மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 12

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 12

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 12
எஸ்.ராமகிருஷ்ணன்,ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 12
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 12
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 12
உங்கள் வீட்டின் இதயத் துடிப்பு கேட்டதுண்டா?
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 12
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 12

வீடு மாறிப் போவது என்பது வெளிக்காட்டிக் கொள்ள முடியாத ஊமை வலி. அதிலும் சொந்த வீட்டில் குடியிருந்துவிட்டு, பொருளாதாரக் காரணங்களுக்காக வாடகை வீட்டுக்குப் போவது மனமறிந்த வேதனை. அந்தப் பிரிவு துண்டிக்கப்பட்ட பல்லியின் வால் போல நமக்குள்ளாகவே துடித்துக்கொண்டு இருக்கக் கூடியது.

வாடகை வீடோ, சொந்த வீடோ எதுவாயினும் நாம் வசிக்கத் துவங்கியதும் நம் ஆசைகளும் ஏமாற்றங்களும் படிந்த நமது அந்தரங்க வடிவமாகிவிடுகிறது வீடு. வீட்டின் சுவர் களுக்கு மட்டும் பேசத் தெரிந்தால், எவ்வளவு கதைகளைச் சொல்லியிருக்கும் தெரியுமா? சுவர்கள் நம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன என்ற பிரக்ஞை நமக்கு இருப்பது இல்லை. மாறாக, ஒரு போர்வை போல நமது அந்தரங்கத்தை மூடிப் பாதுகாக்கின்றன சுவர்கள். நமது அழுகையை வெளித் தெரியாமல் தன் அகன்ற கைகளால் சுவர்கள் மறைத்துக்கொள்கின்றன. சுவரில் இருந்து உதிரும் காரைகளைப் போலவே நம் இயலாமைகள் வீடெங்கும் உதிர்ந்துகிடக்கின்றன.

வீட்டின் கதவுகள் ஒரே நேரத்தில் வெளியில் இருந்து எதுவும் உள்ளே நுழைந்துவிடாமலும் உள்ளிருந்து ரகசியங்கள் வெளியே போய்விடாமலும் தடுத்துக்கொண்டு இருக்கிறது. வீடு நம் நிர்வாணம் அறிந்த கண்ணாடி.

வீடு மாறிப் போகின்றவர்களின் பேச்சில் எப்போதாவது வசித்த வீடுகள் பீறிடுகின்றன. அந்த வீட்டில் ஒரு கிணறு இருந்தது. அந்த வீட்டின் பின்புறம் நிலா வெளிச்சம் படிக்கட்டில் அடிக்கும். அந்த வீட்டில் மழை பெய்யும்போது கேட்கும் சத்தம் வேறுவிதமாக இருக்கும். அந்த வீட்டின் தரை குளிர்ச்சியானது என்று எதையோ சொல்லி வீட்டின் நினைவுகள் அதிகம் பீறிட்டுவிடாமல் அடக்கிக்கொள்கிறோம்.

சிறுவர்கள், வசித்த வீடுகளை உடனே மறந்து விடுவது இல்லை. அதைக் கடந்து செல்லும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அது நம் வீடுதானே என்று அடையாளம் காட்டுகிறார்கள். அந்த வீட்டினை ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்கிறார்கள். நமக்கும் அப்படிப் பார்க்க வேண்டும் என்று உள்ளூற ஆசை இருக்கக்கூடும். நாம் தயங்கி நிற்கிறோம். பல நேரம் சமூகக் கூச்சங்களுக்காக அதை விலக்கிப் போய்விடுகிறோம்.

ஆனால், நாம் வசித்த வீடுகள் நம் நினைவில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன. அப்படி விருதுநகரில் நான் வசித்த வீடு ஒன்றுக்குச் சமீபத்தில் போயிருந்தேன். என்ன நினைப்பார்கள் என்ற தயக்கம் எனக்கு இல்லை. காலை பதினோரு மணி இருக்கும். முன்னால் உள்ள இரும்புக் கதவைத் தள்ளி நுழையும்போது பத்து வருஷங்கள் பின்னால் போவது போலவே இருந்தது. அது என் வீடு என்ற உரிமை இப்போது இல்லை என்றபோதும், அது எனக்குப் பரிச்சயமான இடம் என்ற உரிமை எனக்கு இருப்பதாகவே உணர்ந்தேன்.

