எல்லாத் திருமணங்களும் சந்தோஷமாகவே தன் வாழ்க்கைப் பயணத்தைத் துவக்குகின்றன. ஆனால், இன்று உள்ள விவாகரத்து வழக்குகளைக் காணும்போது பெரும்பான்மையான பயணங்கள் துவங்கிய இடத்திலேயே முறிந்துவிடுவதை அறியமுடிகிறது. முக்கியக் காரணம், புரிந்துகொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், அன்பைப் பகிர்ந்துகொள்ளுதல் என இந்த மூன்றும் இல்லாத சூழல்.
பெண்களுக்குத் திருமணம் ஏற்படுத்தும் மௌனம் புரிந்துகொள்ளப்பட முடியாதது. அது ஒரு நீரூற்றைப் போல அவளுக்குள் கடந்த காலத்தின் நினைவுகளைப் பீறிட்டுக்கொண்டே இருக்கிறது. 'அமைதி எப்போதும் புன்னகையில்தான் வேர்விட்டு இருக் கும்' என்பார்கள். ஆனால், இன்று திருமணம் ஆனதும் பெண்களிடம் இருந்து, இயல்பான சிரிப்பு மறைந்துபோகத் துவங்குகிறது. அக நெருக்கடி முகத்தில் உறைந்துவிடுகிறது. சிரிப்பதற்குக் காரணம் தேவைப்படுகிறது என்பதே நமது அக வீழ்ச்சியின் அடையாளம்தானே!
சிரிப்பை மறந்த பெண்களை எனது பயணங்களில், ரயிலில், பேருந்தில், சாலை ஓரங்களில், அலுவலகங்களில் காண்கிறேன். தன்னை மீறி அவர்கள் சிரிக்கும் தருணங்கள் அரிதானவை. ஏதேதோ யோசனைகள், கவலைகள், விளக்க முடியாத திகைப்பு போன்றவை படிந்த பெண் முகங்களையே பொதுவெளியில் அதிகம் காண முடிகிறது. காலில் அப்பிய ஈரக் களிமண்ணைப் போல, மன வேதனைகளோடுதான் பெண் தன் வாழ்வினை முன்னெடுத்துப் போகிறாள்.
அப்படி ஒரு பெண்ணைப் பற்றியே 'தி கலர் பர்ப்பிள்' என்ற ஹாலிவுட் திரைப்படம் விவரிக் கிறது. மிக அற்புதமான படம். பத்துக்கும் மேற்பட்ட முறை அதைப் பார்த்திருக்கிறேன். ஆலீஸ் வாக்கரின் நாவலை ஸ்பீல்பெர்க் படமாக்கி உள்ளார். சுறா மீன்களையும், வேற்றுக்கிரகவாசிகளையும்,டைனோ சர்களையும் கொண்ட சாகசப் படங்களை இயக்கி, பெரும் வெற்றிபெற்ற ஸ்பீல்பெர்க்கூட சினிமா வெறும் வணிகம் மட்டுமில்லை என்பதை உணர்ந்து இயக்கிய இரண்டு படங்களில் ஒன்றுதான் 'The Color Purple'; மற்றது 'Schindler's List'.
'தி கலர் பர்ப்பிள்' படத்தில், சிலி ஜான்சன் என்ற முக்கிய வேடத்தில் வூப்பி கோல்ட்பெர்க் நடித் திருக்கிறார். 1900-களின் துவக்கத்தில் அமெரிக்காவில் வாழும் கறுப்பினப் பெண்ணின் வாழ்வை விவரிக்கும் இந்தப் படம், ஒரு பெண்ணின் 30 ஆண்டுக் காலக் குடும் பப் போராட்டத்தை மிக உண்மையாக விவரிக்கிறது.
