மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் நானும் ! - 01

நீயும் நானும்
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் நானும் ! - 01


கோபிநாத் படம்: 'தேனி'ஈஸ்வர்
நீயும் நானும் ! - 01
நீயும் நானும் ! - 01
.
நீயும் நானும் ! - 01
.

எனர்ஜி பக்கங்கள்

பொங்கலுக்காக வாங்கிய புதுச் சட்டை, அண்ணன் மெட்ராஸ்ல இருந்து வாங்கி வந்த கேன்வாஸ் ஷு, நெளிநெளியாய் கயிறுபோல இருக்கும் அப்போதைய டிரெண்ட் பெல்ட், எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, சென்னைக்கு பஸ் ஏறியபோது ஆனந்த விகடனில் ஒரு தொடர் எழுதுவோம் என்றெல்லாம் தெரியாது...

நீயும் நானும் ! - 01

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உத்தியோகம், வீடு வீடாகத் துணி விற்கும் சேல்ஸ் ரெப் வேலை, 'இப்ப மெம்பர்ஷிப் 10 ஆயிரம் ரூபாதாங்க. அடுத்த வருஷம் 50 ஆயிரம் ரூபா ஆகிடும். உங்கநல்லதுக்குத் தான் சொல்றேன்!' - இப்படி உலகத்துடன் உறவாடுகிற, உணர்வாடுகிற ஏராளமான வேலைகளை ரசித்துச் செய்தவன் நான்.

மார்கழி மாத அதிகாலையில் வாசலில் வந்து நின்றால், பனி மூடிய பூமி எப்படி இருக்குமோ... அப்படிப் புரிந்தும் புரியாம லும்தான் என் வாழ்க்கையும் இருந்தது.

கோயம்பேட்டில் குறைந்த ரேட்டில் திருச்சிக்குப் போகும் புஷ்பேக் வசதி உள்ள ஆம்னி பஸ் தேடுகிற, நல்ல மீனா என்று கேட்டு வாங்கியும் நம்பிக்கை இல்லாமல் மீனின் செதில் தூக்கிச் சோதனை செய்கிற, 'அமெரிக்காவுல பிரச்னைன்னா, இங்க ஏன்யா வேலையைவிட்டுப் போகச் சொல்றானுங்க?' என்று அங்கலாய்க்கிற, 'மெட்ராஸ் ரொம்ப மாறிருச்சு. பொம்பளைப்பிள்ளைக எல்லாம் ஸ்கூட்டில விஸ்க் விஸ்க்னு பறக்குதுங்க' என்று புலம்புகிற, 25-ம் தேதி வாக்கில், 'சும்மாதான் உன்னைப் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்!' என நண்பன் புரிந்துகொள்வான் என்ற பாவனையில் பொய் சொல்கிற, 'பார்த்துப் போடா... சாவுகிராக்கி!' என்று திட்டுபவர்களின் கெட்ட வார்த்தைகளைக் கவனிக்காததுபோலக் கடந்து போகிற, பஸ் ஸ்டாண்ட் பொதுக் கழிப்பிடத்தில் உடைந்துபோன தாழ்ப்பாளை ஒரு கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, பயம் கலந்த கோபத்தோடு அரசாங்கத்தைத் சபிக்கிற, வெயில் காலத்தில் வெயிலையும், மழை நாட்களில் மழையையும் திட்டுகிற யாரோ பலரில் நானும் ஒருவனாக இருந்தேன்!

'என்ன வேலை பார்த்தாலும், கலகலன்னு அது மனுஷங்ககூட புழங்குற வேலையா இருக்கணும்டா!' என்று என் நண்பர்களிடம் சொல்வேன். என் பயணம் நான் ஆசைப்பட்டதுபோலவே நடப்பதில் சந்தோஷம். சகலவிதமான மனிதர்களையும் சந்திப்பதே வேலை. தாங்கள் அறிந்ததை, தெரிந்ததை, புரிந்ததை, ரசித்ததை, தவித்ததை, சாதித்ததை, சமாளித்ததை, கவனித்ததை, அனுபவித்ததை, ஆசைப்பட்டதை என்னிடம் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள். இங்கே, என் பார்வையில் கொஞ்சம் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்!

