இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டேன். கலந்துரையாடல் நிகழ்வின்போது ஒரு மாணவி, 'எது உலகில் அதிகம் புரிந்துகொள்ளப்படாமல் போகிறது?' என்ற கேள்வியைக் கேட்டாள். எளிமையான கேள்வி. ஆனால், அதற்கான பதில் எளிதானது இல்லை. 'நிகழ்வின் முடிவில் சொல்கிறேன்' என்றபடியே, 'எது உலகில் அதிகம் புரிந்துகொள்ளப்படாமலே போகிறது?' என்று எனக்குள்ளாகவே தேடிக்கொண்டு இருந்தேன். வேறு கேள்விகள்... வேறு பதில்கள் என்று உரையாடல் தொடர்ந்தபோதும் மனதில் அந்தக் கேள்வி ஆழமாகத் துளையிட்டுக்கொண்டே இருந்தது. சட்டென அதற் கான பதில் மனதில் தோன்றி மறைந்தது.
'உலகில் அதிகம் புரிந்துகொள்ளப்படாமலே போவது, திருமணமாகி 10 வருடங்களான பிறகுபெண் ணுக்குள் உருவாகும் தனிமையும் வெறுமையுமே!' என்றேன். யாரோ ஓர் ஆசிரியை வெகு அவசரமாகக் கைதட்டிப் பாராட்டினார். கணவன், குழந்தைகள், வீடு என்றிருந்தபோதும் தான் எதையோ இழந்து விட்டதைப் போலவும், தான் நினைத்தது போல வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமானது இல்லை என்றும் பெண்கள் உணரும் தருணம் உருவாகிறது.
அப்போது குழந்தைகளைக் கவனிப்பது, சமைப்பது, கணவனோடு படுக்கையைப் பகிர்வது உள்ளிட்ட யாவும் அனிச்சைச் செயல்களாகிவிடுகின்றன. மனது எதற்கோ ஏங்கத் துவங்குகிறது. அன்றாட வாழ்வு அபத்தமானதாகவும், அர்த்தமற்ற செயல் ஒன்றினைத் தொடர்ந்து செய்துவருவதைப் போலவும் உணரத் துவங்குகிறது. இதைப்பற்றி யாரிடமும் பேசிக்கொள்வதும் இல்லை. தன்னை மீறி அந்த மன அவஸ்தைகளை வெளிப்படுத்தும்போதுகூட அது தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டுவிடுகிறது.
காற்று போய்விட்ட பலூன் சுருங்கிக்கிடப்பது போல மனது வாடிக்கிடக்கிறது. எதிலும் விருப்பம் இல்லை. அந்த நாட்களும் தனிமையும் விசித்திரமானவை. பிள்ளைகளோ, கணவனோ அதைக் கவனம்கொள்வதும் இல்லை. புரிந்துகொள்வதும் இல்லை. நீர்க்குமிழிகளைப் போல சின்னஞ்சிறு ஆசைகள் மனதில் கொப்பளிப்பதும் உடைவதுமாக இருக்கக்கூடிய நாட்கள் அவை.
உண்மையில், திருமணம் தரும் கிளர்ச்சிகளும் கனவுகளும் எளிதில் வடிந்துவிடக்கூடியவை. அதன் பிறகு நீளும் நடைமுறை வாழ்க்கையை உரசல் இல்லாமல் கொண்டுபோவதற்கு சகிப்புத்தன்மையும், விட்டுக்கொடுத்தலும், வழியின்றி ஏற்றுக்கொள்ளுதலுமே சாத்தியங்களாக உள்ளன. இதில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை.
எனக்குத் தெரிந்த நண்பரின் வீட்டில், அவரது மனைவி ஒருநாள் இரவு, தான் கன்னியாகுமரி போய் வருவதாக ஒரு தாளில் எழுதிவைத்துவிட்டு, தனியே புறப்பட்டுப் போய்விட்டாள். யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. திருமணமாகி 15 வருடங்களில் அவள் தனியே எங்கும் போனது இல்லை. அவளது அம்மா வீட்டுக்குப் போவதாக இருந்தால்கூட நண்பர் கூட்டிக்கொண்டு போய்வருவார். ஆனால், திடீரென எந்தக் காரணமும் இல்லாமல் ஒரு துண்டுச் சீட்டை எழுதிவைத்துவிட்டு கன்னியா குமரி புறப்பட்டுப் போய்விட் டாள்.
|