மறுநாள் காலை அவன் அறைக்கு கம்பனா போன் செய்து, 'உன் அறையில் தண்ணீர் வருகிறதா?' என்று கேட்கிறான். பெரின் திறந்து பார்த்துவிட்டு, 'நன்றாக வருகிறதே' என்கிறான். ஆனால், கம்பனா அறையில் தண்ணீர் வரவில்லை. குளித்து ரெடியாகச் சாப்பிட வருகிறான் பெரின். ஆனால், அழுக்கடைந்து போய் வந்து உட்காருகிறான் கம்பனா. பெரினுக்கு மிக ருசியான உணவு வருகிறது. ஆனால், கம்பனாவின் மீது சூப்பைக் கொட்டிவிடுகிறார் சர்வர்.
அதிர்ஷ்டம் இப்போது பெரின் பக்கம் திரும்பி இருக்கிறது. அவனது துரதிர்ஷ்டம் தன்னைப் பிடித்துக்கொண்டுவிட்டது என்று கத்துகிறான் கம்பனா. அவன் பயந்ததுபோலவே அடுத்தடுத்து நடக்கிறது. கம்பனா எதைச் செய்தாலும் அது தப்பாகி, பிரச்னை உருவாகிறது. ஆனால், இத்தனை நாளாக அதிர்ஷ்டம் கெட்டவன் என்று சபிக்கப்பட்ட பெரின், எதைச் செய்யும்போதும் அது வெற்றியாகி, தனி ஆளாக அவனே அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். படத்தின் முடிவில் அவ்வளவு பெரிய கோடீஸ்வரி மேரி, பெரினை விரும்பத் துவங்குகிறாள்.
படத்தின் ஒரு காட்சியில் அவனது அதிர்ஷ்டம் எப்படிச் சாத்தியமானது என்று கேட்டபோது பெரின் சொல்கிறான்,
''தனது திறமைகளின் மீது நம்பிக்கை இல்லாதவன்தான் அதிர்ஷ்டத்தை நம்புகிறான். தனது சுய உழைப்பையும், தனித்திறமையையும் நம்புகிறவன் ஒருபோதும் அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை. அவன் அதிர்ஷ்டம் தன்னைத் தேடி வரும் என்று காத்திருப்பதில்லை. அதிர்ஷ்டத்தை உருவாக்கிக்கொள்கிறான். என்னை நான் உணரவே இல்லை. அதனால்தான் அத்தனை பிரச்னைகள். எனது தவறுகளை அடையாளம் கண்டு சரிசெய்தேன். எது எனது குறையோ அதைவைத்தே எனது பலத்தை உருவாக்கினேன். அதே நேரம், கம்பனா தன்னைப்பற்றி சுயபெருமை அடித்துகொண்டு இருந்தான். அதுதான் அவனது துரதிருஷ்டமாகியது'' என்கிறான்.
வாய்விட்டுச் சிரிக்கவைத்த இந்தப் படம், மனித வாழ்வில் எது அதிர்ஷ்டம் என்பதை ஆராய்கிறது. கடைசி வரை பெரின் எதையும் வேடிக்கையாகவே எதிர்கொள்கிறான். தனது கஷ்டங்களுக்குப் புலம்புவது இல்லை. தனது திறமைகளுக்காகப் புல்லரிப்பதில்லை. அவன் ஒவ்வொன்றையும் முழுமையாக எதிர்கொள்கிறான். அதுவே அவனது பலம். படத்தின் அடிநாதம்போல நம்பிக்கையின் வெளிச்சம் பரவிக்கொண்டு இருக்கிறது.
நம் காலம் இலவசத்தின் காலம். எதை இலவசமாகத் தந்தாலும் வாங்கிக்கொள்ள ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். வீட்டுக் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் பினாயில் விற்பவன், உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் வந்திருக்கிறது என்று ஒரு துடைப்பத்தைப் பரிசாகத் தந்து போகிறான். அதை வாங்கத் தள்ளுமுள்ளு. அடிதடி போட்டிகள். காத்திருப்புகள்.
இன்னொரு பக்கம் தொலைக்காட்சியில் விருப்பமான பாடல் ஒன்றைக் கேட்பதற்கு தொலைபேசி இணைப்பு கிடைத்துவிட்டால்கூட, இன்னிக்கு நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று பெருமைப்படும் மத்தியதரத்து மனிதர்கள். 'நல்லவேளை! ஹோம் வொர்க் இல்லே. ஐ ஆம் லக்கி' என்று குதூகலிக்கும் பள்ளிக் குழந்தை என்று அதிர்ஷ்டம் நம்மிடம் சிக்கிக்கொண்டு பாடாய்ப்படுகிறது. விளையாட்டில் துவங்கி, விண்வெளிப் பயணம் வரை உழைப்பைவிட அதிர்ஷ்டமே பிரதானமாகப் பேசப்படுகிறது.
இந்த அலுப்புகள், சலிப்புகள் நமது பொது வருத்தங்களை ஒன்றாகத் தொகுத்து மர்ஃபி விதிகள் என்று வைத்திருக்கிறார்கள். நமக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்குதோ என்று நாம் சலித்துக்கொள்ளும் தருணங்களைத்தான் மர்ஃபி விதி நினைவூட்டுகிறது. எட்வர்ட் மர்ஃபி தொகுத்த விதிகள். நம் அதிர்ஷ்டக் குறைவின் அடையாளச் சின்னங்கள். அல்லது ஆதங்கங்கள்.
|