'ஒரு வரிக்குள் கதை எழுத முடியுமா?' என்று கேட்டு எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. 'நிச்சயம் முடியும். ஆனால், எதற்காக ஒரு வரியில் கதை எழுத நினைக்கிறீர்கள்?' என்று பதில் அனுப்பினேன். உடனே மறுமுனையில் இருந்து, 'எதையும் ஒரு வரிக்குள் சொல்லுங்கள். உலகம் வேகமாகிவிட்டது' என்ற பதில் வந்தது.
நிச்சயம் இந்தக் குறுஞ்செய்தியை அனுப்பியவர் 1980-களுக்குப் பிறகு பிறந்தவர் என்பது அந்தப் பதிலிலேயே தெரிந்தது. இது என்ன கணக்கு என்று கேட்கக்கூடும். என்னிடம் 10 கேள்விகள் இருக்கின்றன. அதற்கு நீங்கள் பதில் சொன்னால், உடனே வயதைச் சொல்லிவிடலாம்.
1.நீங்கள் கையில் கடிகாரம் கட்டுவது இல்லையா? 2.சட்டைப் பையில் பேனா வைத்துக்கொள்ள மாட்டீர் களா? 3. டெய்லரிடம் உடைகள் தைத்துப் போடும் பழக்கம் அற்றவரா? 4. பண அட்டைகளை மட்டுமே பயன்படுத் துபவரா? 5. சினிமா டிக்கெட், ரயில் டிக்கெட் போன்றவற்றை இணையத்தில் மட்டுமே முன்பதிவு செய்பவரா? 6.மொபைல் போனை கண்ணில் பார்த்த மாத்திரம், அது என்ன வகை போன், மாடல் எண் என்று உங்களால் சொல்ல முடியுமா? 7. சினிமா தியேட்டரில் கட்டாயம் பாப்கார்ன் சாப்பிடுவீர்களா? 8. கேர்ள் ஃப்ரெண்ட் அல்லது பாய் ஃப்ரெண்டை வீட்டுக்கு அழைத்து வந்து பேசுவீர்களா? 9. பாக்கெட்டில் கர்ச்சீப், சீப்பு வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லையா? 10. கம்ப்யூட்டர் கேம் அல்லது வீடியோ கேம் விளையாடுவதில் ஈடுபாடுகொண்டவரா?
இந்த 10 கேள்விகளுக்கும் 'ஆம்' என்று சொன்னால், நீங்கள் 1980-களுக்குப் பிறகு பிறந்தவர்கள். 'இல்லை' என்று சொன்னால், அதற்கு முன்பாகப் பிறந்தவர்கள். நான் அறிந்தவரை தமிழ்ச் சமூகம் இந்த இரண்டாகத்தான் பிரிந்து இருக்கிறது. இரண்டும் கலந்த விதிவிலக்குகளும் இருக்கின்றார்கள். இதைத் தாண்டி 1940-களில் இருந்து 1960 வரை பிறந்தவர்கள் இரண்டின் மோதல்களையும் செய்வதுஅறியாமல் அவதானித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நான் ஒழுங்காகக் குறுஞ்செய்திகள்கூட அனுப்பத் தெரியாத முந்திய தலைமுறைக்காரன். என் சகாக்கள் இன் றைக்கும் கையில் கடிகாரம் கட்டுகிறார்கள். (அதுதான் செல்போனில் கடிகாரம் இருக்கிறதே... இது வேறு எதற்கு என்ற கேலி காதில் கேட்கிறது.) பையில் பேனா வைத்து இருக்கிறார்கள். இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யத் தடுமாறுகிறார்கள். செல்போனைச் சுற்றி பிளாஸ்டிக் லேமினேஷன் செய்துகொள்கிறார்கள். முடி வெட்டிக்கொள்ள பியூட்டி பார்லருக்குள் செல்லத் தயக்கமும் கூச்சமும்கொள்கிறார்கள். அடிக்கடி கோயிலுக்குப் போகிறார்கள். காலையில் எழுந்தவுடன் நியூஸ் பேப்பர் படிக்கிறார்கள். விமானம் தலைக்கு மேலாகப் போவதை வியப்போடு நிமிர்ந்து பார்க்கிறார்கள்.
வாழ்க்கையிடம் இருந்து எதைக் கற்றுக்கொண்டு இருக்கிறோம். எதைக் கைவிட்டு இருக்கிறோம், கடந்து வந்திருக்கிறோம் என்பதுதான் ஒவ்வொரு தலைமுறையின் பிரச்னையும். இதைப் பற்றியதுதான் 'what is it?' என்ற குறும்படம். ஐந்தே நிமிடங்கள் ஓடும் படம். கிரேக்க தேசத்தைச் சேர்ந்த கான்ஸ்டாடின் பிலாவியோஸ் என்பவர் இயக்கி இருக்கிறார். உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்குப் பிறந்த நாள் பரிசாக |