முடியாத சில ஏக்கத்தை உருவாக்கிவிடுகின்றன. அவை ஒருபோதும் தீராதவை.
கல்லூரி வயதில் நட்பே பிரதானம். அப்போது ஒன்றுபோல ஒரே நிறத்தில் உடை அணிந்துகொள்வது நட்பின் அடையாளம். ஒருவர் சட்டையை மற்றவர் போட்டுக்கொள்வார்கள். நண்பர்களை இப்படிப் போட்டுக்கொள்ள அனுமதிக்கும் மனது, வீட்டில் உள்ள அண்ணனோ, தம்பியோ அதே சட்டையைக் கேட்காமல் எடுத்துப் போட்டுவிட்டால் கோபம்கொள்ளும்; சண்டை போடத் தூண்டும். உடைகள் குறித்த விசித்திரங்களில் இதுவும் ஒன்று.
உடைகள் உருமாறிக்கொண்டே இருக்கின்றன. அதன் பயன்பாடு வியப்பானது. அம்மாவின் சேலை குழந்தைக்குத் தொட்டில் ஆவதும், தங்கையின் தாவணியாவதும், தலையணை உறையாவதும், பின்பு அங்கிருந்தும் இடம்பெயர்ந்து சமையலறையின் கைப்பிடித் துணியாவதுமாக ஒரு பெரிய காலமாற்றத்துக்கு உள்ளாகிறது. ஆண்களின் வேட்டியோ, இட்லித் துணியாகவோ, தரை துடைக்கும் கிழிந்த துணியாகவே மாறுவதோடு தன் பணியை முடித்துக்கொள்கிறது. பேன்ட் - சட்டைகள் அதற்கும் பயன்படுவது இல்லை. அவை பயன்பாடு கடந்தவுடன் யாருக்காவது கொடுக்கப்படுகின் றன. நமது உடைகளில் நமது ஆசைகள் ஒட்டி இருக்காதா?
தனக்கு விருப்பமான சேலை கறைபட்டதற்கு, கிழிந்ததற்கு அழும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். நிஜமான வலி அது. நினைத்து நினைத்துப் பலவருடங் கள் அழுபவர்கள் இருக்கிறார்கள். உடை விஷயத்தில் ஆண்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவதுஇல்லை. அரிதாகவே சிலர் அப்படி இருக்கிறார்கள்.
ஆண்களில் பலர் நாற்பது வயதைக் கடந்தவுடன் உடைகள் மீதான ரசனை உணர்வை இழக்கத் துவங்குகிறார்கள். பெண்களுக்கோ வயது அதிகமாகும்போதுதான் உடைகளின் மீதான ரசனையும் அக்கறையும் அதிகமாகிறது. பார்த்துப் பார்த்து தேர்வுசெய்கிறார்கள். புதுவித உடையை அணிந்து பார்க்க ஆசைப்படுகிறார்கள். மயில்கழுத்து நிறம், கத்திரிப் பூ நிறம், துத்தநாக கலர் என்று துல்லியமாக நிறத்தைச் சொல்லி கடைகளில் தேடுகிறார்கள். உடைகளைப் பகிர்ந்துகொள்வதிலும், தேர்வுசெய்வதிலும் ஆண்களைவிடப் பெண்களே அதிக ஆர்வமுடையவர்கள். உடைகள் குறித்துப் புரிந்துகொள்ள முடியாத அதீத பற்றும், காரணமற்ற கோபமும் பெண்களின் இயல் பாக இருக்கிறது.
ஹிந்தி இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளரான பிரேம்சந்த், 'பட்டுச் சட்டை' என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். ஒரு கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஒருவன் பணக்கார வீட்டைச் சேர்ந்தவன். மற்றவன் ஏழை. சலவைத் தொழிலாளியின் வீட்டுப்பிள்ளை.
|