மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 12

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகா

##~##
மிழ் அல்லாத வேற்று மொழித் திரைப்படங்களில் நான் பார்த்த முதல் படம் 'ஷோலே’. அப்போது எல்லாம் திருநெல்வேலியில் இந்தித் திரைப்படங்களைத் திரையிடுவார்கள். ராயல் டாக்கீஸில் 'ஷோலே’ பார்க்கும்போதுதான் இந்தியாவில் திருநெல்வேலி தவிரவும் வேறு ஊர்கள் உள்ளன என்பதும், தமிழ் தவிரவும் வேறு மொழிகள் உள்ளன என்பதும் தெரிய வந்தது. 'என்னய்யா இது... நம்ம ஊரு மாதிரியே இல்ல. ஆனா, அங்கே எப்படி மனுசாட்கள்லாம் வாளுதாங்க!’ என்று வியப்பாக இருந்தது. 'ஷோலே’யின் வசனத்தில் ஒரு வரிகூடப் புரியவில்லை என்றாலும், திருநெல்வேலி மக்கள் மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்தனர். பாட்டில்களை உடைத்துப் போட்டு கண்ணாடிச் சிதறல்களில் ஹேமமாலினியை ஆடவிட்டு ரசிக்கும் 'கப்பர்சிங்’ அம்ஜத் கானைப்
மூங்கில் மூச்சு! - 12
பார்த்து, 'பேதீல போவான். நல்லா இருப்பானா? பேராச்சியம்மன் நிச்சயம் அவன் கண்ணைக் குத்தாம விட மாட்டா’ என்று கடும் கோபத்துடன் ஏசுவார்கள் பெண்கள். 'ஏ தோஸ்து கீ, நம்ம கீ சோடெங்கே!’ கணேசண்ணன் சைக்கிளில் என்னை உட்காரவைத்துக்கொண்டு அழுத்தும்போது இதைப் பாடுவான். அவன் பாடிப் பாடிக் கேட்டு, என் மனதில் பதிந்த இந்தப் பாடலை, இப்போது தொலைக்காட்சியிலோ, ஒலிப்பதிவிலோ கேட்கும்போது 'என்ன இது, தப்பும் தவறுமாகப் பாடுகிறார்கள்?’ என்றே தோன்றுகிறது.

பூதத்தான் முக்கு அருகே ஒரு கோயில் கொடையில் 'ஷோலே’ படத்தின் புகழ் பெற்ற 'மெஹ்பூபா மெஹ்பூபா’ பாடலை நையாண்டி மேளக்காரர்கள் வாசிக்க, இடுப்பை வளைத்து, நெளித்து ஆடிய கும்பக் குடக்காரியைச் சுற்றி நின்ற ஒரு கூட்டம் விசிலடித்து உற்சாகப்படுத்தியது. யாரிடமும் அதிகம் பேசாமல், ரத வீதிகளில் கௌரவமாக நடமாடி வந்த சுந்தரம் பிள்ளை பெரியப்பாவும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். வழக்கமாகத் தோளில் போட்டு இருக்கும் நீளத் துண்டைத் தலப்பாவாகக் கட்டிக்கொண்டு ஒருவிதப் பரவசத்துடன் 'மெஹ்பூபா’வை அவர் ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்த காட்சியை இன்னும் எத்தனை வருடங்களானாலும் என்னால் மறக்க இயலாது!

'ஷோலே’ திரையிடப்பட்ட அதே ராயல் டாக்கீஸில்தான் தர்மேந்திரா நடித்து எம்.எம்.சின்னப்பா தேவரின் தயாரிப்பில் வெளிவந்த 'மா’ படமும் போட்டார்கள். ஏற்கெனவே, 'ஷோலே’ படத்தில் பல முறை பார்த்துப் பரிச்சயமான முகமாக இருந்ததால் 'மா’ பார்க்கும்போது, தர்மேந்திராவை ரொம்ப நாட்கள் நெருங்கிப் பழகிய மனிதர்போல 'ஏ.... நம்மாளுல்லா’ என்று மனதுக்கு நெருக்கமாக இருந்தது. அதே ஹேமமாலினிதான் இதிலும். 'எல, அந்தப் பிள்ளைக்கு