'பராக்கு பார்க்காதே... நேரா ரோட்டைப் பார்த்து நட!', 'அங்க என்ன சிரிப்பு, வேலையை வேகமா முடிங்க!' இப்படிச் செய்கிற வேலையில் கவனமாக இருங்கள் என்கிற நோக்கில் சொல்லப்படுகிற வார்த்தை களுக்குப் பின்னால், 'வேலையைக் கவனி... வேடிக்கை எல்லாம் அப்புறம் வைத்துக்கொள்!' என்ற அர்த்தம் பொதிந்துகிடக்கிறது.

நல்ல விஷயம்தான். ஆனால், தேமே என்று வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தால், வாழ்க்கை எப்படிச் சுகமாக இருக்கும்? காரியத்தில் கருத்தாக இருக்க வேண்டும் என்பது சரி. ஆனால், அதிதீவிரமாக, பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை, நம்மைச் சுற்றி நடக்கிற விஷயங்களைப் பார்த்து ரசிக்கக் கூடாது என்ற உணர்வையும் விதைத்து விடுவது சரியா?

இயற்கையை ரசிப்பதற்காக இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊட்டிக்கோ, கொடைக் கானலுக்கோ போய் வருவதுதான் நம்மில் பலருக்கு ரசனையாக வாழ்வது. 'நடைமுறை வாழ்க்கையில் பொறுப்பாக இருக்க வேண்டும். பிறகு, தனியாக ரசிக்க வேண்டும்!' - இதுதான் நம்மில் பெரும்பாலானோரின் திட்டம். அதாவது இரண்டுமே வேலையாக இருக்க வேண்டும்.

ரசிப்பதற்குத் தகுதியான விஷயங்கள், அதற்கான நேரம் என்று தனியே ஒரு பட்டியலை வைத்துக்கொண்டு வாழ்ந்தால், நடைமுறை வாழ்க்கையே ஏதோ பெரிய வேலையைச் செய்வதுபோலத்தான் இருக்கும்.

அதிகாலையில் எழுந்து பரபரவென, டிராக்ஸ், ஷு சகிதம் வாக்கிங் கிளம்பும் பலர் காதில் வாக்மேன் பொருத்தி இருப்பார்கள். நடக்கிற களைப்பு தெரியாமல் இருக்கவும், காலையில் சுகமான பாடல்களைக் கேட்பதுமாக அந்த ஒரு மணி நேரத்தைச் செலவிடுவது நல்ல திட்டம்தான்.

காலையில் எழுந்து நடப்பது என்பதே சுகம்தானே. அப்புறம் என்ன காதில் வாக்மேன்... களைப்பு தெரியாமல் இருக்கவா? செய்கிற வேலையோடு தொடர்புடைய இன்ன பிற விஷயங்கள் ரசிப்புக்குரியன அல்ல என்ற தீர்மானம்தான் காதில் வாக்மேனாகத் தொங்குகிறது.

நடக்கும்போது மூச்சு வாங்குவதையும், உடல் களைத்துப்போவதையும், வியர்வை வழிந்து கண் வழியே இறங்குவதையும் ரசித்துக்கொண்டே விடு விடுவென நடந்து செல்பவர்களையும் நீங்கள் கவனித்து இருக்கக்கூடும்.

