கவிஞர் வைரமுத்துவுடன் ஒரு பேட்டி. "உங்கள் துறையில் வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரும். அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?” என்று கேட்டேன்.
"என்னுடைய பார்வையில் வெற்றி என்றும் தோல்வி என்றும் ஒன்று கிடையாது. அது உங்கள் பார்வைதான். இந்த வருடம் எனக்குத் தேசிய விருது கிடைத்தது உங்கள் பார்வையில் வெற்றியாகக் கருதினால், அடுத்த வருடம் எனக்குக் கிடைக்க£மல் போனால், அது தோல்வியாகக் கருதப்படலாம். என்னைப் பொறுத்தவரை இவை இரண்டுமே இரு வேறு சம்பவங்கள். வாழ்க்கை என்பது சம்பவங்களால் ஆனது. அவ்வளவுதான்!'' என்றார்.
தோல்வி என்பதும் வாழ்வின் ஒரு சம்பவம் என்று எல்லோராலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடிவது இல்லை. காரணம், தோல்வியை யாரும் கொண்டாடுவது இல்லை. வெற்றி என்பது என்ன, தோல்வி என்பது என்ன என்ற இரண்டையும் யாரோதான் தீர்மானிக்கிறார்கள். அந்த அளவுகோலுக்குள் நாம் செய்கிற வேலையை அடக்க முயற்சிக்கும்போது மூச்சு முட்டுகிறது. இலக்கு, குறிக்கோள், அதை அடைவதற்கான முயற்சி அத்தனையும் என்னுடையதாக இருக்கும்போது அதன் வெற்றி, தோல்வியை எப்படி அடுத்தவர் தீர்மானிக்க முடியும்? ஆனால், அப்படித்தானே நடக்கிறது!
வெற்றி என்பது அடுத்தவருக்கு நிரூபித்துக் காட்டுவதற்கான விஷயம் என்கிற எண்ணம் மாறாத வரை, தோல்விகளின் வலிகளில் இருந்து விலகி இருக்க முடியாது. இந்த உலகத்துக்கான மாபெரும் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய யாரும் ஊருக்கு நிரூபிப்பதற்காக அதைச் செய்யவில்லை. செய்கிற வேலையில் அவர்களுக்கு இருந்த தீராக் காதல் அவர்களைத் தொடர்ந்து போராடவைத்தது.
'ஆசைப்பட்டதை எங்க செய்யவிடுறாங்க? அப்பாவுக்காக இன்ஜினீயரிங் படிக்கிறேன்', 'நான் டாக்டர் ஆகணும்கிறது எங்க அம்மாவோட ஆசை. கிடைக்கலை. அதனால, பி.ஏ., ஹிஸ்ட்ரி படிக்கிறேன்'...
நீங்களோ, நானோ யாருக்குமே ஆசைப்பட்டது அனைத்தும் கிடைத்துவிடுவது இல்லை. ஆனால், 100-க்கு 80 பேர் ஆசைப்பட்டதை நோக்கிய பயணத்தைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறோம். 'அவ்வளவுதான், முடிஞ்சுபோச்சு' என்று அவசர முடிவுக்கு வந்துவிடுகிறோம்.
விரும்பிய விஷயத்தின் மீது ஆழமான, ஆத்மார்த்தமான ஈர்ப்பு இருக்கும் என்றால், அது எப்படியும் நம்மிடம் வந்துதானே ஆக வேண்டும். இருந்தாலும் பாதிக் கிணறு தாண்டுவதற்குள் பயந்து திரும்பிவிடுவதற்கான காரணம், பயம். செய்கிற வேலையில் காதல் இல்லாமல் செய்கிறபோது தடைகளும், சவால்களும் பயமுறுத்துகின்றன. ஆத்மார்த்தமாகச் செய்யும்போது அவை உத்வேகம் தரும் அனுபவங்களாக மாறுகின்றன.
அந்தப் பெண் யாரென்றே தெரியாது. எந்த ஊர்? எங்கு படிக்கிறாள்? அம்மா, அப்பா, யார்? அண்ணன்காரன் அடிப்பானா? இதெல்லாம் தாண்டி அந்தப் பெண்ணுக்கு என்னைப் பிடிக்குமா? ஏரியா பசங்க பிடிச்சு உதைச்சா தப்பிக்க முடியுமா? நம்ம வீட்டுல சாமியாடுவாங்களே? 'அதெல்லாம் எனக்குத் தெரியாது... அந்தப் பொண்ணு எனக்கு வேணும். என் வாழ்க்கை முழுக்க வேணும்' என்று எப்படி ஒரு மனசுக்குத் தோன்றுகிறது?
பிடித்த விஷயத்தை அடைய வேண்டும் என்பதில் இருக்கிற ஆழமான ஈடுபாடு. நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல; எதை நோக்கிச் செல்கிறீர்கள் என்பதே முக்கியம்.
வரலாறுதான் கஜினி முகம்மது 16 முறை தோற்றதாகச் சொல்கிறது. ஆனால், கஜினி முகம்மது 16 முறை முயற்சித்து 17-வது முறை சோமநாதபுரத்தைக் கைப்பற்றினான் என்பதுதான் விஷயம்.
|