என்னால் நம்ப முடியவில்லை. 'எப்படி இப்படி ஓர் எளிய வழியைக் கண்டுபிடித்தீர்கள்?' என்று கேட்டேன். அவர் சிரித்தபடியே, "நாங்கள் கிராமவாசிகள். மனதில் எதையும் ஒளித்துவைக்கத் தெரியாது. அதே நேரம் ஒவ்வொரு நாளும் அடுத்தவரைப் பற்றிய புகார்களைச் சொல்லிக்கொண்டே இருந்தாலும் எரிச்சல் வந்துவிடும். எனது தாத்தா காலத்தில் இருந்து இப்படியான நடை முறை வீட்டில் இருந்து வருகிறது. இந்தப் புகார் பெட்டிக்குப் பெயர் 'மனக்குடுவை'. மனதில் உள்ளதைப் போட்டுவைக்கும் உண்டியல்.
இந்த நடைமுறையால் ஒருவர் மீது மற்றவர் புரணி பேசுவது, கோள் சொல்வது தவிர்க்கப்படுகிறது. அது போலத் தவறுகள் உடனடியாகத் திருத்திக்கொள்ளப்படு கின்றன. ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றி வீட்டில் உள்ள மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. ஆகவே, இதைத் தவறாமல் செய்துவருகிறோம். நாங்கள் 21 பேர் ஒரே வீட்டில் ஒன்றாகச் சச்சரவுகள் இன்றிச் சந்தோஷமாக வாழ முடிவதற்கு இதுதான் முக்கியக் காரணம்" என்றார்.
புத்தகங்கள் கற்றுத் தரும் நீதிபோதனைகளைவிட எளிய மனிதர்களின் நடைமுறைச் சாத்தியங்கள் வாழ்வினை மேம்படுத்த உதவுகின்றன என்பதையே இது காட்டுகிறது. நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இப்படியானஒரு மனக்குடுவை தேவையாக இருக்கிறது.
தபால் நிலையம், மின்சார அலுவலகம், ரயில்வே என்று பல பொது இடங்களில் புகார்ப் பெட்டிகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு முறைகூட இந்தப் பெட்டியில் என்ன புகார்கள் எழுதப்பட்டு இருந்தன, அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று எங்கேயும் குறிப்பிட்டோ, அறிவிப்பு வெளியிட்டோ நான் பார்த்ததே இல்லை.
நமது புகார்ப் பெட்டிகளில் பெரும்பான்மை வெறும் கண்துடைப்பு. உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதில் புகார்களை எழுதிப் போடலாம். ஆனால், பதிலை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். பல புகார்ப் பெட்டிகள் செயல்படவே இல்லை என்ற புகாரைக்கூட இன்னொரு பெட்டியில்தான் போட வேண்டியிருக்கிறது என்பதுதான் நமது துரதிருஷ்டம்.
புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் பெரும்பாலும் வேலை செய்வது இல்லை. வேலை செய்தால், பதில் சொல்ல ஆள் இல்லை. ஒருவேளை புகார் பதிவு செய்யப்பட்டாலும், குறைகளைச் சரிசெய்ய நீங்கள் எத்தனை நாள் காத்திருக்க வேண்டும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. சிறுவணிகத்தில் துவங்கி பெரிய அரசு நிறுவனம் வரை யாவும் பயனாளர் களை ஏமாந்த முட்டாள்களாகவே நடத்துகின்றன. அதற்கான எதிர்ப்பு, விழிப்பு உணர்வு நம்மிடம் அறவே இல்லை.
புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ், புத்திரசோகம் என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். ஐயனோவ் என்ற குதிரை வண்டிக்காரனைப் பற்றியது கதை. ஒரு நாள் குதிரை வண்டிக்காரனின் மகன், கடுமையான காய்ச்சலின் காரணமாக இறந்துபோய்விடுகிறான்.
தன் மகன் இறந்த துக்கத்தில் உள்ள ஐயனோவ் அதைப் பற்றி யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவனது குதிரை வண்டியில் ஒரு வியாபாரி ஏறுகிறான். அவனிடம் ஐயனோவ், "ஐயா, இன்று என் மகன் இறந்துவிட்டான்" என்று துக்கத்தோடு சொல்லத் துவங்குகிறான். அந்த வியாபாரி எரிச்சலுடன், "உன் கதை எனக்கு எதற்கு? பாதையைப் பார்த்து ஓட்டு" என்று வாயை அடைத்துவிடுகிறான். புத்திர சோகத்துடன் அவன் வண்டி ஓட்டுகிறான்.
அடுத்து, ஒரு ராணுவ வீரன் அவனது வண்டியில் ஏறுகிறான். அவனி டமும் 'ஐயா, என் மகன் இறந்துவிட்டான்' என்று சொல்லி ஐயனோவ் விம்ம ஆரம்பித்தவுடன், ராணுவ வீரன் 'அதனால் என்ன..?' என்றபடியே நகரில் எங்கே நாட்டியம் நடக்கிறது, எங்கே அழகான பெண்கள் இருக்கிறார்கள் என்று தன் விருப்பங்களைப் பேச ஆரம்பித்துவிடுகிறான். அவனிட மும் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. இப்படி நாள் முழுவ தும் தன் வண்டியில் ஏறுகிற ஒவ்வொ ருவரிடமும், நோயால் தன் மகன் இறந்துபோனதைப் பற்றிச் சொல்ல விரும்புகிறான். ஒரு ஆள்கூட அவனது சோகத்தைக் கேட்கத் தயாராக இல்லை.
முடிவில், இரவில் அவன் வீடு திரும்பி, தன் மனவேதனைகளை யாரிடம் கொட்டுவது என்று தெரியாமல் தன் குதிரையைக் கட்டி அணைத்துக்கொண்டு, "கண்ணே, இன்று என் மகன் இறந்து போய்விட்டான். அவனை என்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. நோயில் விழுந்து அவதிப்பட்டு இறந்துபோய்விட்டான்" என்று கதறிக் கதறி அழுதபடியே, தன் சோகத்தை குதிரையிடம் சொல்கிறான்.
குதிரை அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருப்பதுபோல வாயை அசைத்து அசை போடுகிறது. தலையை ஆட்டிக்கொள்கிறது. அடுத்தவர் துயரத்தைக் கேட்க யாரும் இல்லை என்ற அவலத்தைத் தாள முடியாமல், அவன் குதிரையிடம் தன் வலியைச் சொல்லி அழுகிறான் என்று கதை முடிகிறது.
இந்தக் கதை என்றோ நூற்றாண்டின் முன்பு ரஷ்யா வில் நடந்த நிகழ்ச்சி இல்லை. ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி நடப்பதும் இதுதானே! நான் பேசுவதை மற்றவர்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும்; ஆனால், எவர் பேசுவதையும் நாம் காது கொடுத்துக் கேட்கவே மாட்டோம் என்பதுதான் பொது இயல்பாக மாறி இருக்கிறது. ஏனோ இன்று பேச்சு ஒருவழிப் பாதை ஆகிவிட்டு இருக்கிறது.
|