உங்கள் வீட்டுக்கும் உங்களது பக்கத்து வீட்டுக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி இருக்கிறது? அதிகபட்சம் ஐந்தடியோ பத்தடியோ இருக்கக்கூடும். ஆனால், உண்மையில் பக்கத்து வீட்டுக்கும் நமக்குமான இடைவெளி சீனப் பெருஞ்சுவரைவிடப் பெரியது. அகற்ற முடியாத கசப்புச் சுவர் அது.
ஒவ்வொரு குடும்பமும் தனது அண்டை வீட்டை வெறுக்கிறது என்பதுதான் நம் காலத்தின் நிஜம். அந்த வெறுப்பின் புற அடையாளமாகவே நமது கதவுகள் எப்போதும் சாத்திவைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனாலும், அவர்கள் நம்மைக் கண்காணிக்கிறார்கள். நாம் அவர்களைக் கண்காணிக்கிறோம். ஒருவரையருவர் புறம் பேசுகிறார்கள். வாய் ஓயாது குறை சொல்கிறார்கள். எல்லை மீறிப் போனால் வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள்.
அருகில் வசிக்கும் இரண்டு குடும்பங்கள் ஒன்றையன்று நேசிக்கின்றன. ஒரே வீடுபோலச் சேர்ந்து சாப்பிடுகிறார்கள். ஒன்றாக உல்லாசப் பயணம் செல்கிறார்கள். ஒன்றாகப் புத்தாடை வாங்குகிறார்கள். ஒருவர் துயரத்தை மற்றவர் ஆறுதல்படுத்துகிறார்கள் என்பது எல்லாம் கடந்த காலத்தின் கதைகள். அப்படி நடந்தது என்று சொன்னால்கூட இன்று நம்ப எவரும் தயாராக இல்லை.
யோசிக்கையில் வெகு ஆச்சர்யமாக இருக்கிறது. 30 வருடங்களுக்கு முந்தைய தலைமுறை இன்று உள்ளவர்களைப்போல படிப்போ, சம்பளமோ, உயர்ந்த வேலையுடனோ இருக்கவில்லை. வாடகை வீடுகள். எட்டுப் பத்துக் குடும்பங்கள் அருகருகே வசிக்கும் நெருக்கடியான ஒண்டுக் குடித்தனங்கள் அதிகம் இருந்தன. அதுபோன்ற வீடுகளில் விருந்தாளி வந்தால் படுக்க இடம் இருக்காது. சைக்கிள் நிறுத்த இடம் இருக்காது.
ஆனால், அந்த நெருக்கடிக்குள்ளாக அடுத்த வீட்டுக்கு விருந்தினர் வந்துவிட்டால், பக்கத்து வீட்டில் இருந்து அவசரமாக பாலோ, காபிப் பொடியோ கடனாகக் கிடைக்கக்கூடும். இரவில் படுப்பதற்குப் பாயும் தலையணையும்கூடக் கடன் கிடைக்கும். ஒருவர் வீட்டில் உடல் நலமில்லை என்றால், மற்றவர் வீட்டில் கஷாயமோ, கஞ்சியோ செய்து தருவார்கள். சிறுவர்கள் பேதமில்லாமல் எவர் வீட்டிலும் போய்ச் சாப்பிட்டு வருவதும் நடக்கும்.
சண்டைச் சச்சரவுகள் ஏற்படுவது உண்டு. ஆனால், அன்றாடக் கோபங்கள். உடனே வடிந்துவிடக்கூடியவை. ஒரு குடும்பம் இடம் மாறி இன்னொரு ஊர் போகையில், அந்த ஒண்டுக் குடித்தனமே அந்தப் பிரிவின் வேதனையை அனுபவிக்கும். பிரிந்துபோனவர்களும்கூட மறக்காமல் கடிதம் எழுதுவார்கள். பின்பு புதிய குடித்தனம் ஒன்று அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டுவிடும். அண்டை வீட்டுக்காரர் ஏதோ ஒரு வகையில் நண்பர், உறவினர், என்ற அடையாளங்கள் தாண்டி நெருக்கமும் அக்கறையும்கொண்டவர்களாக இருந்தார்கள்.
இன்று உள்ள மாநகரச் சூழலில் பக்கத்து வீடு என்பது இன்னொரு கதவிலக்கம் மட்டுமே. அவசரத்துக்கு காலிங்பெல் அடித்து ஏதாவது கேட்கும்போதுகூட அவர்கள் சினமேறிய முகத்துடன் பதில் பேச மறுக்கிறார்கள்.
இன்று பக்கத்து வீட்டில் யாரும் கடன் கேட்பதுஇல்லை. கறிவேப்பிலை, கொத்துமல்லி பரிமாறிக்கொள்வதுகூடப் பெரிய விஷயமாக மாறி இருக்கிறது. நாம் பக்கத்து வீட்டுக்காரர் ரொம்ப இறுக்கமாக சிடுமூஞ்சியாக இருக்கிறார் என்று புகார் சொன்னால், அவர் இதுபோலவே நம்மைப்பற்றிய ஒரு புகார்ப் பட்டியலை வைத்திருக்கிறார்.
|