
வாலிஓவியம் : மணிபடம் : கே.ராஜசேகரன்
தமிழ்ப் பண்ணையில்...
##~## |
சின்னச் சின்னதாய்ச் சின்னச் சின்னதாய்ச் சின்ன அண்ணாமலையைப் பற்றிச் சில சிந்தனைகள் -
என்னுள் இப்போது எழக் காரணம் - அண்மையில் அவரது மகன் திரு. கருணாநிதி அமரரானதுதான்.
சினிமாவில் நான் காலூன்ற, சின்ன அண்ணாமலையும் ஒரு காரணம்.
பட்டணத்து வாழ்க்கை ஒரு பாலைவனமாயிருந்தபோது - ஈர நிழல் பரப்பும் ஈச்ச மரமாகி -
அவ்வப்போது என் வெப்பம் ஆற்றியவர் சின்ன அண்ணாமலை!

சின்ன அண்ணாமலையை எனக்குச் சின்ன வயதிலிருந்தே தெரியும்; அதாவது என்னுடைய சின்ன வயதிலிருந்து!
1948-ல் திரு.கல்கி அவர்களோடு என் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அய்ம்பதுகளில் -
தமிழரசுக் கழக மகாநாடு ஒன்று நடந்தது, ஸ்ரீரங்கத்தில். மூன்று நாள்களும் ஊர் 'ஜே ஜே’ என்றிருந்தது.
சிலம்புச் செல்வர்கூட, சின்ன அண்ணாமலை - மற்றும் முத்தமிழ்க் கலா வித்வரத்ன திரு.டி.கே.சண்முகம் அண்ணாச்சி; திரு. ஏ.பி.நாகராஜன்; படாதிபதி திரு. எம்.ஏ.வேணு; கவிஞர்கள் திரு. கா.மு.ஷெரீப்; திரு. கு.மா.பா; என்று பல பிரபலங்கள் பங்கு பற்றியதால், ஊருக்குள் மகாநாடா? மகாநாட்டிற்குள் ஊரா? என வியந்து வினவும்படி, மன்பதை மண்டிக்கிடந்தது.
அவிழ அவிழ - அவ்வப்போது இடுப்பு வேட்டியை அள்ளி அள்ளிக் கட்டிக்கொண்டு - தொங்கு மீசையைத் துழாவியவாறே, வாயை வண்ணான் துறையாக்கி - வார்த்தை வெள்ளாவியில் ஊறப்போட்டுப் பின் உருவி எடுத்துத் துப்புரவாய்த் துவைத்துக் கசக்கிப் பின் காயப்போட்டார், திராவிட இயக்கங்களை -
தேச பக்தியும் தெய்வ பக்தியும் ஒரு சேரப்பெற்ற சிலம்புச் செல்வர்!
பத்து கலைவாணரை ஒரு பொட்டலமாய்க் கட்டியதுபோல் -

சிரிக்கச் சிரிக்கப் பேசினார் சின்ன அண்ணாமலை. கால் கடுக்க நின்று கேட்டிருக்கிறேன்; குலுங்கக் குலுங்கச் சிரித்துக் கண்எல்லாம் சிரபுஞ்சியாகி - இடையறாது இமை வழியே மழை கொட்டும் - ஆனந்தக் கண்ணீர் தான்!
இறுதியில் - சின்ன அண்ணாமலை கம்பீரமான குரலில் பாடுவார் -
நாமக்கல் கவிஞரின் அற்புதமான பாடல்களை, நாடி நரம்பில் முறுக்கேற!
விடுதலை வேள்வியில் -
சிறைபட்டிருந்த சின்ன அண்ணாமலையை - மக்களே வெகுண்டெழுந்து, மீட்டனர் - காராக்கிருகத்தின் கதவுகளைக் கைகளைக்கொண்டே பிளந்து!
இது, 'திருவாடானை’ என்னும் ஊரில் நடந்தது.