தனது 14-வது வயதில் கர்ப்பிணி ஆகிறாள் சிலி. அதற்குக் காரணம் அவளது அப்பா. வளர்ப்புத் தந்தையே மகளைக் கெடுத்துக் கர்ப்பிணி ஆக்கிவிடுகிறார். அவ ளுக்கு என்ன செய்வது, யாரிடம்சொல்லி அழுவது என்று புரியவில்லை. குழந்தையைப் பெற்று எடுக்கிறாள். அதை அவளது அப்பா பிடுங்கிச் சென்றுவிடுகிறார். இந்த விஷயம் பற்றி யாரிடமும் அவள் சொல்லக்கூடாது என்று மிரட்டி, மனைவியை இழந்த ஆல்பர்ட் ஜான்சன் என்பவருக்கு சிலியைத் திருமணம் முடித்துவைக்கிறார்.
ஜான்சன் அவளை ஓர் அடிமை போல நடத்துகிறான். அவனுக்குச் சிலியின் தங்கை நட்டி மீது கண். ஒவ்வொரு நாளும் குடிவெறி அதிகமாகி அவன் சிலியை பாலியல் வன்புணர்ச்சிகொள்கிறான். நட்டி அக்காவின் கஷ்டங்களைக்கண்டு அவளுக்கு உதவி செய்யமுயற்சிக்கிறாள். படிக்கக் கற்றுத் தருகிறாள்.ஆனால், அந்தக் குடும்பத்தின் வீழ்ச்சியை அவளால் தடுக்க இயலவில்லை.
இந்த நிலையில் ஜான்சன் பாடகியான தன் பழைய காதலியை அந்த வீட்டுக்கு அழைத்துவருகிறான். அந்தப் பெண்ணுக்கும் சிலிக்கும் இடையே ஒரு பெயர் இல்லாத உறவு ஏற்படுகிறது. பரஸ்பரம் இருவரும்ஒடுக்கப்பட்ட பெண்கள் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள்.
நட்டி குடும்பத்தைப் பிரிந்து, கிறிஸ்துவ மிஷினரி களோடு போகிறாள். அவளது கடிதம் மட்டுமே ஆறுதல் தருவதாக உள்ளது. இதற்கு இடையில் சிலியின் பிள்ளைகள் அவளிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். கணவன் அவளை வன்கொடுமைப்படுத்துகிறான். அவள் துயரத்தை மட்டுமே வாழ்வாகக் கொள்கிறாள். முடிவில் சிலியிடம் தான் மிக மோசமான மனிதனாக நடந்திருக்கிறோம் என்று உணர்ந்த ஜான்சன், தன் சேமிப்புப் பணம் முழுவதையும் செலவழித்து, அவளின் பிரிந்துபோன குழந்தைகளையும் தங்கையையும் அவளோடு ஒன்றுசேர்க்கிறான். படம் முழுவதும் சிலி ஒரு விலங் கைப் போலவே நடத்தப்படுகிறாள். ஒரு பெண் வெறி பிடித்த நாயைத் திருமணம் செய்துகொண்டு இருப்பது போலத்தான் இருக்கிறது.
பனியில் வாழும் பென்குவின் தன் இணையைத் தேர்வு செய்வதற்குக் காதலுடன் தேடுகிறது; கண்டு கொள்கிறது. தேடிச் சேர்ந்த பிறகு ஒருபோதும் வேறு ஒரு பென்குவினை நாடுவதே இல்லை. சில வேளைகளில் பெண் துணை இறந்துவிட்டால் பென்குவின்அந்தஏக்கத் துடன் அதே இடத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. வேறு எந்தப் பென்குவினையும் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கிறது.
இணை சேரும் மிருகங்கள்கூடத் தங்களுக்குள்விளக்க முடியாத அன்புடன் இருக்கின்றன. படித்த, நவநாகரிகம் கொண்ட மனிதன் மட்டுமே திருமண விஷயத்தில் வால் இல்லாத நாயை நினைவுபடுத்துகிறான். அதுதான் கவலை தருகிறது!
|