மூங்கில் மூச்சு! - 12

நம்ம ஊருதான் தெரியும்லா? என்று பேசிக்கொண்டார்கள். ஹேமமாலினி தமிழ்ப் பெண் என்பதைத்தான் பெரியவர்கள் அப்படிச் சொல்லி இருக்கிறார்கள் என்பது அப்போது புரியவில்லை. அதுவரைக்கும் அந்த அம்மாள், திருநெல்வேலி டவுண் தெற்குப் புதுத் தெருவில் பிறந்து வளர்ந்து, அப்பர் கிளாப்டன் ஸ்கூலில் படித்ததாகவே நம்பிக்கொண்டு இருந்தேன். அதற்குப் பிறகு, வரிசையாக ரிஷிகபூர் நடித்த 'பாரூத்’, அமிதாப்பின் 'அமர் அக்பர் அந்தோணி’ மற்றும் 'ஹம் கிஸி ஸே கம் நஹின்’, 'முக்கதர் கா சிக்கந்தர்’ போன்ற பல படங்கள்.  'சத்யம் சிவம் சுந்தரம்’ படம் 'A’ என்பதால் அப்போது பார்க்க முடியாமல் போய்விட்டது. ஆனால், அந்தப் படத்தின் 'சத்யம் சிவம் சுந்தரம்’ என்ற பாடலை மட்டும், முதல் வரியைத் தவிர மற்ற வரி களை வழக்கம்போலத் தன் இஷ்டத்துக்குப் பாடி கணேசண்ணன் எனக்கு மனப்பாடமாக்கினான்.

ஒரு கட்டத்துக்கு மேல் இந்திப் படங்களின் வரத்து குறைய ஆரம்பித்தது. எப்போதாவது ஒரு படம் வரும். வந்த சுவடு தெரியாமல் போயும்விடும். சொல்லிக்கொள்கிற மாதிரி வந்து நீண்ட நாட்கள் ஆன பிறகு, திடீரென்று 'குர்பானி’ வந்தது. 'அந்த பிள்ளையப் பாத்து எவ்வளவு நாளாச்சு?’ என்று பெரியவர்கள் எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு சிவசக்தி தியேட்டருக்கு விரைந்தார்கள். 'சத்யம் சிவம் சுந்தரம்’ படத்துக்குப் பிறகு ஜீனத் அமனை அவர்களால் 'குர்பானி’யில்தான் தரிசிக்க முடிந்தது. 'பாட்டுல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, அந்தப் பிள்ள பளைய மாதிரி இல்லடே’ என்று குறைபட்டுக் கொண்டார்கள்.

அதற்குப் பிறகு வந்த 'ஏக் துஜே கேலியே’ படத்தை திருநெல்வேலி மக்கள் இந்திப் படங்களின் வரிசையிலேயே வைக்கவில்லை. 'அத எப்பிடிவே இந்திப் படம்னு சொல்லலாம்? படத்துல முக்காவாசி வசனம் தமிள்லதான் பேசுதாங்க. கமலகாசன அவொ அப்பா பொடலங்கான்னா ஏசுதாருன்னு நெனைக்கேரு? காதக் குடும்... அதே தான். சென்சாருல விட மாட்டாம்லா. பாலசந்தருக்கிட்டெயே வேணாலும் கேட்டுப் பாரும். அது தமிள்ப் படந்தான்னு சொல்லுவாரு’. பாலசந்தர் அவர்கள் சொல்கிறாரோ இல்லையோ, ராமையா பிள்ளை அடித்துச் சொன்னார், 'ஏக் துஜே கேலியே’ தமிழ்ப் படம்தான் என்று!

