ஓய்வுபெற்ற பிறகு, அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற பேச்சு வந்தது. கோயில்களுக்கு «க்ஷத்ராடனம் போய் வரலாம், பகுதி நேர வேலை செய்யலாம், வீட்டில் முழுமையாக ஓய்வு எடுக்கலாம் என்று பல்வேறு யோசனைகள் சொல்லப்பட்டன. ஆனால், நண்பரின் தந்தை எல்லாவற்றையும் மறுத்துவிட்டு, தான் படிக்கப் போவதாகச் சொன்னார். பலரும் அவரைக் கேலியாகப் பார்த்தார்கள். அவரோ தொலைதூரக் கல்வி மூலமாக தான் எம்.ஏ., படிக்கப் போவதாகச் சொன்னார்.
இனிமேல் எதற்காகப் படிக்க வேண்டும் என்று உறவினர்கள் கேட்டபோது, அவர் உற்சாகத்துடன், "இனிமேல்தான் படிக்க வேண்டும். 20 வயதில் கல்லூரியில் சேர்ந்து வரலாறு படிக்க வேண்டும் என்று விரும்பினேன். வரலாறு படித்தால் வேலை கிடைக்காது என்று சொல்லி, என்னை சிவில் இன்ஜினீயரிங் படிக்கவைத்தார்கள். அதைப் படித்து வேலைக்குப் போய் 35 வருடங்கள் வேலையும் பார்த்து முடித்துவிட்டேன். ஆனால், எம்.ஏ., வரலாறு படிக்க வேண்டும் என்ற ஆசை அடிமனதில் அப்படியே இருக்கிறது.
இப்போதுதான் சுதந்திரமாக நான் படிக்க முடியும். வேலையை எதிர்பார்க்காமல் படிக்கும்போதுதான் படிப்பின் உண்மையான அர்த்தம் புரியும். ஓய்வுபெற்ற பிறகு படிக்கத் துவங்குவதால், மனது மீண்டும் மாணவப் பருவத்தின் உற்சாகத்துக்குத் திரும்புகிறது. பேரன் பேத்திகளுடன் போட்டியிட்டுக்கொண்டு நானும் படிக்கப்போகிறேன் என்பது சந்தோஷம் தருவதாக இருக்கிறது. என்னைப் புதுப்பித்துக்கொள்வதற்கு இதைவிட வேறு நல்ல வழி எனக்குத் தெரியவில்லை'' என்றார்.
எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. 58 வயதில் வாழ்க்கை முடிந்துவிட்டதோ என்று தடுமாறும் பலருக்கு நடுவில், வாழ்க்கையை இப்படிப் புதுப்பித்துக்கொள்ள அவர் மேற்கொண்ட விருப்பம் உன்னதமாக இருந்தது. அவரது விருப்பத்தை வீடும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டது. நண்பரின் தந்தை, இரண்டு ஆண்டுகளில் எம்.ஏ., படித்து முடித்து, முதல் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றுவிட்டார். அவருக்கு நேரில் சென்று வாழ்த்து சொன்னேன். உற்சாகத்துடன் அவர் தன் மனதில் இருந்ததைப் பகிர்ந்துகொண்டார்.
"இத்தனை வருட வாழ்வில் நான் அடைந்த மிகப் பெரிய சந்தோஷம் இதுவே. இந்த இரண்டு ஆண்டுகளில் என்னை ஒரு மாணவனைப்போலவே நினைத்துக்கொண்டேன். நூலகத்துக்குச் சென்று படிப்பது, பரீட்சைக்குத் தயார்செய்வது, என்னோடு படிக்கும் இளைஞர்களுடன் கலந்து உரையாடுவது என்று நாட்கள் போனதே தெரியவில்லை.
பரீட்சைக்கு முதல் நாள் என்னுடைய பேத்தி எனக்காகப் பேனா வாங்கிப் பரிசு தந்தாள். வீடே உற்சாகமாக என்னைப் பரீட்சைக்கு அனுப்பிவைத்தது. எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பரீட்சை எழுதப் போகிறேன் என்று உள்ளூர நடுக்கமாக இருந்தது. பள்ளி வயதில் வீட்டில் அம்மா என் தலைக்கு எண்ணெய் தேய்த்து, நெற்றியில் திருநீறு பூசி மனம் நிறைய வாழ்த்தி பரீட்சைக்கு அனுப்பிவைத்தது நினைவில் ஊசலாடியது. அந்த மனவெழுச்சியுடன் சென்று பரீட்சை எழுதினேன். ஜெயித்தும்விட்டேன். இனி, அடுத்து எம்.ஏ., பிலாசஃபி படிக்கலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்'' என்றார்.
கற்றல் தரும் சந்தோஷத்துக்கு இணையாக வேறு என்ன இருக்கிறது! என்ன படிப்பது என்பது அவரவர் விருப்பம். சிலருக்கு அது இசை, நாடகம், ஓவியம் போன்ற கலைத் துறையாக இருக்கலாம். சிலருக்கு விளையாட்டாக இருக்கலாம். விரும்பினால், வேற்று மொழிகளில் ஏதாவது ஒன் றைக் கற்றுக்கொள்ளலாம். கற்றுக்கொள்வதால் இனி என்ன பிரயோசனம் இருக்கிறது என்று யோசிக்க வேண்டாம். மாறாக, எந்த ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்ளும்போதும் நம் மனது விசாலமடைகிறது. அக்கறைகொள்ளத் துவங்குகிறது. நம்மைப் புத்துருவாக்கம் செய்யவைக்கிறது. அதற்காகவாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
|