1942-ல், QUIT INDIA MOVEMENT காலத்தில் -
பம்பாய்க் கடற்கரையில் பத்து லட்சம் மக்களுக்கு நடுவே -
பொறுத்துப் பொறுத்துப் பொறுமையிழந்த ஒரு பொக்கை வாய்க் கிழவன், பொங்கியெழுந்து -
உதடு வழியே உமிழ்ந்தானே - 'செய்; அல்லது செத்து மடி!’ என்று -
ஒரு வாக்கியத்தை - அந்த வாக்கியமே வத்திக் குச்சியாகப் -
பற்றி எரிந்தது பாரதம்; சின்ன அண்ணாமலை சிறை புகுந்தது அப்போதுதான்!
தியாகராய நகர் பனகல் பார்க் அருகே -
ஒரு காலத்தில் ஓஹோவென்றிருந்த சின்ன அண்ணாமலையின் 'தமிழ்ப் பண்ணை’ - உஸ்மான் ரோடுக்கு இடம் பெயர்ந்தது - அதனுடைய மூர்த்தி இளைத்தாலும் கீர்த்தி இளைக்காமல்!
'தமிழ்ப் பண்ணை’ - அவ்வப்போது புதிய புத்தகங்களைப் பதிப்பித்துக்கொண்டுதான்இருந்தது; சின்ன அண்ணாமலை அங்கு அத்தி பூத்தாற்போல் வருவார்.
அவரது இரு புதல்வர்கள் திரு.கருணாநிதியும்; திரு. ராமையாவும் கடையைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

நாகேஷ் மூலம் அவர்கள் எனக்கு நன்கு பரிச்சயமானார்கள்.
சின்ன அண்ணாமலை, 'கடவுளின் குழந்தை’ என்றொரு படம் எடுத்துக்கொண்டிருந்தார்; நாகேஷ் அதில் சின்ன வேடம் ஏற்றிருந்ததால், என்னையும் அழைத்துக்கொண்டு தமிழ்ப் பண்ணைக்குப் போவான்.
பக்கத்தில் ஒருவர் பொரி; பட்டாணிக் கடலை கடை வைத்திருந்தார்.
நான்; நாகேஷ்; கருணாநிதி; ராமையா - ஆளுக்கொரு வேர்க்கடலைப் பொட்டலத்தை வாங்கி வைத்துக்கொண்டு-
தமிழ்ப் பண்ணையிலேயே பிற்பகல் வரைக்கும் பொழுதைக் கழித்த நாள்கள் உண்டு.
'நாகேசு! நீதான் அடுத்த சந்திரபாபு; வாலி! நீதான் அடுத்த கண்ணதாசன்!’ என்று கருணாநிதியும் ராமையாவும் எங்களுக்குக் கொம்பு சீவி விட்டுக்கொண்டிருந்த காலம் அது!
நாகேஷாவது நாலஞ்சு படங்களில் - 'மனமுள்ள மறு தாரம்’; 'தாயில்லாப் பிள்ளை’ - என்று சின்னச் சின்ன வேஷங்களில் நடித்துக் கொஞ்சம் சில்லறையைக் கண்ணால் பார்த்தான்.
நான் - வெறுங்கையால் முழம் போட்டுக்கொண்டிருந்தேன்!
ஒருநாள் சின்ன அண்ணாமலை கடைக்கு வந்தார். என்னைப் பார்த்ததும், 'வாலி! நகரத்தாருங்க, பழனிக்குப் பாதயாத்திரை போற பழக்கமுண்டு; வழிநடைப் பாட்டா - முருகனைப் பத்திப் பத்துப் பதினஞ்சு பாட்டு எழுதிக் கொடு! நான் உன் பேரைப் போட்டு அச்சடிச்சு, இலவசமா எல்லோருக்கும் கொடுக்கிறேன். நீ வேணும்னா பாரு - முருகன் உன்னைப் பெரிய ஆளா ஆக்கிடுவான்!’ என்று சொல்லி, என்னை முருகன் பாடல்களை எழுதவைத்தார்.
'வேலும் மயிலும் துணை’ - என்ற பெயரில் அந்த நூல் வெளியானது. அதில் இயற்றியவர் 'திருச்சி வாலி’ என்று போட்டிருக்கும்!
