Published:Updated:

அணிலாடும் முன்றில்! - 6

அணிலாடும் முன்றில்
பிரீமியம் ஸ்டோரி
News
அணிலாடும் முன்றில்

தாய் மாமன்

மாமாவுக்கு அன்பைக் காட்டத் தெரியும் ஊருக்கு வந்தால் பொட்டலங்கள் வரும் ஊருக்குத் திரும்புகையில் காலைக் கட்டிக்கொள்வோம் ஏரிக்கரை வரை விட்டுப் பிடிப்பாள் அம்மா.
- கவிஞர் த.பழமலய் (சனங்களின் கதைத் தொகுப்பில் இருந்து)

திருத்தணி மிகவும் மாறி இருந்தது. நகரம் தொடங்குவதற்கு முன்பாகவே விளைநிலங்களில் மஞ்சள் கற்கள் ஊன்றப்பட்டு, புதிது புதிதாக நகர்கள் உருவாகி இருந்தன. பாசி படர்ந்த பழைய குளத்தில் காலம் பாலிதீன் பைகளையும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளையும் மிதக்கவிட்டு இருந்தது. குன்றும் குன்றின் மேல் இருந்த குமரனும் மட்டும் அப்படியே இருந்தார்கள்.

படிக்கட்டுகளில் கை ஏந்தும் பிச்சைக்காரர்கள்; கலர் கலராகத் தொப்பியும், கண்ணாடியும், மணியிலும் செம்பிலும் செய்த மோதிரங்களும் விற்கும் கடைக்காரர்கள்; ஆங்காங்கே நிழலில் இளைப்பாறும்

அணிலாடும் முன்றில்! - 6

மொட்டை அடித்த தெலுங்கு முகங்கள்; பிரசாதக் கடையில் வாங்கிய புளியோதரையின் புராதன ருசி போன்றவற்றில் மட்டும் பழைய திருத்தணியின் சாயல் படிந்து கிடந்தது.

நான் என் மகனுக்கு மொட்டையடித்துக் காது குத்துவதற்காக திருத்தணிக்கு வந்திருந்தேன். தொப்பி வாங்கிக் கொடுத்த பிறகே, மொட்டை அடிக்கச் சம்மதித்தான் மகன். என் மனைவியின் சகோதரன் அவனை மடியில் அமரவைத்து, காது குத்துவதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டு இருந்தான். குழந்தைக்கு வலிக்குமே என்கிற பதற்றத்தில் நானும் மனைவியும் நின்றுகொண்டு இருந்தோம். எங்களைவிட அதிகம் பதற்றமாக இருந்தான் மைத்துனன். ''பார்த்துங்க... மெதுவாக் குத்துங்க...'' என்று காது குத்துபவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தான். கண் சிமிட்டும் நொடியில், காது குத்தி வளையத்தைத் திருகினார் அவர். காதோரம் கசிந்த சிறு துளி ரத்தத்தில் சந்தனம் தடவ, 'மாமா...’ என்று தன் தாய்மாமனை வலியில் கட்டிக்கொண்டான் மகன். ''மெதுவா குத்துங்கன்னு சொன்னேன்ல... ரத்தம் வருது பாருங்க'' என்று மைத்துனன் கோபப்பட, அவர் 'இதெல்லாம் சகஜம்’ என்பதுபோல புன்னகைத்துக்கொண்டே தட்சணை கேட்டார்.

முன்புக்கும் முன்பு இதே திருத்தணியில் தாய், தந்தை பதற்றமாக உடனிருக்க, தாய்மாமன் மடியேறி நானும் காது குத்திக்கொண்டேன். ஞாபகக்கிடங்கில் அந்த நாளின் மிச்சங்கள் இன்று இல்லை எனினும், வலி தாளாமல் 'மாமா’ என்று என் தாய்மாமனை நானும் இறுகப் பிடித்திருந்து இருப்பேன்.

தந்தையைப் புறந்தள்ளி தாய்மாமனை முன்னிறுத்தும் சடங்குகளின் வேரைப் பல அறிஞர்கள் பல தருணங்களில் ஆராய்ந்தறிந்து எழுதி இருக்கிறார்கள்.

