அமெரிக்காவும், ஐரோப்பாவும் பார்த்துப்பயந்து கிடக்கிற இந்த இளைஞர் சக்தி, 'சம்பாதித்தால் போதும் - சௌகர்யமாக வாழலாம்' என்று இந்த வட்டத்துக்குள் செக்கு மாடாகச் சுற்றி வருகிறது. தன்னலம் பேணுதல் சரிதான். ஆனால், தன்னைத் தாண்டி, தன் வீட்டுக்கு வெளியே, வீதி, ஊர், மாநிலம், தேசம் என்று எல்லைகள் கடக்க எழுந்து வர முடியாமல் அந்த வட்டம் வாழ்க்கையைச்சுருக்கி விடுகிறது.
இந்த உலகம் நமது பலங்களை அறிந்துவைத்துஇருப்பதைப்போல, நமது பலவீனங்களையும்அறிந்தே இருக்கிறது. இடமும் வலமும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க முடியாத அளவுக்கு இளைஞர் கூட்டத்தை ஏ.டி.எம். மெஷின் ஆக்குவதற்கான வேலைகள் ஜரூராக நடக்கின்றன. அப்புறம்எப்படி இந்தப் புலம்பலை நிறுத்துவது?
விளைவு, கட்-ஆஃப் மார்க்குகளுக்கு மத்தியில் சமூக சிந்தனைகள் செத்துப்போகின்றன. விளைவு, இளைஞன் பொறுப்பாக இல்லை என்று குடும்பமும், சமூகமும் ஒருசேரப் புலம்புகின்றன!
சர்வதேசச் செய்தியாளர் மாநாட்டுக்கு அமெரிக்கா போயிருந்தேன். அப்போதைய அமெரிக்க உள் துறை அமைச்சரான காலின் பாவலைச் சந்திக்க நேர்ந்தது. சர்வதேசச் செய்தியாளர்களுடன் ஒரு விருந்து. அப்போது பேச்சுவாக்கில் அவர் ஒரு விஷயம் சொன்னார், ''இந்திய இளைஞர் சக்தி ஒன்றிணைக்கப்பட வேண்டும்!''
இதை யாரோ ஒருவரின் பார்வையாக எடுத்துக்கொள்வதற்கு இல்லை. காரணம், இந்தியாவின் பலங்களையும் பலவீனங்களையும் அங்குலம் அங்குலமாக அளந்துகொண்டு இருக்கும் அமெரிக்காவின் பார்வை இது.
இன்றைக்கும் அடுத்தவனுக்கு ஒன்று என்றால் ஓடிப் போய் நிற்கிற கூட்டம்தான் நாம். சக மனிதனைத் தீவிரமாக நேசிக்கிற ஒவ்வொருவரும் பொறுப்பானவர்கள்தான். அந்த நேசிப்புதான் நியாயமாக நடந்துகொள்ளச் சொல்கிறது. வாஞ்சையாக வாழச் சொல்கிறது.
சமூகத்தின் ஏழ்மை மீதும் இயலாமையின் மீதும் அக்கறை எடுத்துக்கொள்ள சொல்லித்தரப்படாத இளைஞன், எப்படிக் குடும்பத்தின்மீது அக்கறையோடு இருக்க முடியும்? 'எப்படியாவது நீ பிழைச்சுக்கோ' என்ற அறிவுரைகள், இளைஞர்கள் தங்களைத் தனித்தனி வியாபார கேந்திரங்களாகப் பார்க்கும் அளவுக்கு மாற்றி இருக்கிறது. ஆளப் பிறந்தவர்களை... வெறுமனே வாழப் பிறந்தவர்களாக ஆக்கியிருப்பது யார்?
வண்டலூர் ஜூவில் ஒரு சிங்கம் இருந்ததாம். சிங்கம் என்பதால், அதற்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட். மாட்டுக் கறி, ஆட்டுக் கறி என்று தினமும் தடபுடல் விருந்து. ஒருநாள் அந்த சிங்கத்தை அமெரிக்க ஜூவுக்கு மாற்றினார்கள். புதிய ஜூவுக்கு வந்த சிங்கத்துக்கு முதல் நாள் கேரட்டையும் பீட்ரூட்டையும் தின்னக் கொடுத்தார்கள். சரி தான் முதல் நாள் என்பதால் இப்படித் தருகி றார்கள் என்று சிங்கம் நினைத்தது.
ஆனால், பீட்ரூட்டும் கேரட்டும் மட்டும் மாறவே இல்லை. கோபமான சிங்கம், உணவு தருபவரிடம், ''என்னய்யா கிண்டலா பண்றீங்க? நான் சிங்கம்... காட்டுக்கே ராஜா. எனக்கு மாட்டுக் கறி தர வேண்டும்'' என்று சண்டை போட்டதாம். உணவு தருபவர் பொறுமையாகச் சொன்னாராம், ''நீ சிங்கம்தான். உனக்கு விருந்து வைக்கணும்தான். ஆனா, நீ இங்கே வந்தது ஒரு குரங்கோட பாஸ்போர்ட்டில். அதனால, உனக்குக் குரங்குக்குத் தருவதுதான் கொடுக்க முடியும்!''
இப்படி நாமும் நிறைய நேரம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து, குரங்கின் பாஸ் போர்ட்டில்தான் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம். இத்தனை கோடி இளைஞர்களை வைத்துக்கொண்டு, அறிவும், திறமையும், இளமையும், தகிக்கிற ஆற்றலையும் வைத்துக்கொண்டு, விவரம் புரியாமல் விழுந்துகிடப்பது யதார்த்தமான உண்மை தானே.
நாம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. சம்பாதித்தல்தான் வாழ்க்கை என்று பயிற்று விக்கப்பட்டு இருக்கிற சமூகத்தில், நம்பிக்கை தரும் இளைஞர்கள் நாலாபக்கமும் இருக்கிறார்கள். ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, ஆதரவற்ற சிறுவர்களின் கல்விக்குப் பொறுப்பேற்கிறார்கள்.
|