அண்மையில் நடந்த என் எண்பதாம் வயதுப் பிறந்த நாள் நிகழ்வில், அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னாடி அச்சடிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தைக் கொண்டுவந்து -
நான் வியப்பில் வாய் பிளக்க - என் பிறந்த நாள் பரிசாக - என் இனிய நண்பர் - எட்டாம் வள்ளல் திரு.நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் எனக்கு வழங்கினார்கள்.
அதைப் பார்த்ததும் சின்ன அண்ணாமலை நினைவில் என் கண்கள் பனித்தன. பல படாதிபதிகளிடம் 'இந்த ஆள் இன்னொரு கண்ணதாசன், என்று என்னை அறிமுகப்படுத்தியவர் அவர்.
அவர் வாக்குப் பலித்தது. நான் முருகன் பாடல்களை எழுதி, அவர் நூலாக வெளியிட்ட அடுத்த ஆண்டே நான் எம்.ஜி.ஆர். படத்திற்குப் பாட்டெழுதும் வாய்ப்பைப் பெற்றேன்!
ஒருநாள் சின்ன அண்ணாமலையின் மகன், என் இனிய நண்பன் ராமையா -
நான் தங்கியிருந்த 'கிளப் ஹவுஸ்’ அறைக்கு வந்து ஓர் இளைஞனை என்னிடம் அறிமுகப்படுத்தினான்.
'வாலி! இவரு என் நண்பர். விவேகானந்தா காலேஜுல படிக்கிறாரு; இன்னிக்கு சாயந்தரம் ராமராவ் கலா மண்டபத்துல - இவரு நடிக்கிற ஒரு நாடகம் இருக்கு; நீ வந்து பாக்கணும்னு விரும்புறாரு. நானும் வரேன்; போலாமா?’
- என்று ராமையா சொன்னதும் நான் ஒப்பினேன்.
நானும் ராமையாவும் நாடகத்திற்குப் போனோம். நாடகத்தின் பெயர் 'தேவை ஒரு தங்கை’; ஸ்ரீரங்கம் நரசிம்மன் எழுதி, கூத்தபிரான் அவர்கள் இயக்கியது என ஞாபகம். என் நெருங்கிய நண்பரான திரு.ஸ்ரீரங்கம் நரசிம்மன், பிரபல எழுத்தாளர்; 'குமுதம்’ பத்திரிகை தொடங்கிய மாத நாவல் திட்டத்தில் - முதல் நாவலாக வந்த, 'சரயு என் சகோதரி’ - திரு.ஸ்ரீரங்கம் நரசிம்மன் எழுதியதுதான்.
அந்தக் கதைதான் இந்தத் 'தேவை ஒரு தங்கை’ - என்று நினைக்கிறேன்.
நாடகம் முடிந்தவுடன், மேடைக்குச் சென்று அந்த நடிகரை - விவேகானந்தா கல்லூரி மாணவரை - வெகுவாகப் பாராட்டினேன்.
'நல்லா நடிக்கிறீங்க, ப்ரதர்! நீங்க சினிமாவ்ல ட்ரை பண்ணலாம்; அதற்குரிய தகுதி உங்ககிட்ட இருக்கு!’ என்றேன்.
அந்த நடிகர் சிரித்தார். 'நானாவது, சினிமாவ்ல வரதாவது? NO CHANCE! எனக்கும் சினிமாக் கனவெல்லாம் கிடையாது; JUST FOR HOBBY - நான் நாடகத்துல நடிக்கிறேன்!’ என்றார் அவர்.
ஆனால், நான் எதிர்பார்த்தது நடந்தது. பின்னாளில், அவர் பிரபல சினிமா நடிகர் ஆனார்.
அவர்தான் என் அருமை நண்பர் - அமரராகிவிட்ட - திரு. ஜெய்சங்கர்!
நான் எதிர்பார்க்காத ஒன்றும் நடந்தது. அந்த நாடகத்தில், ஜெய்சங்கரின் தங்கையாக நடித்தவர், பின்னாளில் என் மனைவியானார்!
YES! I NEVER THOUGHT SHE WILL BE MY SPOUSE!
- சுழலும்...