2004 டிசம்பர் 26... 'கடல் தண்ணீர் ஊருக்குள்ள வருது, சீக்கிரமா ஓடியாங்க' என யாரோ ஒரு நண்பர் போன் பண்ண... கேமராவைத் தூக்கிக்கொண்டு ஓடினேன். ஏதோ கடல் உள்ளே வந்திருக்கும். பார்க்க அழகா இருக்கும் என்றெல்லாம் கற்பனை.
நான் போய்ச் சேர்வதற்குள் ஆழிப்பேரலை நிறைய பேரைக் கொன்று ஏப்பம் விட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் அழுகுரல்களும் அரற்றலும், காணாமல் போனவர்களைத் தேடி உறவுகள் வயிற்றில் அடித்துக்கொண்டு அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு ஓடியதை நினைத்தால், இன்னமும் மனசு வலிக்கிறது.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் எல்லாப் பக்கங்களிலும் பிணங்கள். கனவுகளோடு வளர்க்கப்பட்ட பிள்ளைகள், கடற்கரைக்கு வாக்கிங் போன பெரியவர்கள் எனச் சடலங்கள். வேடிக்கை பார்க்கும் மனோபாவத்தோடு போன எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
இந்த ரணம் ஆறவே ஆறாது. இனி என்ன செய்யப் போகிறார்கள்... அவ்வளவுதான், வாழ்க்கை முடிஞ்சு போச்சு... இந்த இழப்பில் இருந்து மீளவே முடியாது என்று எல்லோர் மனதிலும் அழுத்தமாகப்பட்டது. சென்னையில் மட்டுமல்ல... நாகப்பட்டினம், கடலூர் என்று எங்கு பார்த்தாலும் மரண ஓலம்.
டி.வி-யைப் போட்டால், இலங்கையில் இவ்வளவு பேர் மரணம்... தாய்லாந்தில் எண்ணிலடங்காச் சடலங்கள் என்று செய்திகள். எல்லா இடங்களிலும் அந்த நேரம் தோன்றிய எண்ணம் 'வாழ்க்கை முடிஞ்சுபோச்சு' என்பதுதான். ஆனால், அந்தத் துயரங்களின் வலி ஒரு பக்கம் இருந்தாலும், எல்லாரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பித்தான் இருக்கிறோம்.
இப்படி 'எல்லாம் முடிஞ்சுபோச்சு' என்று நினைக்கவைத்த சம்பவங்கள் எத்தனையோ. ஆனால், அத்தனையும் கடந்து, காலம் நம்மை அடுத்த இடத்தை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டே இருக்கிறது. இனி வாழ்வதில் அர்த்தமே இல்லை என்று எண்ணக்கூடிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ முறை இங்கு வந்தது உண்டு.
வரலாற்றில் மட்டுமல்ல... தனி மனித வாழ்க்கையிலும் 'இனி ஒன்றுமே இல்லை என்று' வாழ்க்கை ஒரே இடத்தில் தங்கிவிடுவது இல்லை. ஆனால், எல்லாம் முடிந்துவிட்டது என்ற கவலையும் ஆற்றாமை யும் அடுத்த இடத்தை நோக்கிப் பயணிப்பதற்கான வேகத்தை மட்டுப்படுத்திவிடுகிறது என்பதையும் மறந்து விடக் கூடாது.
காயப்பட்ட மனமும் அதனால் சுணங்கிப் போயிருக்கும் மூளையும், இழந்ததைப்பற்றியே தீவிரமாகக் கவலைகொள்கிறது... வருந்துகிறது... சுயபச்சாதாபத்தோடு ஒரே இடத்தில் முடங்கிவிடச் செய்கிறது. இழப்பைப்பற்றி வருந்துகிற மனசும் மூளையும் இழப்புக்கான காரணத்தை யோசிக்க அனுமதிப்பது இல்லை. பிசிலி நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் ஒரு விஷயம் சொல்வார், 'நீ தடுமாறி விழுவது தவறே இல்லை. ஆனால், எந்த இடத்தில் தடுமாறினோம்... ஏன் விழுந்தோம் என்பதற்கான காரணத்தைக் கண்டறிவது அவசியம்!'
இழப்பின் சோகத்தைச் சுமப்பதில் நமக்கு அலாதிப் பிரியம் உண்டு. நிறையப் பேர் ஆறுதல் சொல்வார்கள். அனுசரணையான வார்த்தைகள் கிடைக்கும். 'பாவம், எல்லாத்தையும் தொலைச்சிட்டு வந்து நிக்கிறான்' எனச் சில இடங்களில் சிறப்புக் கவனிப்பு கிடைக்கலாம். ஆனால், எல்லாம் எத்தனை நாளைக்கு... அவர்களுக்கு அடுத்த வேலை வரும் வரை.
சோகத்தைச் சுமப்பது சுகமாக இருப்பதால், இழப்புக்கான காரணத்தைக் கண்டறிவதில் ஆர்வம் இருப்பது இல்லை. இன்றைக்கும்கூட சுனாமி சுருட்டிக் கொண்டுபோன உயிர்களைப்பற்றிய கவலையையும் வலியையும் சுமக்கிற நாம், 'சுனாமி வந்ததற்கான காரணம் என்ன, மீண்டும் சுனாமி வந்தால் பாதிப்பு இல்லாமல் இருக்க என்ன வழி? அதற்கு சமூகரீதியாக என்னுடைய பங்கு என்ன?' என்பது குறித்து தீவிரமாக யோசித்தது இல்லை.
|