அதிகாலை என்பதே அனுபவித்து லயித்துப்போகிற அளவுக்கு ஆனந்தமான உலகம்தானே. பகலில் நீங்கள் கேட்டறியாத பறவைகளின் பாடல்கள், 'குட்மார்னிங் சார்!' நண்பர்களின் பாசப் புன்னகைகள், பேப்பர் போடும் பையனின் சைக்கிள் பெல் ஓசை, எங்கோ டீக்கடையில் ஒலிக்கிற 'சஷ்டியை நோக்க சரவண பவனார்', அப்பாவைப்போலவே அதே கலர் டி-ஷர்ட் போட்டுக்கொண்டு தந்தையின் ஸ்டைலில் வாக்கிங் போக முயற்சிக்கிற குட்டிப் பையன், 'யாருப்பா நீ... ஏரியாவுக்குப் புதுசா?' என்கிற தோரணையில் லுக் விடுகிற ஜிம்மிகள், மப்ளர் தாத்தாக்கள், புதிய சுவரொட்டிகள், இப்படி ரசித்து அனுபவிக்க ஆயிரமாயிரம் விஷயங்கள் கிடைக்கும்போது, தேமே என்று மூச்சிரைக்க வாக்கிங் போவதால் மட்டும் என்ன புண்ணியம்?

'வாக்கிங் போக வந்தியா... வேடிக்கை பார்க்க வந்தியா?' என்பவர்களுக்கு... உண்மைதான்... வந்தது என்னவோ வாக்கிங் போகத்தான். ஆனால், சுற்றி நடக்கிற வாழ்க்கையையும் ரசிக்க லாமே!

கூடாது. ஏன்னா, எந்த வேலையைச் செய்ய வந்தோமோ, அந்த வேலை கெட்டு டும். இந்தப் பயம்தான் 'ரசிப்பதெற்கென்று தனியாக நேரம் ஒதுக்கிக்கொள்!' என்கிற அலாரத்தை அடிக்கிறது. இன்னொரு பக்கம், ரசித்தல் என்பது கேளிக்கைகளுடன் தொடர்புடைய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

ரசித்தல் என்பது வாழ்வியலின் ஒரு பகுதி. பக்கத்தில் நிற்கிற காருக்குள் இருந்து தன் பிஞ்சு விரல்களால் உங்களுக்கு டாட்டா காட்டிச் சிரிக்கிற குழந்தையின் அழகை ரசித்தால், உங்கள் இதயம் மலரும். ஆனால், சிக்னல் செகண்டுகளையே வெறித்துப் பார்க்கிற மனசுதான் இன்றைக்குப் பலரின் மனசும்!

இயற்கைக் காட்சிகள், மீன் தொட்டிக்குள் நீந்தும் வண்ண மீன்கள், வேலைப் பாடுகளுடன் மாமனார் வீட்டில் இருந்து வாங்கிக் கொடுத்த தேக்கு மரக் கட்டில், உங்கள் காரின் பின் கண்ணாடியில் எழுதப்பட்ட 'catch me if you can' வாசகம், உலக சினிமா டி.வி.டி. கலெக்ஷன் என அடுத்தவர்களிடம் பெருமை அடித்துக்கொள்வதற்காகவே படிக்கிற சில புத்தகங்கள் என்று நம்மில் பலரின் ரசனைகள் ஏற்பாட்டு ரசனைகளாகவே இருக்கின்றன.

முதலில் வேலையோடு தொடர்புடைய விஷயங்களை ரசியுங்கள். உங்கள் வேலையை ரசித்துச் செய்வதற்கான முதல்படி அதுதான்.

என் வேலை சார்ந்து நிறைய சாதனை யாளர்களைச் சந்தித்தது உண்டு. அவர்கள் அனைவரிடமும் நான் பார்த்த ஓர் ஒற்றுமை, தங்கள் வாழ்க்கையை அவர்கள் ரசிக்கிற அழகும், அதில் லயிக்கிற பாங்கும்தான்.

ஒரு முறை முதல்வர் கலைஞருடன் ஒரு பேட்டி. அறிவாலயத்தில் அதிகாலையில் அவர் வாக்கிங் போகும்போது பேட்டி எடுப்பதாகத் திட்டம். காலை 5 மணி. பரபரப்பாக கலைஞர் அரங்கத்தின் முன்னால் ஏற்பாடுகள் நடக்கின்றன. 'மாப்ள, இருக்கிற Light எல்லாத்தையும் போடச் சொல்லு. எக்ஸ்போஸர் லெவல் பார்த்துக்கங்க', 'அவர் வந்து இறங்குனதுல இருந்து அப்படியே ரோல் பண்றோம்' என டென்ஷன்... டென்ஷன்... டென்ஷன்!