கொஞ்சம் கொஞ்சமாக இந்திப் படங்கள் மட்டும் அல்லாமல், இந்திப் பாடல்களின் சத்தமும் சுத்தமாகக் காதில் விழாமலேயே போனது. 'எல, என்னைக்கு 'மச்சானப் பாத்தீங்களா’ வந்துதோ, அன்னைக்கே பளைய இந்திப் பாட்டு ரெக்கார்டை எல்லாம் ஏறக்கட்டியாச்சுல்லா’ - பெரியண்ணன் சொன்னான். இந்திப் பாடல்களின் காதலன் அவன். யாதோங்கி பாராத், ஜவானி திவானி, பாபி, ஆராதனா போன்ற படங்களின் பாடல்களுடனேயே வாழ்ந்து வந்தவன். இளையராஜாவின் வருகைக்குப் பின் தமிழ்த் திரையிசைப் பாடல்கள் மட்டுமே கேட்டு வந்தபோதுதான் ஒரு ரெக்கார்டு வந்தது. முழுக்க முழுக்க சாஸ்திரிய சங்கீதத்திலேயே எல்லாப் பாடல்களும் இருந்தன. படமும் சிவசக்தி தியேட்டரில் ரிலீஸானது. கந்த சஷ்டிக்கு திருச்செந்தூருக்குப் போவதுபோல் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று அந்தப் படத்தைப் பார்த்தனர். இத்தனைக்கும் அது தெலுங்குப் படம். பெயர் 'சங்கராபரணம்’!

மூங்கில் மூச்சு! - 12

இன்றைக்கு உள்ள சினிமா வணிகத்தில் 'சங்கராபரணம்’ மாதிரியான ஒரு படத்தின் கதையைச் சொன்னால், ஏதோ ஜந்துவைப் பார்ப்பதுபோல் பார்ப்பார்கள். ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு வேற்று மொழித் திரைப்படத்தை, அதுவும் முற்றிலும் பாரம்பரிய சாஸ்திரிய இசைப் பின்னணியில் வெளிவந்த ஒரு திரைப்படத்தை நம் தமிழ் மக்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.

திரைப்படத் துறைக்கு நான் வந்த பின், ஒருநாள் 'வாத்தியார்’ பாலுமகேந்திராவிடம் 'சங்கராபரணம்’ படத்தைப்பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டு இருந்தேன். பொறுமையாக நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டு இருந்தவர், அமைதியாக ஒரு விஷயம் சொன்னார். 'யா, யூ ஆர் ரைட்... யூ நோ சம்திங்? நான்தான் அந்தப் படத்தோட சினிமாட்டோகிராஃபர்.’ சத்தியமாக அவர் சொல்லித்தான் எனக்கு அது தெரிய வந்தது. வெட்கிப்போனேன்!

மூங்கில் மூச்சு! - 12

ரு காலகட்டத்தில் திருநெல்வேலியில் நிறைய மலையாளப் படங்கள் திரையிடப்பட்டன. மம்மூட்டி என்கிற அருமையான நடிகர் எங்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து மம்மூட்டி நடித்த திரைப்படங்களை ஒன்றுவிடாமல் சென்று பார்த்தோம். வாத்தியாரின் மலையாளப் படங்களான 'யாத்ரா’, மற்றும் 'ஓளங்கள்’ போன்ற படங் களையும் நான் அப்போதுதான் பார்த்தேன். அதற்குப் பிறகு, எங்களுக்குத் தெரிய வந்த ஒரு மலையாள நடிகர், மம்மூட்டியை மறக்கச் செய்தார். பார்ப்பதற்கு எங்கள் பள்ளித்தோழன் நவாஸ் மாதிரி புஷ்டியாக, உருண்டையாக இருந்த அந்த நடிகர், ரொம்பவுமே மனதுக்கு நெருக்கமானார். மோகன்லால் என்ற அந்த நடிகரை ரசிக்க ஆரம்பித்த பிறகு, 'ஏசியாநெட்’ சேனலில் அவர் நடித்த படங்கள் ஒளிபரப்பப்படும்போது எல்லாம் நானும் குஞ்சுவும் தொலைக்காட்சி முன் உட்கார்ந்தோம். 'நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு ('பூவே பூச்சுடவா’வின் மூலம்), பத்மராஜனின் தேசாடனக்கிளி கரயாரில்ல, தூவானத் தும்பிகள் மற்றும் நமுக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள், பிரியதர்ஷனின் தாளவட்டம், சித்ரம், கிலுக்கம், மறக்கவே முடியாத சிபிமலயிலின் கிரீடம், பரதம் என விழுந்து விழுந்து ரசித்த மோகன்லால் படங்கள் ஏராளம். லோகிததாஸின் மேற்குறிப்பிட்ட திரைக்கதை வரிசையில் எனது தனிப்பட்ட ரசனையின்படி என்னை வெகுவாகக் கவர்ந்த படம் திருநெல்வேலி சிவசக்தி தியேட்டரில் அடுத்தடுத்த காட்சிகளில் நான் பார்த்து ரசித்த 'ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’!