தாய்வழி சமூகத்தில் தாய்மாமனின் முக்கியத்துவத்தை, வரலாறும் வாழ்வும் அவ்வப்போது சொல்லிக்கொடுத்துக்கொண்டே வருகின்றன. தொன்ம ஆய்வுகள் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், அன்று அவ் வேளையில் தன் மாமனின் மடியில் என் மகன் அமர்ந்திருந்த காட்சியைப் பார்க்கையில், என் மனதில் தோன்றிய உணர்வுகள் இவை... 'இதோ உன் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தைக்கு நீ தாய்மாமன். இவன் உன் சகோதரியின் உதிரம். அலைக்கழித்தோடும் இவன் உதிர நதியில் உன் வம்சத்தின் துளியும் கலந்து இருந்திருக்கிறது. இவனைப் பெற்றவர்கள் பக்கத்தில் இருந்தாலும், காலம் முழுவதும் இவன் மீது காயம் படாமலும், காற்று படாமலும் காக்க வேண்டியது உன் கடமை. தாய்மாமன் என்பவன் உண்மையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஓர் ஆண் தாய்!''

அணிலாடும் முன்றில்! - 6

சென்னைக்குத் திரும்பி வருகையில் என் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன. நான் என் தாய்மாமன்களை நினைத்துக்கொண்டேன்.

அம்மாவுடன் பிறந்த ஆண்கள் மொத்தம் ஐந்து பேர். ஓர் அண்ணன், நான்கு தம்பிகள். ஐந்து மாமாக்களும் கூட்டுக் குடும்பமாக ஆயாவுடன் வசித்தபடியால், கோடை விடுமுறை எனக்குக் குதூகல விடுமுறையாக இருக்கும்.

எத்தனை விதமான விளையாட்டுகள். கன்னங்களை உப்பவைத்து பலூனாக்கிக் காட்டவும்; பின் காற்று போக அதை உடைக்கவும்; சாட்டைத் தவ்வலில் மேலேற்றி உள்ளங்கையில் குறுகுறுக்கும் பம்பரங்களைக் கை மாற்றிவிடவும்; சாக்லேட் உறைகளை எட்டாக மடித்து மேற்புறம் திருகி, தலையாக்கி பாவாடை விரித்து ஆடும் சிறுமியாக மாற்றிப் பிரமிப்பூட்டவும்; மொட்டை மாடி மாலையில் மேகங்களை உரசியபடி காற்றாடிவிடக் கற்றுத்தரவும் மாமாக்களால் மட்டுமே முடியும்.

இப்போது யோசிக்கையில், பால்ய காலங்களில் தகப்பன்களைவிடத் தாய்மாமன்களே எல்லாக் குழந்தைகளையும் அதிக நேரம் தூக்கிவைத்து விளையாடி இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு குழந்தையும் தன் மனதில் உருவாகும் கதாநாயக பிம்பத்தை முதலில் தகப்பனிடம் இருந்தும், பின்பு தாய்மாமனிடம் இருந்தும் பெற்றுக்கொள்கிறார்கள். மாமாவைப்போல ஸ்டெப் கட்டிங் வைத்துக்கொள்வது; பெல் பாட்டம் வைத்த பேன்ட் போடுவது; பின் பாக்கெட்டில் இருந்து சின்ன சீப்பை எடுத்து மாமாவைப்போலவே ஸ்டைலாக இல்லாத மீசையைச் சீவுவது; தலையணைகளைத் தண்டாலாக்கி உடற்பயிற்சி செய்து மாமாவைப்போலவே கைகளை மடக்கி எலி வரவழைத்துக் காட்டுவது என மாமாக்களின் பாதிப்பில்தான் நாங்கள் வளர்ந்தோம்.

உள்ளங்கையில் இருந்து தனித்தனியாகக் கிளை பிரியும் ஐந்து விரல்களைப்போல் ஒவ்வொரு மாமாவும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு வார்ப்பு!

ஒரு மாமா, கட்டை விரலைப்போல் வாழ்வின் வெற்றியையே முன்னிறுத்திக்கொண்டு இருப்பார். சின்ன வயதில் அன்னாசிப் பழ வடிவில் இருந்த உண்டியல் வாங்கித் தந்து, ''பணம் இருந்தாதான் எல்லோரும் மதிப்பாங்க'' என புத்திமதி சொல்லி, சேமிக்கக் கற்றுத்தந்தார். ஆனால், எந்த மாமா சொல்லி... எந்தப் பிள்ளை கேட்டது? இன்று வரை, சேகரித்த உண்டியல்களில் தென்னங்குச்சி செருகி காசு எடுப்பதுதான் என் வழக்கமாக இருக்கிறது.

