இனி, தன் வாழ்க்கை இந்தச் சுவர்களுக்குள்தான் என்று உணர்ந்து, மிச்சம் இருக்கும் வாழ்க்கையைச் சேவை செய்வது என்று முடிவுசெய்து, செருப்பு தைக்கப் பழகுகிறான். பிறகு, சிறையில் உள்ள கைதிகளுக்கு செருப்புத் தைத்து இலவசமாகத் தருகிறான். யாரோடும் ஒரு வார்த்தை பேசுவது கிடையாது. அவனை மற்ற கைதிகள் அன்பாக நடத்துகிறார்கள். காலம் கடந்து போகிறது. குளிரும், பனியும், கோடையுமாகப் பகலிரவுகள் மாறுகின்றன.
சிறைக்குப் புதிய கைதி ஒருவன் வந்து சேர்கிறான். அவன், வயதான இந்த வணிகனிடம் நெருக்கமாகிவிடுகிறான். ஒருநாள் இரவு, வணிகன் செய்ததாக இவ்வளவு நாள் நம்பப்பட்டு வந்த கொலையைச் செய்தது தானே என்று சொல்கிறான். அதைக் கேட்டதும் கிழவனுக்கு உடம்பு நடுங்குகிறது. இந்த உண்மையை உல குக்கு எப்படித் தெரியவைப்பது என்று தடுமாறுகிறான். இரவெல்லாம் அழுது புலம்புகிறான்.
அடுத்த நாள் புதிய கைதி சிறையில் இருந்து தப்பிப்போக முயற்சிக்கிறான். அதைக் கிழவன் பார்க்கிறான். அவனைத் தடுக்கவில்லை. ஆனால், தப்பிப்போன கைதி சிறைக் காவலர்களால் கைது செய்யப்படுகிறான். விசாரணை நடக்கிறது. கிழவனைச் சாட்சியாக அழைக்கிறார்கள். இப்போது கிழவன் நினைத்தால், அந்தப் புதிய கைதியைக் காட்டிக்கொடுத்துவிடலாம். சிறையைவிட்டுத் தப்பியதற்காக உடனே மரண தண்டனை வழங்கப்பட்டுவிடும்.
ஆனால் கிழவன், அவனை தான்தான் வேலையாக அனுப்பியதாகப் பொய் சொல்கிறான். தண்டனையில் இருந்து புதிய கைதி தப்பிக்கிறான். ஆனால், தான் செய்த குற்றம் ஒன்றுக்காக இத்தனை வருடங்கள் கிழவன் சிறையில் இருக்கிறானே என்ற குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல், 'இவர் நிரபராதி. நான்தான் அந்தக் கொலையைச் செய்தேன்' என்றி கதறி அழுகிறான் புதிய கைதி. கிழவன் இந்த ஒரு வார்த்தைக்காக எத்தனை நாட்களாகக் காத்திருந்தேன் என்று கண்ணீர் மல்கச் சொல்லி, நிம்மதியாக இறந்துவிடுகிறான். வார்த்தைகள் உலகைக் காப்பாற்றி இருக்கின்றன... மாற்றியிருக்கின்றன... வரலாறு கற்றுத்தரும் பாடம் அதுதான்.
10 வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்நாட்டுக் கலவரம் பற்றி ஒரு நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அதற்காகக் கைது செய்யப்பட்ட பலர் கொண்டுவரப்பட்டனர். அதில் வயதான ஆதிவாசி ஒருவர் இருந்தார். கோர்ட் துவங்கியது முதலே அவர் சாட்சிக் கூண்டைப் பார்த்தபடியே இருந்தார். திடீரென எழுந்துபோய், தானே சாட்சிக் கூண்டில் நின்றுகொண்டார். நீதிபதிகள் அவரிடம், 'தாங்கள் அழைக்கும்போது வந்து சொன்னால்போதும், இப்போது போங்கள்' என்று சொன்னார்கள்.
அதற்கு அந்த ஆதிவாசி, 'நீங்கள் அழைக்கும்போது என் மனதில் சொற்கள் தோன்றாது. மனதில் சொற்களைத் தேக்கிவைத்திருப்பது மிகப் பெரிய வேதனை. அந்த சொற்கள் பாம்பின் விஷம்போல என் உடலை வருத்துகின்றன. எங்களால் சொற்களைச் சேகரித்துவைத்து நினைத்தபோது பயன்படுத்தத் தெரியாது. மனதில் எப்போதாவதுதான் சொற்கள் முளைக்கின்றன. அதை உடனே வெளிப்படுத்திவிடுவோம்' என்று சொல்லி நீதிமன்ற உத்தரவை மீறி தன் மனதில் உள்ள உண்மைகளைக் கொட்டிவிடுகிறார்.
உண்மையில் நம்மில் பலரும் அந்த ஆப்பிரிக்க மனிதரைப் போலவே மனதில் வலி நிரம்பிய சொற்களைச் சுமந்துகொண்டே அலைகிறோம். அதைப் பகிர்ந்துகொள்ள ஆள் இல்லை. நமது குழந்தைகள், மனைவி, நண்பர்கள், பெற்றவர்களிடம் பேசுவதற்கான சொற்களை இழந்துபோயிருக்கிறோம். நமது சொல்லற்ற தனிமையைத்தான் தொலைக்காட்சியும் கேளிக்கை ஊடகங்களும் கைப்பற்றிக்கொண்டுவிட்டன. நம்மை அடையாளம்கொள்ளவைப்பவை நமது சொற்களே! அதைக் கண்டடைவதும், கவனமாகப் பிரயோகம் செய்வதும், வளர்த்துக்கொள்வதும் நமது அவசியமான செயல்கள் ஆகும்.
இன்னும் பரவும்...
|