அவர்களுக்குள் துளிர்விடும் அறிவு அப்படியே வாடிப்போய் உதிரத் துவங்கிவிடுகிறது. சிறுவர்கள் எப்போதும் கேள்விகளால் சூழப்பட்டே இருக்கிறார்கள். உலகின் ஒவ்வொரு சிறு செயலும் ஏன் நடக்கிறது என்ற கேள்வி அவர்களுக்குள் இயல்பாக எழுகிறது. புரிந்துகொள்ளவும், ரசிக்கவும், யோசிக்கவும் விரும்புகிறார்கள். நமக்கு அதற்கான நேரம் இல்லை. விருப்பம் இல்லை. அப்படிக் குழந்தைகள் வளர வேண்டும் என்ற தேவை இல்லை என்ற மனப்பாங்கு நமக்குள் ஆழமாக வேர்விட்டு இருக் கிறது.
பள்ளியில் படிக்கவைப்பது மட்டுமே தங்களது ஒரே வேலை எனப் பெரும்பான்மையான பெற்றோர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். மாணவனுக்குக் கல்வியை மட்டுமே பள்ளி அறிமுகம் செய்யும். வீடுதான் நிஜமான கல்விக்கூடம். மனித உறவுகளையும், பழக்க வழக்கங்களையும், ருசியையும், விருப்பத்தையும், ரசனையையும், தனித் திறன்களையும் வீடுதான் அறிமுகப்படுத்துகிறது. கற்றுத் தருகிறது. இன்று உள்ள பிரதான பிரச்னை, கல்வி நிலையங்கள் எல்லாம் பெரிதும் வணிக மயமாகிவிட்டன என்பது மட்டுமல்ல; வீடுகளும் எதையும் சிறுவர்களுக்குக் கற்றுத் தருவது இல்லை என்பதுதான்.
பெரியோர்களின் செயல்களைச் சற்றுத் தள்ளி நின்று பார்க்கும்போது, நாம் எவ்வளவு முட்டாள்தனமாகவும் அபத்தமாகவும் நடந்துகொள்கிறோம் என்பது புரிகிறது. உண்மையில் பெரியவர்கள் எதற்காகக் கோபப்படு கிறார்கள், ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை எந்த விஞ்ஞானமும் இன்றுவரை முழுமையாக விளக்கவே இல்லை.
ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளரான விலாஸ் சாரங்கின் 'கரப்பான்பூச்சியும் ஒரு கடிகாரமும்' என்ற சிறுகதை, பெற்றோர்களின் அபத்தமான மனநிலையை மிக அழகாக விவரிக்கிறது. கதையின் முக்கியக் கதா பாத்திரம் ஓர் உயர் அதிகாரி. அவரது குடும்பம் பெரிய அடுக்குமாடி வீட்டில் குடியிருக்கிறது. அவர் தினசரி தன்னுடைய கடிகாரத்துக்கு அலாரம் வைத்துவிட்டு உறங்குவது வழக்கம்.
ஒரு நாள் இரவு, பாதி தூக்கத்தில் கண் விழித்து மணி என்ன என்று பார்க்க முயற்சிக்கிறார். கடிகாரத்தினுள் ஒரு கரப்பான்பூச்சி இருப்பது தெரிகிறது. கரப்பான்பூச்சி எப்படி கடிகாரத்துக்குள் போனது என்று புரியாமல், அதை வெளியே துரத்துவதற்காக மேலும் கீழுமாகக் கடிகாரத்தைக் குலுக்குகிறார். கரப்பான்பூச்சி நகரவே இல்லை.
உடனே அவர் கடிகார முள்ளைத் திருகி, அந்தப் பூச்சியைத் துரத்த முயற்சிக்கிறார். முள்ளை நகர்த்தியதும் கரப்பான்பூச்சி கடிகாரத்தின் உள்ளே போய்விடுகிறது. அவர் நிறுத்தியதும் வெளியே வந்துவிடுகிறது.
இதை எப்படியாவது அடிக்காமல் உறங்கக் கூடாது என்று முடிவு செய்து, விளக்கைப் போடுகிறார். அவரது மனைவி எழுந்து, 'என்ன வேணும்' என்று கேட்கிறார். 'ஊசி எங்கே இருக்கிறது' என்று கேட்கிறார். அவள், 'மணி ரெண்டு ஆகுது. இப்ப எதுக்கு ஊசி' என்று கேட்க... ஆத்திரமாகி, 'ஊசி எடுத்துக்கொண்டு வா' என்று கத்துகிறார்.
