அதிகாரி இவானிடம் தன்னை அலுவலகத்துக்கு அழைத்துப் போகும்படி கட்டளை இட்டார். இவான் அவரை கூட்டிக்கொண்டு நடந்தான். அந்தத் தீவில் கட்டடங்களோ, அலுவலகமோ, வீடுகளோ வேறு மனிதர்களோ எவரும் இல்லை என்பதை சில மணி நேரத்தில் அறிந்துகொண்டார்கள். அடுத்த கப்பல் வரும் வரை திரும்பவும் முடியாது.
அலுவலகம் இல்லாதபோதும் தான் அதிகாரியே. ஆகவே, தன் உத்தரவுகளைச் செயல்படுத்த வேண்டியது அவனது பொறுப்பு என்று இவானிடம் கத்தினார். இவான் அப்படியே நடந்துகொள்வதாகச் சொன்னான். கடந்த 10 ஆண்டு கால வரிச் செலவுக் கணக்குகள் கொண்டுவந்து காட்டப்பட வேண்டும் என்று உத்தரவிடுவார். இவான் இல்லாத கணக்கு வழக்குகளுக்கு எங்கே போவான். ஆகவே, அவன் ஒரு கணக்குப் புத்தகத்தை சுமந்து வருவது போல பாவனை செய்வான். அவரும் கையெழுத்து இடுவது போல பாவனை செய்வார். அந்த கணக்கு நோட்டை அடுத்த அலுவலகம் அனுப்பிவைத்துவிட்டு வருவதாக இவான் வெளியே செல்வான்.
இந்த நாடகம் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அதிகாரி தங்குவதற்கு உரிய இடம் இல்லை. சாப்பிட உணவும் இல்லை. காற்றும் குளிரும் அதிகமாக இருந்தது. அத்தனை சிரமங்களுக்கும் இடையில் அதிகாரி தனது அடுக்கடுக்கான உத்தரவுகளைச் சொல்லிக்கொண்டே இருந்தார். இவானுக்கு முதல்முறையாக, 'இது என்ன பைத்தியக்காரத்தனம்? ஏன் இந்த மனிதன் இப்படி நடந்துகொள்கிறான்?' என்று எரிச்சலாக வந்தது.
ஒருநாள் இந்த அபத்தம் தாங்க முடியாமல்... இவான், ''நம் இருவருக்கும் அரசாங்கம் தண்டனை அளித்துத்தான் இங்கே அனுப்பி இருக்கிறது. இதில் நீங்கள் அதிகாரியும் இல்லை. நான் கடைநிலை ஊழியனும் இல்லை'' என்று கோபப்பட்டுக் கத்தினான். அதிகாரி அதை ஏற்க மறுத்து, ''நான் ஓய்வு பெற்றாலும்கூட ஓய்வு பெற்ற அதிகாரி என்றுதான் அழைப்பார்கள். தண்டனை உனக்கு மட்டும்தான். நீ என்னை இவ்வளவு எடுத்தெறிந்து பேசியதால், உன்னைத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்கிறேன்'' என்று உத்தரவிட்டார். இவான் பயந்து அவர் கால்களைப் பிடித்து மன்னித்துவிடும்படியாகக் கெஞ்சினான்.
இரண்டு வாரங்கள் இந்த அபத்த நாடகம் நடந்தது. பசி, குளிர், உறக்கமின்மை இருவரையும் ஒடுக்கி இருந்தது. அடுத்த கப்பல் எப்போது வரும் என்று காத்திருந்தார்கள். முதன்முறையாக அதிகாரி தான் ஏன் எந்த நேரமும் அதிகாரியாக நடந்துகொண்டோம் என்று குற்ற உணர்ச்சிகொண்டார். கடைநிலை ஊழியனும் தான் கடைநிலையில் இருப்பது வேலையில் மட்டும்தானே... எதற்காக சுயமரியாதையை அடகுவைத்து அதிகாரி காலை நக்கிக் கொண்டு இருந்தோம் என்று உணர ஆரம்பித்தான். இருவரும் அதைப்பற்றி பேசிக்கொள்ளவே இல்லை. அடுத்த கப்பல் வந்தபோது, இருவரும் மயங்கிக் கிடந்தார்கள். கப்பல் இருவரையும் ஏற்றிக்கொண்டு வீடு புறப்பட்டது.
