நோபல் பரிசு பெற்ற இந்திய மகாகவியான ரவீந்திரநாத் தாகூர், கடிதம் பற்றி ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். 50 வருடங்களுக்கு முன்பு வெளியான கதை அது. கதையின் தலைப்பு, 'மனைவியின் கடிதம்'. தாகூர் சிறந்த கவிஞர் மட்டுமே இல்லை; சிறந்த சிறுகதை ஆசிரியரும்கூட என்பதற்கு இக் கதையே உதாரணம்.
கதை, மிருணாள் என்ற பெண் முதன்முறையாகத் தன் கணவனுக்கு எழுதிய கடித வடிவில் உள்ளது. மிருணாள் திருமணமாகி 15 வருடங்களாக புனித யாத்திரை போக விரும்புகிறாள். கணவனோ தனக்கு லீவு கிடைக்காது என்று பொய்க் காரணம் சொல்லி, பல முறை மறுத்துவிடுகிறான். முடிவில் ஒரு நாள் அவளாக தனியே பூரி ஜெகந்நாத் கோயிலுக்குப் பயணம் மேற்கொள்கிறாள்.
அந்தப் பயணம் இத்தனை ஆண்டு காலம் வீட்டில் சமையல் அறைக்குள் அடைபட்டுக்கிடந்த அவளது ஏக்கம் மற்றும் மன வேதனைகளுக்கு மாற்றாக அமைகிறது. தன்னை மறுபரிசீலனை செய்துகொள்ளத் துவங்குகிறாள். கணவனுக்காகத் தன்னை அர்ப்பணம் செய்துகொண்டு வாழ்ந்ததாகத் தான் நம்பியது எவ்வளவு போலியான வாழ்க்கை என்பதைக் கண்டுகொள்கிறாள். அவளது நினைவுகள் புரள்கின்றன.
ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டு, ஒரே படுக்கையைப் பகிர்ந்துகொண்டபோதும் மனைவியின் குரல் பெரும் பாலும் கணவன் காதில் விழுவதே இல்லை. சமையல் தவிர்த்து வேறு எதைப்பற்றிப் பெண் பேசினாலும் அது வீண் வேலை என்று நினைக்கும் பொது புத்தியே பெரும் பான்மை கணவர்களுக்கும் இருக்கிறது. அதனால், தன் மனதை உறுத்திய அத்தனை விஷயங்களையும் அவள் ஒரு கடிதமாகக் கொட்டித் தீர்க்கிறாள். குடும்பம் எவ்வளவு வன்முறையை ஒரு பெண்ணுக்கு உருவாக்குகிறது என்ப தன் சாட்சி இக் கதை.
கிராமத்தில் பிறந்து வளர்ந்த மிருணாளை இரண்டாவது மனைவியாகப் பெண் கேட்டு வருகிறார்கள். அப்போது அவளுக்கு வயது 12. முதல் மனைவி அழகாக அமையவில்லை என்பதால், அழகான பெண்ணைத் தேடி கிராமத்துக்கு வந்து மிருணாளைத் திரு மணம் செய்கிறார்கள். வங்காளத்தில் காலரா நோயும், இளம் பெண்களும்தான் தேடி அலையாமல் எளிதாகக் கிடைக்கக்கூடியவர்கள் என்று தாகூர் கோபத் துடன் சுட்டிக்காட்டுகிறார். மிருணாள் சுயமாக யோசிக்கக்கூடியவள். அது அவள் அம்மாவுக்குக்கூடப் பிடிப்பதில்லை. புத்திசாலித்தனம் பெண்களுக்குத் தீராத பிரச்னையை உண்டுபண்ணும் என்று திட்டுகிறாள்.
அழகியைத் திருமணம் செய்துகொண்ட கணவன் சில நாட்களிலே அவளை ஒரு வேலைக்காரி போல நடத்துகிறான். எந்த அழகுக்காக அவளை யாவரும் புகழ்கிறார்களோ, அந்த அழகை அவள் கணவன்கூட ஏறிட்டுப் பார்க்க மறுக்கிறான். அவள் கூந்தலைக்கூட முடிக்கவிடாமல் திட்டுகிறார்கள். அவளுக் குக் கணவன் வீட்டில் இருந்த இரண்டு பசு மாடுகள் மட்டுமே துணை. அந்தப் பசுக்களிடம் தன் சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறாள்.
மாடுகளுடன் பேசக்கூடிய முட்டாள் என்று அவளை ஆண்கள் ஏளனம் செய்கிறார்கள். மிருணாள் கர்ப்பிணியாகிறாள். சுகாதாரமற்ற இருட்டு அறையில் அவளது பிரசவம் நடக்கிறது. முறையான வைத்தியம் இல்லை.
பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால், சில நாளிலே அது இறந்துவிடுகிறது. பிரசவ அறையில் மரணம் வந்து நின்று அவளையும் அழைக்கிறது. நோயும் மரணமும் பெண்களை நெருங்கி வரும்போது, அதைத் தடுக்க எவருக் கும் விருப்பம் இருப்பதில்லை என்பதை அறிந்துகொள்கிறாள். எமனுக்கும் பெண் உயிர் அற்பம் என்று தோன்றியோ என்னவோ அவளை விட்டுவிடுகிறான்.
தனிமையும் துக்கமும் அவளை வாட்டுகிறது. அந்த வலியை அவள் கவிதையாக எழுதுகிறாள். அவளுக்கு அப்படியரு படைப்பாற்றல் இருக் கிறது என்பதை எவரும் அறியவே இல்லை. ஒருவேளை, தான் கவிதை எழுதுவதாகச் சொன்னால், அதை யும் கேலி செய்து திட்டுவார்கள் என்று மறைத்துவிடுகிறாள்.
திருமணம் அவளது வாழ்க்கையை 20 வயதுக்குள்ளாகச் சலிப்புக்கொள்ளவைத்து விடுகிறது. தான் ஒரு படுக்கையறைப் பதுமை என்பதை முற்றாக உணர்கிறாள். ஒரு நாள் அந்த வீட்டுக்கு முதல் மனைவியின் தங்கை பிந்து அடைக்கலமாக வந்து சேர்கிறாள். அவளை மிருணாளுக்குப் பிடித்துவிடுகிறது. அவளுடன் நட்பாகப் பழகுகிறாள். அந்தப் பெண் மிருணாளைச் சீவிச் சிங்காரித்து அலங்காரம் செய்து, அவள் முகத்தை அருகில் வைத்துப் பார்த்தபடியே 'அக்கா! உன் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது..! யாராவது இப்படி அருகில் வைத்து ரசித்திருக்கிறார்களா?' என்று கேட்கிறாள். மிருணாளுக்கு அழுகையாக வருகிறது.
குடும்பச் சுமை என்ற பெயரில் அவளது சிறு சிறு சந்தோஷங்கள்கூடப் பறிக்கப்படுகின்றன. பிந்துவை ஒரு பைத்தியக்கார மாப்பிள்ளைக்குக் கட்டித் தருகிறார்கள். அவள் மிருணாள் எதிரேயே தற்கொலை செய்து செத்துப்போகிறாள். வீட்டின் நெருக்கடி மிருணாளை மூச்சுத் திணறச் செய்கிறது.
|