திடீரென நீங்கள் ஒரு வாசனையாக மாற வேண்டும் என்று சொன்னால், என்ன வாசனையைத் தேர்வு செய்வீர்கள்? நிறம் என்று கேட்டால்கூடச் சட்டென ஒரு நிறத்தைச் சொல்லிவிடுவோம். யாராக மாற விருப்பம் என்றால், எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், ஒரு வாசனையாக மாற விருப்பம் என்றால், என்ன வாசனையைத் தேர்வு செய்வது? எது நம் மனதின் நீங்காத வாசனை?
எலினார் அபோட் என்ற அமெரிக்கப் பெ2ண் எழுத்தாளர், இதை வைத்து ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அந்தக் கதையில் இரண்டு குழந்தைகள் சாலையில் போகிற வருகிறவர்களை நிறுத்தி, 'நீங்கள் என்ன வாசனையாக மாற விரும்புகிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். 'இது என்ன அசட்டுத்தனமான கேள்வி?' என்று ஒருவர் எரிச்சல் படுகிறார். மற்றவரோ, 'தனக்கு இதற்கெல்லாம் நேரமில்லை' என்று ஒதுங்கிப் போகிறார்.
ஒரு நடுத்தர வயதுப் பெண், அவர்கள் கேள்வியைக் கண்டு ஆச்சர்யமடைகிறாள். உடனே, பதில் சொல்ல முடியாமல் யோசிக்கிறாள். குழந்தைகள் அவள் பின்னாடியே நடக்கிறார்கள்.
முடிவில் அந்தப் பெண், 'எனக்கு உலகிலேயே மிகவும் பிடித்தமான வாசனை, விளையாட்டு வீரன் காலில் அணிந்துள்ள கால் உறையிலுள்ள வியர்வையின் வாசம். அது எவ்வளவு அற்புதமானது தெரியுமா? விளையாட்டு வீரன் தன்னை மறந்து விளையாடுகிறான். கால்கள்தான் அவனது பலம். ஓடி ஓடி அந்தக் கால்கள் மைதானத்தை எத்தனையோ வழிகளில் கடக்கின்றன. வியர்வை அவன் காலணியை நனைக்கிறது. அந்தக் காலுறையில் ஒரு தனித்துவமான மணம் இருக்கிறது. அதை விளையாட்டு வீரன்கூடக் கவனிப்பதில்லை. என் மகன் ஓர் ஓட்டப் பந்தய வீரன். அவனது காலுறைகளில் அந்த வாசனை இருப்பதை அறிந்திருக்கிறேன். அதுதான் நான் மாற விரும்பும் வாசனை!' என்கிறாள்.
உண்மையில் நாம் ரோஜா, முல்லை என்று வாசனைப் பூக்களில் துவங்கி, உலகின் அரிதான வாசனைத் திரவியம் வரை பயன்படுத்துகிறோம். எல்லா வாசனையும் அதை நுகரும் நிமிடங்களில் மட்டுமே மனதில் தங்குகிறது. பிறகு, தானே கரைந்து போய்விடுகிறது. எந்த வாசனை நம் மனதின் அடியாழத்தில் எப்போதும் இருக்கிறது?
வாசனைகளுக்குத் தனியே பெயர்கள் இல்லை. நன்றாக இருக்கிறது... நன்றாக இல்லை என்று இரண்டே பிரிவுகள். எதிலிருந்து பிறக்கிறதோ, அதன் பெயரே வாசனைக்கு வந்துவிடுகிறது. வாசனையை நாற்றம் என்று சொல்கிறாள் ஆண்டாள். இன்று 'நாற்றம்' என்ற சொல் வாசனைக்கு நேர் எதிரான அர்த்தம் கொண்டுவிட்டது.
பெயரில்லாத சில வாசனைகள் மனதில் புகையெனக் கடந்து செல்கின்றன. பக்கத்து வீட்டில் உணவு தயாரிக்கும்போது, என்ன உணவு அது என்று தெரியாமல் கசிந்து வரும் வாசனை... பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்த பெண்ணின் கூந்தல் சரிந்து பின்னால் விழுந்து அதிலிருந்து வெளிப்படும் சீயக்காயோ, ஷாம்புவோ என அறிய முடியாத சுகந்தம்... பிறந்த குழந்தையை உச்சி முகரும்போது, அதன் உடலில் இருந்து கசியும் மணம்.
சாவு வீட்டின் வாசலில் நின்றாலும், முகத்தில் அடிக்கும் ஒரு மணம். மழை தூறத் துவங்கியதும் மண் புரளும் வாசம். அழுக்குத் துணியில் கிடந்த சில்லறைகளில் ஒட்டிக்கொண்டு இருக்கும் மணம். இருள் பாதையைக் கடக்கும்போது புதரில் நெளியும் பாம்பின் வாசனை. டீக்கடையின் வடிகட்டியிலிருந்து சக்கையாகித் தூக்கி எறியப்பட்ட தேயிலைத் தூளின் வாசனை. ரஷ்யப் புத்தகங்களுக்கு மட்டுமே உள்ள காகித வாசனை. இன்னும்... அப்பாவின் வாசனை, மனைவியின் வாசனை, குழந்தைகளின் வாசனை, காதலியின் வாசனை, வெறுப்பின் வாசனை என எத்தனையோ வாசனைகள்!
சொற்களுக்கும் வாசனை இருக்கிறது. அது எப்போதோ, யார் கவிதையிலோ, அரிதாக மனம் நழுவும் தருணங்களில் உணரப்படுகிறது. ஆனால், நெடுநாள் அந்த மணம் நினைவில் இருக்கிறது.
|