புத்த மடாலயம் ஒன்றைக் காண்பதற்காக லடாக் பகுதியில் பயணம் செய்துகொண்டு இருந்தேன். டேமிஸ்காங் என்ற ஊரின் அருகே உள்ள பௌத்த ஆலயம் ஒன்றில் விழா. உற்சாகமாக மக்கள் வழிபட்டுக்கொண்டு இருந்தார்கள். நானும் அந்த ஆலயத்தினுள் சென்றேன். அந்தப் புராதன கோயிலின் இடிந்து போயிருந்த சுவரில் ஒரு துவாரம் இருந்தது. ஒவ்வொருவரும் அந்தத் துவாரத்தில் உதட்டை வைத்து ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.
என்ன அது என்று கேட்டேன். அது ரகசியத் துவாரம். யாரிடமும் சொல்லாமல் நமக்குள் மறைத்துவைக்கப்பட்டு உள்ள ரகசியங்களை இந்தத் துவாரத்தில் சொல்லிவிட்டால், ஒருபோதும் அடுத்த மனிதர்களால் அறிய முடியாதபடி அது பூமியின் உள்ளே போய்விடும் என்றார்கள்.
அந்த நிமிஷம் அப்படி என்ன ரகசியம் என்னிடம் இருக்கிறது என்று யோசித்தேன். எதுவும் இல்லை. சட்டென ஐந்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு நண்பன் என்னிடம் பாதுகாத்து வைத்துக்கொள்ளச் சொன்ன ஒரு ரகசியம் நினைவுக்கு வந்தது. ஒரு நாள் பள்ளிவிட்டுத் திரும்பும்போது எனக்கு மிக நெருக்கமான நண்பனாக இருந்த பாண்டி, ஒரு ரகசியத்தை என்னிடம் சொல்லி, 'யார்கிட்டேயும் சொல்லிடாதே' என்று சத்தியம் வாங்கினான். நிச்சயம் சொல்ல மாட்டேன் என்று வலது கையில் சத்தியம் செய்தேன். அப்படியும் நம்ப முடியாமல் வீரப்பெருமாள் கோயில் படியில் சத்தியம் செய்யச் சொன்னான்.
அடுத்த சில வருஷங்களில் அவன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போய்விட்டான். நான் ஊர் மாறி வந்து அவனை மறந்து போனேன். 30 வருஷங்களாக அந்த ரகசியம் எனக்குள்ளாகவே குளத்தில் வீசி எறிந்த நாணயம் போலக் கிடந்தது. ஆனால், அந்த ரகசியத் துவாரத்தின் முன் நின்றபோது திடீரென அவன் நினைவு வந்தது. மறு நிமிஷம் அந்த ரகசியம் உயிர் பெற்றுவிட்டது.
பல வருஷமாக அதை ஏன் சுமந்துகொண்டு இருக்கிறேன். இன்று அந்த ரகசியத்துக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பால்ய வயதின் ரகசியங்களை இன்று நினைக்கையில் அர்த்தம் அற்றவையாகத்தானே இருக்கின்றன. என்ன செய்வது அந்த ரகசியத்தை என்ற யோசனைகள் என்னைப் பற்றிக்கொள்ளத் துவங்கின.
அப்போதுதான் புரிந்தது. அவனுடைய ரகசியம் மட்டும் இல்லை. எவர்எவர் ரகசியங்களோ மனதில் புதையுண்டு இருக்கின்றன. ஒரு ரகசியத்தைப் பகிர்ந்துகொள்வதில்தான் நட்பின் ஆழம் இருக்கிறது என்று நம்பிய நாட்கள் அவை. பள்ளி வயதில் இருந்து சுமந்துகொண்டு இருந்த அந்த ரகசியத்தை இனி உனக்கு உலகில் வேலை இல்லை என்று பூமியின் அடியில் சேகரமாகும்படி நழுவவிட்டேன். ஊர் திரும்பும் வரை அந்த நண்பனின் நினைவு ததும்பிக் கொண்டே இருந்தது.
ரகசியம் என்ற சொல் இன்று விளையாட்டாகவே பொருள்கொள்ளப்படுகிறது. ஆனால், அந்தச் சொல் அப்படி இருக்கவில்லை. அது வலிமையானதாக, புரிந்துகொள்ளப்பட முடியாத திகைப்பாக, மர்மமானதாகவே இருந்தது. ஓர் உதட்டில் இருந்து மறு இதயத்துக்குக் கடத்தப்படுவது போல மெல்லிய முணுமுணுப்பில் ரகசியம் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
ரகசியம் ஒரு திரை. அதன் பின்னே இருப்பதை அறிந்துகொள்வதற்கு அனைவருக்குமே ஆசை இருக்கிறது. ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட டைரிகள், கடிதங்கள், நிகழ்ச்சிகள், பணப் பரிமாற்றங்கள், உறவின் கசப்பு உணர்வுகள் என்று ஒவ்வொரு குடும்பமும் ரகசியத்தின் சொந்தச் சரித்திரம் ஒன்றுடன் இருக்கிறது.
வாழ்ந்து கெட்ட குடும்பம் ஒன்றினை எனக்குத் தெரியும். அவர்கள் அடுத்தவரிடம் கடன் கேட்கக் கூச்சப்படுவார்கள். ஆனால், குடும்ப நெருக்கடி அவர்களை மூச்சு முட்டச் செய்தது. அந்த வீட்டின் பெரியவர் ஒரு மஞ்சள் பையில் தனக்குத் தேவையான தொகையை ஒரு காகிதத்தில் எழுதிக்கொண்டு இருட்டியதும் வீதியில் அங்கும் இங்குமாக நடப்பார். யாராவது அறிந்த மனிதர்கள் வந்தால் மிகுந்த தயக்கத்துடன் அந்த மஞ்சள் பையை நீட்டுவார். அவர்கள் அந்தப் பையினுள் கைவிட்டு, அதில் உள்ள காகிதத்தில் குறிக்கப்பட்டதைக் கண்டு உதவி செய்ய விருப்பம் இருந்தால், பணத்தை அதே பையில் போட்டு விடுவார்கள். கடன் வாங்கிய மறு நிமிஷம் வயதானவர் அவசர அவசரமாகத் தன் வீட்டுக்குள் ஓடி கதவைச் சாத்திக்கொண்டு விடுவார். கடன் வாங்குவது ரகசியமாக இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால், அந்த ரகசியம் ஊர் அறியத்தான் நடந்தேறியது.
|