மோகன்லால் என்கிற அற்புத நடிகனின் இயல்பான நடிப்பினோடு சலீம் கௌஸ் என்னும் ராட்சசன் போட்டி போட்டு  நடித்த பரதனின் 'தாழ்வாரம்’ என்றென்றும் மறக்க முடியாத மற்றும் ஓர் உன்னதத் திரைப்படம். எம்.டி.வாசுதேவன் நாயரின் திரைக்கதையில் வெளிவந்த இந்தப் படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியில் மோகன்லாலின் நடிப்பை நினைத்து நினைத்து இன்றைக்கும் வியக்கிறேன்.

கதைப்படி மோகன்லாலின் திருமணத்தன்று இரவு நேரத்தில் மோகன்லாலின் நண்பனான சலீம் கௌஸ் மது அருந்த அழைப்பார். முதலிரவு நடக்க இருக்கும் அறையின் ஜன்னலோரம் மோகன்லாலின் புது மனைவி காத்துக்கொண்டு நிற்பாள். தயக்கத்துடன் நண்பனின் அழைப்பைத் தவிர்க்க முடியாமல் ஒருவித தர்மசங்கடத்துடன் மோகன்லால் மது அருந்தும் காட்சியில் அவரது உடல் மொழியை வர்ணிக்க எந்த மொழியிலும் வார்த்தைகள் கிடையாது.

சென்னைக்கு வந்த பிறகும் வேற்றுமொழித் திரைப்படங்களைத் தேடி பார்ப்பதைத் தொடர்ந்துகொண்டுதான் இருந்தேன். 'சதிலீலாவதி’ படப்பிடிப்பின்போது நடிகை கல்பனாவிடம் நான் பார்த்து ரசித்த மலையாளப் படங்களை ஒவ்வொன்றாகச் சொன்னபோது, அவருக்கு ஆச்சர்யமாகவும்

மூங்கில் மூச்சு! - 12

சந்தோஷமாகவும் இருந்தது. மலையாளப் படங்களின் மீது உள்ள மரியாதை காரணமாக எந்த ஒரு மலையாளியைச் சந்திக்க நேர்ந்தாலும் மெள்ள அவரிடம் மலையாள சினிமாபற்றிப் பேச ஆரம்பித்துவிடுவேன். 'அட! நம்ம ஊர் சினிமா பத்தி இவ்வளவு ரசிச்சுப் பேசுறானே!’ என்று அவர்களும் உற்சாகமாகிவிடுவார்கள்.

அப்படித்தான் சமீபத்தில் கேரளாவில் இருந்து சென்னை வந்திருந்த ஓர் இளைஞரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். பரதனின் 'வைஷாலி’ படத்தை நான் பல முறை பார்த்த விஷயத்தைச் சொல்லி, மலையாளப் படங்கள் மேல் எனக்கு உள்ள காதலைப்பற்றிச் சொன்னேன். 'ஸாரி சார். நான் அந்தப் படம் பார்த்தது இல்லை’ என்றார். சப்பென்று ஆகிவிட்டது. 'கடைசியா என்ன படம் பாத்தீங்க?’ என்று கேட்டேன். 'வேட்டைக்காரன்’ என்றார். அது எம்.ஜி.ஆர் நடித்த 'வேட்டைக்காரன்’ அல்ல!

- சுவாசிப்போம்...