வீட்டின் காலிங்பெல்லை அடிப்பதற்காக நின்றுகொண்டு இருந்தேன். இதே காலிங்பெல்லை எத்தனை இரவுகளில் வந்து அடித்திருக்கிறேன். ஏதேதோ பயணங்களின் முடிவில், யாவரும் உறங்கிய பின்னிரவில் இதே காலிங்பெல் முன்னால் நின்றபடியே கதவை வெறித்துக்கொண்டு இருந்திருக்கிறேன். அன்றும் அந்தக் கதவின் முன்னால் அப்படியேதான் இருந்தேன்.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 12

காலிங்பெல் சத்தம் கேட்டுக் கதவு திறந்த பெண், 'யார் வேணும்' என்று கேட்டாள். நான் இந்த வீட்டில் குடி இருந்தேன் என்பதைச் சொன்னேன். அவள் புரியாமல் அதனால் என்னவென்பது போலப் பார்த்தபடியே, 'சார் வீட்ல இல்லை' என்று சொன்னாள். நான் ஏதாவது கேட்க வேண்டுமே என்பதால், 'எனக்கு வந்த கடிதங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்று பார்த்துப் போக வந்தேன்' என்று பொய் சொன்னேன். தனக்குத் தெரியாது என்று அந்தப் பெண் கதவை மூடிவிட்டாள். கதவைத் திறந்திருந்த ஒன்றிரண்டு நிமிடங்களில், கண் அவசரமாக அந்த வீட்டின் உட்புறத்தை அள்ளி விழுங்கிக்கொண்டது.

எனது மேஜை போடப்பட்டு இருந்த இடத்தில் தையல் மிஷின் உள்ளது. என் குழந்தைகளின் புகைப்படம் தொங் கிய ஆணியில் மஞ்சள் பை காணப்படுகிறது. முன்னாட் களில் எனது உடைகள் காய்ந்துகொண்டு இருந்த வொயர் கொடியில் பச்சை நிறப் புடவை ஒன்று கிடந்தது. அது என் வீடு இல்லை. மாறி இருக்கிறது. மூடிய கதவுக்கு வெளியில் நின்று பெருமூச்சு இட்டபடியே வெளியே வந்தேன்.
கடந்து செல்லும்போது அருகாமை தேநீர் கடைக்காரர் என்னைக் கண்டுகொண்டு உட்காரச் சொல்லி, தேநீர் தந்து உரிமையுடன் பேசிக்கொண்டு இருந்தார். 'நீங்கள் இருந்த வீட்டில் இதோடு இரண்டு மூன்று பேர் மாறிவிட்டார்கள்' என்று விளக்கிக்கொண்டு இருந்தார். வசித்த வீடுகள் நம் நினைவில் மட்டும் இல்லை, அதை அறிந்தவர் நினைவில் இருந்தும் மறையாது என்பது சந்தோஷம் தந்தது. தேநீரின் ஒவ்வொரு துளியையும் ரசித்து அருந்தினேன்.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 12

அந்த நிமிஷம் எனக்குப் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஆலன் பார்க்கர் இயக்கிய ஏஞ்சலாஸ் ஆஷஸ் (Angela's Ashes) என்ற திரைப்படம் நினைவுக்கு வந்தது. ஃபிராங்க் மெகொர்ட் என்ற ஐரிஷ் அமெரிக்க எழுத்தாளரின் நாவலைப் படமாக்கி இருந்தார் ஆலன் பார்க்கர். ஃபிராங்க் மெகொர்ட் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இறந்துபோனார். ஆலன் பார்க்கரின் அற்புதமான படம் அது.

அமெரிக்காவுக்குச் செல்வது பலருக்கும் கனவாக இருக்கும்போது, அயர்லாந்தில் இருந்து அமெரிக்கா சென்ற ஃபிராங்கின் தந்தை அங்கே வறுமையும், நெருக்கடியுமாக வாழ முடியாமல் மறுபடியும் அயர்லாந்துக்கே திரும்புகிறார். புதையல் தேடிப் போவது போல யாவரும் அமெரிக்கா நோக்கிப் போய்க்கொண்டு இருந்தபோது, நீங்கள் மட்டும் ஏன் அயர்லாந்துக்குத் திரும்பி வந்தீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். அது எங்களுடைய ஊர். நான் வீடு திரும்பி இருக்கிறேன் என்கிறார் ஃபிராங்கின் அப்பா. அப்போது ஃபிராங்குக்கு ஐந்து வயது.

படம் இந்தச் சிறுவனின் பார்வையிலே துவங்குகிறது. அப்பா மிதமிஞ்சிய குடிகாரர். பொறுப்பாக வேலை செய்யத் தெரியாதவர். யாவர் மீதும் கோபமாக எரிந்து விழுவார். வறுமையும் சாவும் அவர்கள் வீட்டின் நிரந்தர விருந்தாளியாக இருக்கிறது. வீட்டின் அச்சாணி போல இருப்பது பெண்கள். குறிப்பாக, ஃபிராங்கின் அம்மா.அவள் குடும்பத்தை எப்படியாவது கால் ஊன்றிடச் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டுகிறாள்... போராடுகிறாள். அத்தனை கஷ்டங்களுக்கு நடுவிலும் கணவனுடன் படுத்துச் சுகம் தந்து கர்ப்பிணி ஆகிறாள்.

