திடீரென ஒரு நாள் போன் வந்தது. தான் இப்போது கிராமத்துக்கு வந்திருப்பதாகவும், நான் விரும்பினால் வரலாம் என்றும் அழைத்தார். 'உங்கள் அப்பாவின் சேமிப்பு பற்றி எழுதியிருந்தீர்களே, அது என்ன?' என்று கேட்டேன். 'என் அப்பா புகைப்படங்கள் எடுக்கக் கூடி யவர். நிறைய கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் அவரிடம் உள்ளன. நீங்கள் வந்து பாருங்கள்' என்றார். அடுத்த நாள் அவரது கிராமத்தில் இருந்தேன். அவரால் நம்பவே முடியவில்லை.
நண்பரின் அப்பாவுக்கு 65 வயது இருக்கும். சவரம் செய்யப்படாத, நரைத்த முகம். பேசுவதற்கு மிகுந்த தயக்கத்துடன் இருப்பதை அவரது கண்கள் காட்டிக்கொண்டு இருந்தன. நான் அருகில் அமர்ந்து, 'உங்களைப் பார்க் கத்தான் வந்திருக்கிறேன்' என்று சொன்னேன்.
'பையன் ஏதோ சும்மா சொல்லியிருக்கான். நான் அப்படி ஒண்ணும் பெரிசா போட்டோ எடுத்திடலை. ஏதோ ஆசையில் ஒரு கேமரா வாங்கினேன். அதிகம் எடுக்க வில்லை' என்று தயங்கித் தயங்கிச் சொன்னார். 'பரவாயில்லை. நீங்கள் எடுத்த புகைப்படங்களைக் காட்டுங்கள் பார்க்கலாம்' என்றேன்.
அவர் தன்னுடைய சூட்கேஸை எடுத்துக்கொண்டு வரும்படி பையனி டம் சொன்னார். அந்த சூட்கேசுக்கு வயது நிச்சயம் முப்பது வருடங்களுக்கு மேலாக இருக்கக்கூடும். அப்படியான சூட்கேஸ்கள் இன்று காண முடிவது இல்லை. அவர் பெட்டியைத் திறந்து, நாளிதழ்களில் இருந்து துண் டிக்கப்பட்டு இருந்த செய்தி கள், சான்றிதழ்கள் ஆகியவற் றைத் தனித்து எடுத்ததும் உள்ளே கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் நிரம்பி இருந்தன.
ஒரு புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்த்தேன். இறந்து போய் தாடை கட்டப்பட்ட ஒருவரின் புகைப் படம். இன்னொரு புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்த்தேன். நிறைய மலர் மாலைகள் போடப்பட்ட இறந்து போன மனிதனின் புகைப்படம். 'என்ன இது' என்று புரியாமல் நாலைந்து புகைப்படங்களைக் கையில் எடுத்துப் பார்த்தபோது, எல்லாமே செத்துப்போன மனிதர்களின் புகைப்படங்கள்.
அவராகவே சொன்னார், 'நான் எங்க கிராமத்தில் யார் செத்துப் போனாலும் அவங்களை ஒரு போட்டோ எடுத்து வெச்சுக்கிடுவேன். எதுக்குன்னு தெரியலை. ஆனா, என் 30 வயசுல இப்படி ஒரு ஆசை வந்துச்சு. அதுக் காகவே ஒரு கேமரா வாங்கினேன். வீட்ல இருக்கிறவங் களை ஒன்றிரண்டு படம் எடுத்திருக்கிறேன். மற்றபடி எங்க ஊர்ல வெவ்வேறு வயசுல செத்துப்போன எல்லோரது புகைப்படங்களும் என்கிட்டே இருக்கு.
எதுக்காக இந்தப் பழக்கம்னு தெரியலை. ஆனா, அது வளர்ந்து, பக்கத்துல இருக்கிற கிராமங்களுக்கும் போய் செத்துப்போன ஆட்களை போட்டோ எடுக்க ஆரம்பிச் சேன். ஆரம்பத்தில் எல்லாம், இறந்துபோன ஆளை ஏன் போட்டோ எடுக்கிறேனு என்கூட சண்டை போடுவாங்க. அப்புறம் அவங்களுக்கும் பழகிப்போயி ருச்சி. யாரும் ஒண்ணும் சொல்றதில்லை.
சில சமயம், செத்துப்போன ஆளோட போட்டோ வேணும்னு கேட்பாங்க. பிரின்ட் போட்டுத் தருவேன். இப்படி என்கிட்டே ரெண்டாயிரத்துக்கும் மேல போட்டோ இருக்கு. இன்னொரு பெட்டி நிறைய வெச்சிருக்கேன். இப்போ இதை என்ன செய்றதுன்னு தெரியலை' என்றார்.
எனக்கு அவரது செயலின் பின்னுள்ள மனத் தீவிரத்தைப் புரிந்துகொள்ள முடிய வில்லை. 'உயிரோடு இருப்பவர்களின் முகங்கள் உங்களுக்குப் பிடிப்பதில்லையா?' என்று கேட்டேன். 'அப்படி எல்லாம் இல்லை. செத்துப்போன மனுசங்கள் மீது ஏனோ எனக்கு ஈடுபாடு. அதைப் பயம்னு சொல் றதா... இல்லை, இந்த மனுசன் இனிமே உலகத்தில் இருக்க மாட்டான்கிறதாலயே அவன் நினைவைப் பதியவைக்கிற ஆசையான்னு தெரியலை. ஆனா, மனுஷ வாழ்க்கையோட அர்த்தம் இந்த போட்டோக்களைப் பார்த்தா புரியுது!' என்றபடியே அந்தப் புகைப்படத்தின் கட்டில் இருந்து பழைய புகைப் படம் ஒன்றை உருவி எடுத்தார். ஒவ்வொரு புகைப் படத்தின் பின்னாலும் தேதி இருக்கிறது. அந்தப் புகைப் படத்தில் இருந்த மனிதனைக் காட்டி, 'இவர் என்கூட வேலை பார்த்த வாத்தியார். இவரால நான் ரெண்டு முறை பள்ளிக்கூடத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டு இருக்கிறேன். ஆனால், அவர் செத்த அன்று அவரது உடலைப் பார்க்கப் போயிருந்தேன். என்னை மீறி அழுகை அழுகையாக வந்தது. எதற்காக இந்த மனுசன் என்னிடம் அப்படி நடந்துகொண்டார் என்று புரியவில்லையே என்று தோன்றியது.
உயிரோடு இருந்தால் அவரை ஒருமுறைகூடப் புகைப் படம் எடுத்திருக்க மாட்டேன். அவரும் அனுமதித்திருக்க மாட்டார். ஆனால், இறந்த உடலைப் புகைப்படம் எடுத் துக்கொண்டு வந்து நாலைந்து நாட்கள் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒருவேளை, நான் அவரைப் புகைப்படம் எடுத்துவைக்காமல் போயிருந்தால், அவர் மீதான வெறுப்பு இன்றைக்கும் அப்படியேதான் இருக்கக் கூடும்.
|