மாலை நேரம். பிரபலமான ஜவுளிக் கடை ஒன்றில் எனது பையன்களுக்கான உடைகள் வாங்க நின்று இருந்தேன். ஓர் இளம் பெண் கையில் மிக அழகான கைக்குழந்தை. அந்தப் பெண்ணின் கணவர் ஏதோ உடைகளைத் தேர்வு செய்துகொண்டு இருந்தார். உடைந்து சிதறும் பனிக்கட்டி போன்ற சிரிப்புடன் போகிற வருகிறவர்களைப் பார்த்துக் கையசைத்துக்கொண்டு இருந்தது குழந்தை. அதன் கண்கள் யாவரையும் தன்னை நோக்கி அழைத்துக்கொண்டு இருந்தன.
எவரும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அந்தக் குழந்தையை அருகில் சென்று கொஞ்ச வேண்டும் என்று தோன்ற வும் இல்லை. எனக்கு அந்தக் குழந்தையை ஒரு நிமிஷமாவது கையில் தூக்க வேண்டும் போல ஆசையாக இருந்தது.
அந்தக் குழந்தை தன்னைப் பார்க்கிறது என்று அங்கு இருந்த பலருக்கும் நன்றாகவே தெரிந்தது. ஆனாலும், எவரது கையும் குழந்தையைக் கொஞ்ச நீளவில்லை. ஒருவேளை அதுதான் நாகரிகம் என்று நினைக்கிறார்களோ என்றுகூடத் தோன்றியது. என் மனைவி 'ஆமாம். அது அவர்கள் குழந்தையாயிற்றே... எந்த உரிமையும் இல்லாமல் எப்படித் தொடுவது, தூக்குவது?' என்று கேட்டாள். 'வேறு எப்படி அந்தக் குழந்தையின் மீதான அன்பைப் பகிர்ந்துகொள்வது?' என்று கேட்டேன்.
இப்போது எவரும் அடுத்தவர் குழந்தைகளைக் கொஞ்சுவதும் இல்லை. தூக்கி வைத்துக்கொள்ள விரும்புவதும் இல்லை. காலம் நிறைய மாறி இருக்கிறது.
எதற்காகக் கைவிட்டோம் என்று தெரியாமல் நமது இயல்பான பழக்கங்கள் வெகுவாக மாறி இருக் கின்றன.
நம் குழந்தை, மற்றவர் குழந்தைகள் என்ற பேதம் இன்று துல்லியமாக உள்ளது. அடுத்தவர் குழந்தைகள் என்பதால், அதன் வயதை மறந்து தன் இயல்பை மறந்து அதை வெறும் பொருளாகக் கருதும் சூழல் வந்திருக்கிறது.
ஒரு முறை சித்தூரில் இருந்து பேருந்தில் வந்துகொண்டு இருந்தபோது, ஒரு பெண் இரண்டு வயதுக் குழந்தையுடன் நின்று கொண்டு இருந்தார். குழந்தை இடைவிடாமல் அழுதபடியே இருந்தது. 'இந்த ஸீட்டில் உட்காருகிறீர்களா?' என்று கேட்டேன். 'வேண்டாம்' என்றார். பேருந்தில் இருந்த பெண்கள் ஒருவர்கூட எழுந்து அவருக்கு ஸீட் கொடுக்கவில்லை.
பேருந்தில் எவ்வளவு நெருக்கடியான கூட்டத்திலும்கூட அந்நிய ஆண் அருகில் உட்காரக் கூடாது என்ற அர்த்தமற்ற நம்பிக்கைகொண்டவர்களாக, எதற்குப் பெண்களை வளர்த்து இருக்கிறோம் என்று கலாசாரச் சூழல் மீது கோபமாக வந்தது.
'குழந்தையையாவது என்னிடம் கொடுங்கள்' என்று கேட்டேன். தயக்கத்துடன் அதைக் கேட்காதவர் போல் இருந்தார். நான் கையை நீட்டியதும் குழந்தையை என்னிடம் தந்தார். மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு காற்று வரும்படியாக ஜன்னலை முழுமையாகத் திறந்துவைத்தேன். சில நிமிஷங்களில் அதன் அழுகை நின்றது. என் கைகளில் குழந்தையின் வெதுவெதுப்பும் மென்மையும் ஏறியது.
அதுவரை பேருந்துப் பயணம் ஏற்படுத்தி இருந்த அசதியும் களைப்பும் அப்படியே |