புத்தகச் சந்தையில் ஓர் இளம் பெண் எனது 'உறுபசி' நாவலை வாங்கிக்கொண்டுபுத்த கத்தில் என்னைக் கையெழுத்திடக் கேட்டார். 'உங்கள் பெயரைச் சொல்லுங்கள் கையெழுத்திட்டுத் தருகிறேன்' என்று சொன்னேன். 'அநித்யா' என்றார். 'கேள்விப்படாத பெயராக இருக்கிறதே... வட இந்தியரா?' என்று கேட்டேன். அந்தப் பெண் சிரித்தபடியே, 'அது என் பெயர் இல்லை' என்றார். 'அப்படியானால் யாருக்காக இந்தப் புத்தகம்?' என்றேன்.
தயங்கிய குரலில் அவர் பேச ஆரம்பித்தார். 'என் கணவருக்கு நான் பணம் கொடுத்துப் புத்தகம் வாங்குவது பிடிக்காது. வீட்டில் புத்தகம் படித்தால் திட்டுவார். கோபம் வந்தால் கிழித்துப் போட்டுவிடுவார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக நானாக உண்டாக்கிக்கொண்ட தோழியின் பெயர்தான் அநித்யா.
நிஜமாக அப்படி யாரும் இல்லை. அநித்யா என்னோடு வேலை பார்க்கிறாள். நிறையப் படிப்பவள் என்று பொய் சொல்லி வைத்திருக்கிறேன். அதனால் இந்தப் புத்தகங்களை அவர் எதுவும் செய்வது இல்லை. பத்து, இருபது புத்தகங்கள் சேர்ந்தவுடன் அவற்றை நானே கொண்டுபோய் முதியோர் காப்பகம் ஒன்றில் கொடுத்துவிடுவேன். இந்த உலகத்தில் என் கணவருக்குப் பிடிக்கவே பிடிக்காத பொருள் புத்தகம் மட்டுமே. புரட்டிக்கூடப் பார்க்க மாட்டார்' என்றார்.
'உங்கள் கணவர் என்ன வேலை செய்கிறார்?' என்று கேட்டேன். 'பன்னாட்டு வங்கியின் நிதி ஆலோசகராக இருக்கிறார். எம்.பி.ஏ., படித்து இருக்கிறார்' என்றார். 'எதனால் புத்தகங்கள் மீது அவருக்குக் கோபம்?' என்று கேட்டேன். 'தெரியவில்லை. இதைப்பற்றிப் பேசினாலே கோபம் வந்துவிடும். அதனால் வீட்டில் அதிகம் படிக்க முடியவில்லை. ரயிலில்தான் நிம்மதியாகப் புத்தகம் படிக்க முடிகிறது' என்றபடியே கையெழுத்திட்டு வாங்கிக்கொண்டு போனார்.
புத்தகம் ஏன் ஒருவருக்குப் பிடிக்காமல் போகிறது? எதனால் எழுத்தின் மீது இத்தனை வெறுப்பு உருவாகிறது? காலில் மிதிபடும் காகிதத்தைக்கூட சரஸ்வதி என்று தொட்டுக் கும்பிடப் பழகிய மக்களுக்கு எப்படிப் புத்தகம் மீது இவ்வளவு கசப்பு உணர்வு உருவானது?
புத்தகம் படிக்க விருப்பம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், புத்தகங்களைப் பிறர் படிப்பதைப் பார்த்தாலே கோபம் வருவதை, புத்தகங்களை எரித்துவிடுவதை எப்படிப் புரிந்துகொள்வது? என்ன மனக் கோளாறு இது?
நான் சென்னை வந்த புதிதில் ஒரு மேன்ஷனில் தங்கி இருந்தேன். அந்த மேன்ஷனில் 80 சதவிகிதம் பேர் மாத வருமானம் உள்ளவர்கள். அதில் சிலர் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள். ஒன்றிரண்டு பேர் ஆய்வு மாணவர்கள். விதிவிலக்காக என்னைப் போன்ற இரண்டு உதவாக்கரைகள் இருந்தோம்.
எனது அடுத்த அறையில் இருந்த நபர் தினமும் காலை எட்டரை மணிக்கு அறைக்கு வந்து ஆங்கில நாளிதழ் வேண்டும் என்று கேட்பார். பரவாயில்லை, படிப்பதற்கு இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாரே என்று தந்துவிடுவேன். அடுத்த அரை மணி நேரத்துக்குப் பிறகு அதை மடித்தபடியே திரும்பக் கொண்டுவந்து தருவார்.
ஒரு நாள் பேப்பரை அவர் வாங்கிக்கொண்டு போன மறு நிமிஷம், தண்ணீர் வேண்டும் என்று அவரது அறைக்குப் போனபோது, அந்த ஆங்கில நாளிதழைத் தரையில் விரித்து உட்கார்ந்து டிபன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். என்னைப் பார்த்தவுடன் பேப்பர் வேண்டுமா சார் என்று கேட்டார். ஆத்திரமாக வந்தது.
'தரை ரொம்ப அழுக்கா இருக்கு சார். அதான்...' என்று இயல்பாகச் சொன்னார். அவரை என்ன செய்வது என்று புரியவே இல்லை. அவராவது பரவாயில்லை என்பது போல இன்னும் சிலர் மின்சாரம் இல்லாத நேரங்களில் விசிறுவதற்கும், ஆடும் கட்டிலுக்குக் கீழே முட்டுக்கொடுப்பதற்கும் மட்டுமே புத்தகங்களை உபயோகப்படுத்துகிறார்கள்.
|