முதலில், ஒரு நகரின் மீது விமானம் சுற்றிக்கொண்டே இருந்தது வேடிக்கையாகத் தோன்றியது. ஆனால், அடுத்த அரை மணி நேரத்தில் அதுவே அலுப்பூட்டத் துவங்கியது. ஒருவேளை, விமானம் தரை இறங்கத் தாமதம் ஆகும் என்று தெரிந்தால், வேறு ஏதாவது ஒரு விமான நிலையத்தில் இறக்கிவிடுவார்கள் என்று பயணிகள் பேசத் துவங்கினார்கள். ஆகாயத்தில் வெளிச்சம் ஒடுங்கியிருந்தது.
ஒரு மணி நேரம் டெல்லி நகரின் மீதே சுற்றி இருப்போம். முடிவில் ஆகாயத்தில் ஒரு துளை விழுந்தது போல சூரிய வெளிச்சம் தென்படத் துவங்கி, மெள்ள பனிப் புகை கலையத் துவங்கியது. கண்ணில் காட்சிகள் விழ ஆரம்பித்தன. பழைமையான டெல்லி நகரம் புகையும் பனியோடு பார்க்க அத்தனை அழகாக இருந்தது. விமானம் தரை இறங்கியபோது, காசிக்குச் செல்லும் விமானம் கிளம்பிப் போயிருந்தது.
''அதே விமான சேவை இரவு 10 மணிக்கு இருக்கிறது. அதுவரை காத்திருங்கள்!'' என்றார்கள். வேறு வழி இல்லை என்பதால், கையில் இருந்த புத்தகத்தை விரித்தபடியே ஓர் இருக்கை தேடி உட்கார்ந்தேன். அன்றுதான் விமான நிலையத்தை முழுமையாக அறிய நேர்ந்தது.
ஒவ்வொரு விமான நிலையமும் ஒரு தனி உலகம். அது எப்போதுமே பயம் கலந்த வசீகரமாக இருக்கிறது. காவலர்களின் முகங்கள் நம்மை உற்று நோக்குகின்றனவோ என்ற அச்சம் அடிமனதில் எழுகிறது. வந்து போகும் மனிதர்கள், ஏதேதோ நாடுகளில் இருந்து வந்து இறங்கும் பயணிகளின் முகங்கள், பரபரப்பான விமான நிலைய ஊழியர்கள், அவர்களின் அழகான சீருடைகள், வண்ணத்துப்பூச்சிகள் போலத் தாவிச் செல்லும் விமான நிறுவன யுவதிகள், அடுத்த விமானத்துக்காகக் காத்திருப்பவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், சுற்றுலாப் பயணிகள் என்று கலவையான உலகம். விமான நிலையங்கள் உலகெங்கும் ஒன்று போலவே இருக்கின்றன. அதன் நெருக்கடியும், நிமிடத்தில் மாறிவிடும் அதன் இயல்பும் புரிந்துகொள்ளப்பட முடியாதது.
ஒருநாள் முழுவதும் விமான நிலையத்தில் காத்துக்கிடந்தபோது ஸ்பீல்பெர்க் இயக்கிய 'தி டெர்மினல்' படம் நினைவில் வந்தபடியே இருந்தது. விமான நிலையத்தில் மாட்டிக்கொண்ட விக்டர் என்பவரைப் பற்றிய படம். டாம் ஹாங்ஸ் நடித்திருப்பார். மெக்ரம் ஹரிமி நாசர் என்ற இரானியருக்கு உண்மையாக நடந்த சம்பவமே இந்தப் படத்தின் ஆதாரக் கதை. நியூயார்க் விமான நிலையத்தில் செல்லுபடியாகாத ஒரு பாஸ்போர்ட்டுடன் மாட்டிக்கொண்டு வெளியேறிச் செல்ல முடியாமல், மொழி தெரியாமல் மாட்டிக்கொண்ட ஒரு மனிதனின் தவிப்பே இந்தப் படம்.
இரண்டு காரணங்களால் இந்தப் படம் மிக அற்புதமானது. ஒன்று, பெரு நகரங்களில் விமான நிலையத்தில் மாட்டிக்கொள்ளும் மனிதனின் அவஸ்தைகள் நிஜமாகப் படமாக்கப்பட்டு இருக்கின்றன என்பது. இரண்டாவது, இவ்வளவு சிரமப்பட்டு அந்த மனிதன் எதற்காக அமெரிக்கா வந்திருக்கிறான் என்ற காரணம். ஜாஸ் இசையின் |