தாள முடியாத வறுமையின் காரணமாக அவர்கள் வாடகை இல்லாத ஒற்றை அறையில் தங்குகிறார்கள். அங்கு இருக்கும் ஒரே ஒரு கழிப்பறையைத்தான் 16 குடும்பங்கள் பயன்படுத்துகின்றன. போதுமான உணவு இல்லை. குளிர் ஆடைகள் இல்லை. நோயில் பிள்ளைகள் இறந்துபோகிறார்கள். செத்துப் போன பிள்ளையைப் புதைப்பதற்கு அவர்களிடம் காசு இல்லை. அப்பாவோ தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கத்துகிறார். அந்த ஒற்றை அறைதான் அவர்களுக்குப் புகலிடமாக உள்ளது.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 12

ஃபிராங்க் வறுமை தாங்க முடியா மல் தெருவில் கிடக்கும் பழங்களை எடுத்துத் தின்கிறான். அப்போது தெருவில் இருந்த ஒரு சிறுவன் பொறாமையுடன் சொல்கிறான், 'பசியாக இருந்தாலும் உனக்கு அப்பா -அம்மா, சகோதரர்கள் இருக்கிறார்கள். எனக்கு அப்படி யாரும் இல்லை. பசி மட்டுமே என்னுடன் இருக்கிறது. இங்கு உள்ள வீடுகள், சுவர்கள் யாவற்றையும் கடித்துத் தின்றுவிடலாம் போல் இருக்கிறது' என்கிறான். ஃபிராங்க் வளர்ந்து மறுபடியும் அமெரிக்கா வந்து ஆசிரியராகப் பணியாற்றி, பின்பு பல்கலைக்கழகப் பேராசிரியராக மாறுவதுதான் படம்.

இந்தப் படமும் நாவலும் அடைந்த வெற்றி ஃபிராங்க் மெகொர்ட்டை மிகச் சிறந்த எழுத்தா ளர் ஆக்கியது. சிறந்த நாவலுக்கான புலிட்சர் விருது பெற்றார் ஃபிராங்க். அயர்லாந்து மக்கள் அவரைத் தங்களது கடந்த காலத்தின் பிரதிநிதி யாகக் கொண்டாடினார்கள்.

எழுத்தாளர் ஃபிராங்க் மெகொர்ட் பல வருஷத்துக்குப் பிறகு தன்னுடைய முதுமையில், தான் பால்யத்தில் வசித்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு அழுதார். காரணம் கேட்டபோது, 'அந்த வீட்டின் இதயம் துடித்துக்கொண்டு இருப்பதைத் என்னால் கேட்க முடிகிறது' என்று சொன்னார். அது ஃபிராங்கின் வீட்டுக்கு மட்டும் இல்லை... எல்லா வீடுகளுக்கும் பொருந்தக்கூடியதே!

பார்வை வெளிச்சம்!

ழுத்தாளர்கள் கு.அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனும் தமிழ் இலக்கியத்தின் இரண்டு முக்கிய ஆளுமைகள். இருவரும் கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஒன்றாக வளர்ந்த நண்பர்கள். வெயிலேறிய கரிசல் கிராமங்களின் மனிதர்களையும் வாழ்க்கைப்பாடுகளையும் இலக்கியமாக்கிய சாதனையாளர்கள்.

இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் ஒன்றாக எழுதத் துவங்கி எழுத்தாளர்கள் ஆனதும், இருவரும் சாகித்ய அகாடமி பரிசு பெற்றதும் அபூர்வமான நிகழ்வு. அந்தச் சிறப்பு இடைசெவல் கிராமத்துக்கு உள்ளது.

மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பட்டி தாண்டியதும் இடைசெவல் கிராமம் உள்ளது. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான கார்கள் அதைக் கடந்து போகின்றன. அருகாமையில் சிறியதும் பெரியதுமாகப் பல பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆனால், ஒருவர்கூட இந்தக் கிராமத்தின் சிறப்பு பற்றி அறிந்துகொள்ளவே இல்லை.

இடைசெவலில் எழுத்தாளர் கு.அழகிரிசாமி மற்றும் கி.ராஜநாராயணன் வசித்த வீடுகள் உள்ளன. அதை அரசும் பதிப்பாளர்களும் ஆர்வலர்களும் இணைந்து, படைப்பாளிகளைக் கௌரவிக்கும் விதமாக அவர்களைப்பற்றி ஆவணப்படங்களும் புகைப்படங்களும் புத்தகங்களும் இணைந்த காட்சியகம் அல்லது சிறப்பு நூலகமாக உருவாக்கினால் கிராமப்புற இளைஞர்களுக்கு இலக்கியத்தின் மீதான ஈடுபாடும் அக்கறையும், வாசிப்பு ரசனையும் அதிகமாகும்.

அத்துடன் இடைசெவல் நெடுஞ்சாலையில் கு.அழகிரிசாமி மற்றும் கி.ராஜநாராயணன் இலக்கிய சாதனைகள் குறித்த ஒரு செய்திப் பலகையை வைப்பதன் மூலம், அந்த வழியைக் கடந்து செல்லும் பயணிகள் இந்தக் கிராமத்தின் சிறப்பை ஒரு தகவலாக அறிந்துகொள்ள முடியும். இது போன்ற எளிய முயற்சிகள் நம் இலக்கிய வளத்தை எடுத்துக்காட்டும் முதல்படியாக இருக்கக்கூடும்!

 
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 12
-இன்னும் பரவும்
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 12