சோர்வடையாமல், தன்னைத் தேடி யாரா-வது நிச்சயம் வருவார்கள் என்று தொடர்ந்து சைவக் கால-ணிகள் செய்து வந்தான். இது அவன் மனைவிக்குப் பிடிக்கவில்லை. அவள் மற்ற பெண்-களைப் போல அழகான தோல் காலணிகள் அணி-ய விரும்பினாள். அத்துடன் வருமானம் இல்லாதவனோடு எப்படி வாழ்வது என்று எரிச்சல்பட்டாள். செருப்பு தைக்கிற வனோ தன் கொள்கையில் உறுதியாக இருந்தான்.
ஒருநாள் அவன் மனைவி, அவனை விட்டு விலகி, அருகில் உள்ள இறைச்சிக் கடைக்காரனுடன் சேர்ந்து வாழப்போவதாகச் சொல்லி, அவன் தந்த அழ-கான தோல் செருப்பைக் காட்டுகிறாள். 'நிச்ச-யம் எனக்கு ஓர் எதிர்காலம் இருக்கிறது, நம்பு' என்று தன் மனைவியைக் கெஞ்சுகிறான். அவள் கண்டுகொள்ளாமல் அவனைப் புறந்தள்ளிச் செல்கிறாள்.
யாரும் இல்லாமல் தனிமையில் தினமும் அவன் சைவக் காலணிகள் செய்து வந்-தான். ஓர் இரவு அவன் செருப்புக் கடைக்கு ஒரு கார் வந்து நின்றது. பணக்காரப் பெண் இறங்கி, கடையில் உள்ள செருப்புகளை வேடிக்கை பார்க்கத் துவங்-கினாள். தன்னிடம் தோல் செருப்பு எதுவும் இல்லை என்று அவன் தயக்கத்துடன் சொன்-னான். அவள் தனக்கு தோல் செருப்பு அவசியம்-இல்லை என்றபடியே தன் காலைக் காட்-டி-னாள். அவள் மரத்தால் ஆன செயற்கைக் கால் அணிந்-திருந்தாள்.
பிறகு, பெருமூச்சுடன் 'இவ்-வளவு பெரிய நகரத்-தில் நீ ஒரு-வன் மட்டுமே மரத்-தில் காலணி செய்யத் தெரிந்தவன். என் செயற்கைக் கால் பழுதாகிவிட்டது. சரிசெய்து தரமுடியுமா' என்று கேட்டாள்.
அவன் உற்சாகத்துடன் மரக் காலைச் சீர் செய்து கொடுத்தான். அவன் திறமையைக் கண்டு மகிழ்ந்து போன அவள், 'என்னைப் போல கால்கள் இழந்து போன எத்தனையோ ஆயிரமாயிரம் பேர் உன் போல மரத்தில் காலணி செய்யத் தெரிந்தவன் கிடைக்காமல் சிரமப்படுகிறோம். நீ மிகத் திறமையானவன். என் னிடம் உள்ள பணம் முழுவதையும் செலவழித்து செயற்கைக் கால்களைத் தயாரிப்போம். தேவைப்-படுபவர்களுக்கு உதவி செய்வோம்' என்று அவனை அழைத்துச் சென்றாள் என்று முடிகிறது கதை.
இது படித்துக் கடந்து செல்ல வேண்டிய ஒரு கதை இல்லை. நம் கவனம்கொள்ள மறந்ததை நினைவூட்டும் கதை. ஒரு நிமிடம் யோசனை செய்துபாருங்கள்... சென்னை போன்ற பெருநகரில் எவ்வளவு செருப்புக் கடைகள்! எத்தனை விதமான செருப்பு வகைகள். எவ்வளவு ஆயிரம் விலை. ஆனால், உடற்குறைபாடு உள்ளவர்களுக்கான செருப்புக் கடைகள், செயற்கை உறுப்புகள் விற்பனை செய்பவர்கள் நம் கண்ணில் படவே இல்லை. சேவையாகச் செய்து வருபவர்கள்கூட மக்கள் கவனத்தில் கொள்ளவே இல்லை. கால் ஊனம் கொண்ட ஒருவர் தனக்கான காலணியை வாங்குவதற்கு நேரிடும் அவலம் சொல்லில் விளக்க முடியாதது.
