நண்பன் என்ன விலை என்று கேட்டான். மெலிந்த தோற்றமுடைய அந்த வீட்டு மனிதர், 'ஐயாயிரம் குடுத்துட்டு எடுத்துட்டுப் போங்க!' என்றார். 'இவ்வளவு மலிவான விலைக்கு ஏன் அதை விற்கிறீர்கள்?' என்று கேட்டபோது, 'இதை வாங்கிக் குடுத்து என் மகளைப் பறிகுடுத்துட்டேன், சார்! காலேஜ் படிக்கப் போன பொண்ணு... டேங்கர் லாரி அடிச்சு செத் துட்டா!
என் பொண்ணு நல்லாப் படிப்பா சார். பத்தொன்பது வயசு... பாட்டெல்லாம் அற்புதமா பாடுவா. ரெண்டு நிமிஷத்துல ரோட்ல அடிபட்டு தலை நசுங்கிப் போயிட்டா. இந்த வண்டியை அப்படியே மயானத்தில் கொண்டுபோய் வெச்சுக் கொளுத்திப்போடலாம்னுகூட நினைச்சேன்.
என் பொண்ணு கரெக்டாத்தான் போனா. ஆனா, லாரிக்காரன் அடிச்சிட்டான். கேஸ் நடக்குது. என்ன பிரயோசனம்? நானே கார் எல்லாம் விட்டுட்டு இப்போ டவுன் பஸ்லதான் போறேன். ரோட்டைக் கடக்கப் பயமா இருக்கு. என் பொண்டாட்டி வீட்ல இருந்து வெளியே வர்றதே இல்லை. நீங்களாவது இதைப் பத்திரமா ஓட்டுங்க. என் பொண்ணு அநியாயமாச் செத்துப்போயிட்டா. யாரைத் தப்பு சொல்றதுனு தெரியலை'' எனத் தன் அடங்காத துக்கத்தை வெளிப்படுத் தினார்.
அந்த ஸ்கூட்டியை விலை கொடுத்து வாங்க மனதின்றி நண்பன் ஒடிந்து போய் நின்றான். நான் ஒருபோதும் முகம் பார்த்தறியாத அந்த மாணவியின் சாவுச் செய்தி என்னை கலக்கமடையச் செய்தது.
என்ன தவறு செய்தாள் அந்த மாணவி? ஏன் அதை விபத்து என்று நாம் ஒரு செய்தியாகக் கடந்து போகிறோம்? பெண்ணை இழந்த குடும்பம் கொள்ளும் இந்த வலி, ஏன் யாரோ ஒருவரின் துயரமாகக் கைவிடப்படுகிறது?'
ஒவ்வொரு நாளும் தினசரியைப் புரட்டும்போது, சாலை விபத்துகளில் பலியானவர்களைப் பற்றிய செய்திகள் கண்ணை உறுத்துகிறது. எத்தனை மனிதர்கள்... எவ்வளவு உயிரிழப்புகள்? இவற்றைச் செய்திகளாக மட்டும் படித்து எப்படிக் கடந்து போவது? ஏன் நாம் விழிப்பு உணர்வு இல்லாமல் இருக்கிறோம்?
கோயிலுக்குச் செல்லும் அம்மாவைத் தன் பைக்கில் பின்னால் அமர வைத்து அழைத்துப் போகிறான் மகன். எங்கிருந்தோ வந்த லாரி அந்த பைக்கில் மோத, பின்னாடி இருந்த அம்மா அந்த இடத்திலேயே நசுங்கிச் சாகிறாள். பையனுக்குச் சிறிய காயம் மட்டுமே! சாலையில் படிந்த ரத்தத்தைத் தன் கையில் அள்ளி 'அம்மா, அம்மா' என்று அலறுகிறான் பையன். என்ன கொடுமை இது? அதை விபத்து என்று வேடிக்கை பார்த் துக் கடக்கிறார்கள் மக்கள்.
வேலைவிட்டு வீட்டில் இருக்கும் கைக்குழந்தையைக் காண, புறநகர்ச் சாலையில் பைக்கில் செல்கிறார்கள் ஒரு கணவனும் மனைவியும். பிரேக் இல்லாத வேன் மோதி அதே இடத்தில் சாவு. வீட்டில் ஒன்றரை வயதுக் குழந்தை பெற்றவர்களின் இறப்பை அறிந்துகொள்ள முடியாமல் கரைந்துகொண்டு இருக்கிறது. துணைக்கு இருக்கும் கிழவி மாரில் அடித்து அழுகிறாள்.
சாலையைக் கடந்து மருந்துக் கடை நோக்கிச் செல்கிறார் ஒரு முதியவர். வேகமாக வந்த வாகனம் மோதி, அதே இடத்தில் சாகிறார். அவரது மருந்துச் சீட்டு காற்றில் பறக்கிறது. நோயில் இருந்து தன்னைப் பல ஆண்டுகள் காத்துக்கொள்ளத் தெரிந்தவரை, ஒரு நிமிடத்தில் சாலை பலிவாங்கிவிட்டது.
இப்படி திருமணத்துக்காகச் சென்றவர்கள், விடுமுறை கழிக்க வந்தவர்கள், வீடு திரும்பியவர்கள், யாத்திரை சென்ற குடும்பம் என்று எத்தனை எத்தனை மனிதர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்திருக்கிறார்கள். வயது வேறுபாடு இன்றி, விபத்தில் பலியாகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
சாலையில் என்ன பிரச்னை? வாகன நெரிசல் என்பது கண்கூடான காரணம். மற்றொன்று... அவ சரம். இந்த இரண்டுடன் மிதமிஞ்சிய சாலை ஆக்கிர மிப்புகள், போதை, முறையற்ற வாகன ஓட்டும் உரிமம், சாலை விதிகளைப் பற்றிய முற்றிலுமான அலட்சியம், அதை முறைப்படுத்தவே முடியாத சாலைக் காவலர்கள். இப்படி அலட்சியமும் அக்கறை இன்மையும் ஒன்று சேர, நமது சாலைகள் உயிர் குடிக்கும் எமன்களாக மாறிவிட்டன.
மனித உயிர் இவ்வளவு அற்பமானதா என்ன? விபத்தில் செத்துக்கிடக்கும் மனிதன் எத்தனை கனவுகளுடன் சென்றிருப்பான்! எவ்வளவு நம்பிக்கையுடன் வாழ்க்கையை இறுக அணைத்துப் பற்றியிருப்பான்! எதற்காக அவன் உயிரிழக்க வேண்டும்? எதிர்பாராமல் நடப்ப தன் பெயர்தான் விபத்து. ஆனால், இன்று நடப்பதோ சாலைப் பலிகள்.
|