கடலின் நடுவே கண் விழித்துப் பார்த்த அதிகாரி, அவசர அவசரமாக உத்தரவிடத் துவங்கினார். கப்பல் மாலுமி சலிப்போடு சொன்னான்... ''அதிகாரிகளை கடவுளாலும் திருத்த முடியாது. எனவே, அந்த ஆளைக் கடலில் தூக்கிப் போட்டுவிடுங்கள்'' என்று. உடனே அதிகாரி சொன்னார், ''அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. முதலில் என் கடைநிலை ஊழியனைத் தூக்கி கடலில் எறியும்படி உத்தரவிடுகிறேன்'' என்றார். அவர்கள் இரண்டு பேரையும் கடலில் தூக்கி எறிந்துவிட்டு கப்பல் திரும்பிக்கொண்டு இருந்தது. முழ்கிக்கொண்டு இருக்கும்போதும் அதிகாரி ஏதோ உத்தரவிடும் சத்தம் கேட்டது. கீழ்ப் படிய யாருமே இல்லை என்று கதை முடிகிறது.
சில நாட்களுக்கு முன்பு குற்றாலம் சென்று இருந்தேன். அருவியில் குளிப்பதற்கு கடுமையான நெருக்கடி. அரசு உயர் அதிகாரி ஒருவரும் குளிப்பதற்கு வந்திருந்தார். அவருக்குத் துணையாக நான்கு அலுவலக ஆட்கள். அவர் வருவதற்கு முன்பாகவே காவலர்கள் குளித்துக்கொண்டு இருந்தவர்களை, ''தள்ளு... தள்ளு'' என்று விலக்கிவிட்டார்கள். எண்ணெய் தடவப்பட்ட பெரிய தொப்பையுடன் பவ்யமாக நடந்து முன்னால் வந்த அதிகாரி தன் வீட்டு ஷவரில் குளிப்பது போல ஆனந்தமாகக் குளித்தார். ஒரே பிரச்னை... அருவியை அவர் விருப்பப்படி அதிகமாக்குவதோ, குறைப்பதோ முடியாது என்பது மட்டுமே. காத்திருந்தவர்களின் முணுமுணுப்புக் குரல்கள் அருவி சத்தத்தில் ஒடுங்கிப்போய் இருந்தன.
கோயிலில், ரயில் பயணத்தில், விமான நிலையத்தில் இது போன்று அதிகாரிகளுக்காகக் காத்திருக்கும் ஊழியர்களையும் அவர்களது பவ்யத்தையும் காணும்போது ஆதங்கமாக இருக்கும். மதுரை கோயிலில் யாரோ ஓர் அதிகாரி சாமி கும்பிட்டுவிட்டு இன்னொரு வாசல் வழியாக வெளியேறி ஜீப்பை நோக்கி நடக்கத் துவங்கினார். அவரது செருப்பைத் தூக்கிக்கொண்டு ஊழியர் ஒருவர் அவசரமாக ஓடுவதைக் கண்டேன். வெள்ளைகாரர்கள் காலத்தில் இது போல நடந்தது என்று படித்து இருக்கிறேன். ஆனால், வெள்ளைக்காரன் போன பிறகும் அதிகாரம் அடிமை நிலை மாறவே இல்லை போலும். அதிகாரிக்கு இவ்வளவு பவ்யம் காட்டும் ஊழியர்கள் இது போன்ற சேவையை தன் அப்பா, அம்மாவுக்கோ, மனைவி, பிள்ளைகளுக்கோ செய்வார்களா?
அதிகாரம் என்பது தன் கையில் கொடுக்கப்பட்ட பொறுப்பு என்பதைப் பலர் உணராமல் இருக்கிறார்கள். ஆனால், எல்லா அதிகாரிகளும் இப்படி நடந்துகொள்வது இல்லை. ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை ரயிலில் சந்தித்தேன். ''ஏன் நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்தானே?'' என்றபோது அவர், ''சொந்த வேலையாகச் செல்கிறேன். எதற்கு விமானப் பயணம்?'' என்று சிரித்தபடியே... தான் வடஇந்தியாவில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவன் என்றும், தனது அப்பா இன்றைக்கும் சைக்கிளில்தான் பயணம் செய்கிறார் என்றார். அவருடைய சகோதரிகள் இன்னமும் விவசாயம் செய்கிறார்கள். அந்த நினைவு எப்போதும் அடிமனதில் இருக்கிறது என்றார்.
|