அவள் தேடிப் பார்த்துவிட்டு, 'காணவில்லை' என்கிறாள். அது அவரை இன்னும் அதிகமாகக் கோபப்படுத்துகிறது. 'எங்கே வெச்சுத் தொலைச்சே' என்று கூப்பாடு போடுகிறார். 'மகளிடம் கேட்க வேண்டும்' என்று மனைவி சொல்லவே... தான் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கும்போது அவர்கள் நிம்மதியாக உறங்குவதா என்று, 'உடனே அவர்களை எழுப்பு' என்கிறார்.
அடுத்த அறையில் உறங்கிக்கொண்டு இருந்த இரண்டு மகளையும் எழுப்பி, அப்பாவிடம் அழைத்து வருகிறாள் மனைவி. அதற்குள் அவர் கரப்பான்பூச்சியைக் கொல்வதற்கான முயற்சியில் களைத்துப் போயிருக்கிறார். அதைக் கண்ட மூத்த மகள், 'கடிகாரத்தின் பின்பக்கத்தைக் கழற்றினால் பூச்சி வந்துவிடும்' என்று யோசனை சொல்கிறாள்.
அதைக் கேட்டதும், 'உன் வேலையைப் பார்த்துட்டுப் போ. நான் அதுகூடத் தெரியாத முட்டாள் இல்லை. கடிகாரத்தின் பின்பக்கம் திறக்க முடியாத படி சீல் வைக்கப்பட்டு இருக்கிறது' என்கிறார். மனைவி, மகள் என யாவரும் செய்வது அறியாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். மாறி மாறி அவர் கரப்பான்பூச்சியைக் கடிகார முள்ளால் துரத்துகிறார். முடிவு இல்லாத விளையாட்டு போல் இருக்கிறது. அவரால் கரப்பான்பூச்சியைக் கொல்லவே முடியவில்லை.
தான் எவ்வளவு பெரிய அதிகாரி. எவ்வளவு வசதியானவர். படித்தவர். தன்னால் ஒரு கரப்பான் பூச்சியைக் கொல்ல முடியவில்லையே என்று ஆத்திரமும் கோபமும் பொங்குகிறது. இந்தப் போராட்டத்தில் அதிகாலையாகிறது. மனைவி, மகள் யாரையும் அங்கிருந்து வெளியே போகக் கூடாது என்று தடுத்து நிறுத்துகிறார். முடிவாக, கரப்பான்பூச்சியை அவர் அடித்துக் கொன்றபோது காலை மணி ஏழரை. இனிமேல் அலுவலகம் கிளம்பிப் போக நேரம் இருக்காது என்று முடிவு செய்து, அன்றைக்கு தான் விடுமுறை எடுக்கப் போவதாகச் சொல்லியபடியே, தான் எவ்வளவு பெரிய ஆள் என்று நிரூபித்த சந்தோஷத்தில் உறங்கச் செல்கிறார் அந்த உயர் அதிகாரி என்று கதை முடிகிறது. இதுதான் நவீன வாழ்வின் அபத்தம்.
நமது தவறுகள் நம் குழந்தைகளின் செயலில் எதிரொ லிக்கின்றன. நமது குழந்தைகள் நம்மை நம்பித்தான் இருக்கிறார்கள் என்பதே அதிகாரம் செலுத்துவதற்கான முதல் காரணமாகிறது.
'ஐ ஆம் சாம்' (I AM SAM) என்ற ஹாலிவுட் படம் 2001-ல் வெளியானது. மனவளர்ச்சி குன்றிய சாம் தனது ஏழு வயதுக் குழந்தையை வளர்ப்பதற்கு எவ்வளவு பிரச்னைகளைச் சந்திக்கிறான் என்பதே படத்தின் மையக் கதை. மிக அற்புதமான படம். ஜெசி நில்சன் இயக்கிய இப்படத்தில் சாம் டௌசனாக நடித்திருப்பவர் சீன்பென்.
ஏழு வயதுச் சிறுவனின் மனவளர்ச்சி மட்டுமே கொண்டு இருந்த சாம் டௌசன், ஸ்டார்பக்ஸ் என்ற காபி கடையில் வேலை செய்கிறான். அவனது மனைவி, குழந்தையைப் பெற்று அவனிடம் ஒப்படைத்துவிட்டு சாமை விட்டு விலகிப் போய்விடுகிறாள். சாம் தன் மகள் லூசியை மிக கவனமாக வளர்க்கிறான். லூசிக்கு இப்போது ஏழு வயது நடக்கிறது.
லூசியை எப்படி வளர்ப்பது என்று சாமுக்குத் தெரியவில்லை. அவள் மீது மிகுந்த அன்புகொண்டு இருக்கிறான். அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான். லூசி விரும்பும் இடங்களுக்கு அழைத்துப் போகிறான். அண்டை வீட்டாரின் ஆலோசனைகள், உதவியோடு அவளை வளர்க் கிறான்.
|