5.15 மணி இருக்கும் கார்கள் வருவது மாதிரி தெரிந்தது. 5.30-க்கு வருவதாகச் சொன்ன முதல்வர் முன்னதாகவே வந்துவிட்டார். தடதடவென நான் ஓட, கேமராமேன்கள் துரத்த, 'அப்படியே ரோல் பண்ணுங்க' என்று சொல்லிவிட்டு, அவருடன் நடந்தவாறே என் முதல் கேள்வியை ஆரம்பித்தேன். கேள்விகூட முடியவில்லை. பின்னால் இருந்து என் காஸ்ட்யூமர், 'சார்... சார்...' என்கிறார் கிசுகிசுப்பாக.

எரிச்சலுடன் திரும்பினால், அவர் கையில் என் கோட். அவசரத்தில் கோட் போட மறந்துவிட்டேன். கேள்வியை நிறுத்தாமல், படபடப்பை வெளிக்காட்டாமல் கோட்டில் கைகளை நுழைத்தவாறே கேள்வியைத் தொடர்ந்தேன்.

சட்டென்று நின்ற முதல்வர் சிரித்தவாறே, 'ஓ, சரி சரி, அப்ப நான்தான் உன்னைப் பேட்டி எடுக்கப் போறேனா?' என்று கேலியாகச் சிரித்தார்.

'என்னப்பா இது?' என எரிச்சல் காட்டாமல் அவர் அடித்த ஜோக், எல்லோரின் டென்ஷனையும் காணாமல் போகச் செய்தது.

நீயும் நானும் ! - 01

அவர் வந்தது என்னவோ பேட்டிக்குத்தான். ஆனால், அந்த வாக்கிங் பேட்டியில் அவரிடம் வாலாட்டிய நாய்க் குட்டிக்கு பிஸ்கட் போட்டதில் இருந்து, அங்கிருந்த செடி ஒன்று விடுவிடுவென்று வளர்ந்துவிட்டது குறித்த தன் வியப்பைப் பகிர்ந்து கொண்டது வரை, ரசனையான பல தருணங்களை அவர் தவற விடவில்லை.

இதுதான்... இதுவேதான், பரபரப்புகளுக்கு மத்தியிலும் பட்டாம்பூச்சியைக் கவனிக்கிற ரசனை... அதுதான் அவர்களை இயங்கவைக்கிறது. களைப்படையாமல் பார்த்துக் கொள்கிறது. வித்தியாசமாக யோசிக்கத் தூண்டுகிறது. விறுவிறுப்பாகச் செயல்படவைக்கிறது.

தி.நகரில் ஒரு டீக்கடை உண்டு. அந்தப் பக்கம் போனால், நிச்சயமாக அங்கே வண்டியை நிறுத்தி ஒரு டீ சாப்பிடுவேன். 'வாங்க தம்பி, இன்னிக்கு ஷுட்டிங் இல்லையா?' என்று கேட்டுக்கொண்டே அந்த மாஸ்டர் டீ ஆற்றுகிற அழகும், கிளாஸைச் சுழற்றிவிடுகிற லாகவமும் அவ்வளவு ஸ்டைலாக இருக்கும். ஆனால் பெரும்பாலும், 'ஒரு டீ குடுப்பா' என்று சொல்லிவிட்டு, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நடந்தபடி செல்போனை நோண்டுகிற நாம், ஒரு புன்னகையைச் செலவிட மறுப்பதால், ஓர் இதயத்தில் இடம்பெறும் வாய்ப்பை இழக்கிறோம்.

உங்கள் உதடுகள் கடைசியாக ஒரு பாடலை உச்சரித்தது எப்போது? மனதுக்கு இனிய அந்தப் பாடல் மறுபடியும் இப்போது ஒலிக்கட்டுமே. வாழ்வு இனிக்கட்டுமே!

- ஒரு சிறிய இடைவேளை

 
நீயும் நானும் ! - 01
நீயும் நானும் ! - 01