சாப்பிடவும், சுகிக்கவும் என சுயலாபங்களுக்கு மட்டுமானதில்லை வாழ்க்கை. அதை அர்த்தப்படுத்திக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.
மூன்று வருடங்களுக்கு முன்பாக ஹாலிவுட்டில் வெளியான 'The Fall' என்ற படத்தைப் பார்த்தேன். அதை இயக்கியவர் நர்ஸிம் சிங் என்ற இந்தியர். மேஜிக்கல் ரியலிசம் எனப்படும் மாயக்கதை சொல்லல் முறையில் உருவாக்கப்பட்ட படம். படத்தின் ஒளிப் பதிவும் இசையும் மிக அற்புதமானது.
ராய் வாக்கர் என்ற சண்டைப் பயிற்சிக் கலைஞன் தன் காதலியை வசீகரப்படுத்த ஒரு சண்டைப் பயிற்-சியில் ஈடுபடும்-போது காய-ம-டைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்படு கிறான். அதே மருத்துவ-மனையில் கைமுறிவு சிகிச்-சைக்-காக வந்து சேர்கிறாள் அலெக்-ஸாண்ட்ரியா என்ற சிறுமி. அவள் கதை கேட்ப-தில் ஆர்வம் கொண்டவள். மருத்துவ-மனை-யைச் சுற்றி அலையும் அவ-ளுக்கு ராய்-- வாக்-கரு-டன் நட்பு உருவாகிறது. ராய் வாக்கர் தன் வாழ்க்-கையை ஒரு சாகசக் கதை போலச் சொல் கிறான். அவன் சொல்லும் கதையும் மருத்துவமனை நாட் களும் மாறி மாறி வருகின்றன. இரண்டு தளங்களில் ஒரே நேரத்தில் படம் செல்கிறது.
கதை கேட்கும் சிறுமி தானே ஒரு பாத்திரமாகி விடுகிறாள். தற்கொலை செய்துகொள்ள முயலும் ராய் வாக்கருக்குக் கதை சொல்வது மட்டுமே ஆறுதல் தருவதாக உள்ளது. முடிவில்லாத அந்தக் கதையின் வழியே சிறுமி சிகிச்சை முடிந்து வெளியே செல்கிறாள். கதைகளில் வரும் சாகசக்காரனைப் போலவே அவள் மனதில் பதிந்துபோகிறான் ராய் வாக்கர். அவனைப் பற்றிய கதைகளை அவள் சொல்லவும் நம்பவும் துவங்குவதோடு, படம் நிறைவுபெறுகிறது.
படத்தில், டார்வின் என்ற சிந்திக்கத் தெரிந்த குரங்கு இடம் பெறுகிறது. இது மனிதர்களின் செயல் களைத் தொடர்ந்து கேலி செய்கிறது. நம் வாழ்க்கை நம் கதைகளின் வழியேதான் நம்பிக்கைகளைப் பெறுகிறது எனும் நர்ஸிம் சிங், மகாபாரதம் போன்ற இந்தியக் கதை சொல்லும் முறையை ஹாலிவுட்டுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். காட்சிப்படுத்துதல் மற்றும் கதை சொல்லும் விதத்தில் இப்படம் ஒரு முன்னோடி.
நர்ஸிம் சிங் அமெரிக்க விளம்பரப் பட உலகில் கொடிகட்டிப் பறக்கும் இந்தியர். கோக், நைக் போன்ற முக்கிய நிறுவனங்களுக்கான விளம்பரங்களைத் தயாரிப்பவர். இப்படத்தில் டாலி, எஷர் போன்ற உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் பாதிப்பு உள்ளது. கதை கேட்பதும் சொல்வதும் வயது வேறுபாடற்ற செயல் என்பதை இப்படம் நிரூபணம் செய்கிறது.
பால்ய வயதிலிருந்து நம் மனதில் புதையுண்டு போயுள்ள கதைகளை மீட்டு எடுக்கவும், மறுபடியும் கதை சொல்லவும் வேண்டிய அவசியம் இன்று அதிகம் உள்ளது. கதை தெரியாதவர்களே உலகில் இல்லை. கதைகளுக்கு கால் கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதயம் இருக்கிறது. அது துடித்துக்கொண்டு இருக்கிறது. விருப்பமிருந்தால், நீங்களும் அதைக் கேட்கலாம்... உணரலாம்!
- - இன்னும் பரவும்...
|