இன்னொரு மாமா, ஆட்காட்டி விரலைப்போல் புதிய புதிய திசைகளை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். எத்தனையோ திரைப்படங்களுக்கு அவருடன் நான் சென்றிருக்கிறேன். டூரிங் டாக்கீஸ் முதல் டால்ஃபி சவுண்ட் வரை நீண்ட நெடிய பட்டியல் அவை. அந்த மாமாவுக்கு எம்.ஜி.ஆரும் பிடிக்கும், சிவாஜியையும் பிடிக்கும். ஆதலால் நானும் 'ஆயிரத்தில் ஒருவன்’ கத்திச் சண்டையில் எம்.ஜி.ஆருடன் ஆக்ரோஷப்பட்டு, 'பாகப் பிரிவினை’யில் சிவாஜியுடன் அழுது இருக்கிறேன். கச்சிதமாக அளவெடுத்து, எனக்கான துணிகளைத் தைத்துக்கொடுப்பார். இன்று வரை எந்த ஆயத்த ஆடைகளிலும் அவரது கைநேர்த்தியை நான் கண்டதே இல்லை.

அணிலாடும் முன்றில்! - 6

பிறிதொரு மாமா, நடு விரலைப்போல் பயமுறுத்திக்கொண்டே இருப்பார். வெயிலில் விளையாடக் கூடாது; மதியம் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்; சிந்தாமல் சாப்பிட வேண்டும்; தலைமுடிக்கு எண்ணெய் தடவ வேண்டும்; ரொம்ப நேரம் டி.வி. பார்க்கக் கூடாது என அவர் சொல்லும் எல்லாவற்றையும் உம் கொட்டிக் கேட்டுக்கொள்வோம். இப்போதும் எங்காவது பார்த்தால், ''ஏன் தலை முடி இவ்வளவு இருக்கு? முடி வெட்றதுதானே?'' என்பார். வழக்கம்போல் உம் கொட்டி, கேட்டுக்கொள்வேன்.

அடுத்தொரு மாமா, மோதிர விரலைப்போல் பந்தாவானவர். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, மைனர் செயின் பளபளக்க... என்ஃபீல்டு தடதடக்க... அவர் புறப்பட்டார் என்றால், தெருவே புகை கிளம்பும். எங்கள் எல்லோரையும் பொருட்காட்சி, கடற்கரை என அழைத்துச் சென்று ரூஃப் டாப் எனப்படும் மொட்டை மாடி உணவகங்களில் பிரியாணி வாங்கித் தருவார். முதன்முதலில் நான் 'நான்’ உண்டது அவரோடுதான். அவரால் வானத்துக்குக் கீழே இருக்கிற எல்லாவற்றையும் வாங்கித் தர முடியும் என்று நாங்கள் நம்பினோம். எங்கள் நம்பிக்கையை அவர் அறிந்து இருந்தால், 'அதுக்கென்ன... வானத்தை யும் சேர்த்து வாங்கலாம்’ என்று சொல்லி இருப்பார்.

கடைசி மாமா, சுண்டு விரலைப்போல் எல்லாவற்றையும் விட்டுத் தள்ளியும், சேர்ந்தும் இருப்பார். அநேகமாக, எல்லா வாண்டுகளையும் மேய்க்கும் பணி இவரிடமே அதிகம் ஒப்படைக்கப்படும். மாமாக்களில் நண்பர்கள் அதிகம் உள்ள மாமா இவர்தான். யாராவது இவரைத் தேடி வந்துகொண்டே இருப்பார்கள். ஒரு முறை லயோலா கல்லூரியில் தங்கிப் படிக்கும் ஒரு நீக்ரோ இளைஞன் மாமாவைத் தேடி வந்தபோது, ''எங்க மாமாவுக்கு ஆப்பிரிக்காவில்கூட ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களே...'' என்று நாங்கள் பெருமையாகப் பேசிக்கொண்டோம். சமீபத்தில் வீட்டுக்கு வந்தபோது, என் மகனை ரொம்ப நேரம் தன் மடியில் வைத்துக்கொண்டு இருந்தார். மகனுக்குப் பதிலாக நானே அவர் மடியில் அமர்ந்திருப்பதுபோல் இருந்தது அந்தக் காட்சி.

இப்படி இந்த ஐந்து மாமாக்களும் என் பால்யத்தைக் காயப்படாமல் பார்த்துக்கொண்டார்கள். எனக்காகப் பெண் பார்த்து; திருமணத்தில் ஓடியாடி வேலை செய்து; மாப்பிள்ளைத் தோழனாக உடன் நின்று என வழி நெடுகப் ப்ரியம் செய்தார்கள். என் தாய் உதிரத்தின் மிச்சம் என அவர்களை நானும், தன் தமக்கை உதிரத்தின் மிச்சம் என என்னை அவர்களும் நினைத்தபடி நகர்கிறது வாழ்க்கை!

- அணிலாடும்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan