கிண்டி அருகில் சாலையோரம் பொம்மைகள் விற்பனைக்காக அடுக்கிவைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்தேன். அந்தக் கடையில் ஏதாவது மண் பொம்மை இருக்குமோ என்று தேடிப் பார்த்தேன். ஒன்றைக்கூடக் காணவில்லை. வட இந்தியக் குடும்பம் அது. செயற்கைக் களிமண்ணால் அச்சில் வார்க்கப்பட்ட பொம்மைகள். யாவும் ஒன்று போலவே இருந்தன. எதிலும் உயிரோட்டம் இல்லை.
இன்று மண் பொம்மைகள் அலங்காரப் பொருட்களாக மட்டுமே ஆகிவிட்டிருக்கின்றன. குளிர்சாதனமிட்ட நட்சத்திர விடுதிகளின் உணவறைகளில் மண் குதிரைகள் மௌனமாக நிற்பதைக் கண்டிருக்கிறேன். எந்தக் குழந்தையின் கைவிரல்களும் அதில் படுவதில்லை. ஒரு பொம்மையாக இருந்துகொண்டு குழந்தையின் கைவிரல் படாமல் போவது துரதிருஷ்டமே. நகரங்களில் காட்சிக்காவது பொம்மைகள் வைக்கப்படுகின்றன. கிராமங்களில் அதுவும் இல்லை. தானியங்கி விளையாட்டுக் கார்கள், பந்து, பிளாஸ்டிக் பொம்மைகள் தவிர, கடந்த 10 வருடங்களில் நான் எவரது வீட்டிலும் ஒரு மரப் பொம்மையோ, மண் பொம்மையோ காணவே இல்லை.
பொம்மை விற்கிற ஆள் தெருவில் வரும் நாளுக்காகச் சிறுவயதில் காத்துக்கிடந்திருக்கிறேன். அலாதியான குரலில் 'பொம்மே... தலையாட்டிப் பொம்மே' என்று பாடியபடியே வருவான். வயதை மறந்து சிறுவர்கள், பெண்கள் யாவரும் அவனை நோக்கி உற்சாகமாக ஓடுவார்கள். பெரிய மூங்கில் கூடை ஒன்றில் கிருஷ்ணன் பொம்மை, உண்டியல், புத்தர், மான், குதிரை என்று விதவிதமான பொம்மைகள் வைத்திருப்பான். அதன் வண்ணங்கள் அற்புதமானவை. அந்தப் பொம்மைகள் நம்மைப் பார்த்துச் சிரிக்கக்கூடியவை.
வாங்கிய பொம்மைகளை எங்கே பாதுகாப்பாக வைப்பது என்பதற்குச் சண்டை வரும். இந்தச் சண்டையில் எவரது பொம்மையாவது உடைந்து சிதறும். சிதறிய பொம்மைகளுக்காக அழும் சிறுவர்களின் துக்கம் உண்மையானது. அந்த அழுகை எளிதில் சமாதானம்கொள்ள முடியாதது. இனி, ஒட்டவே முடியாத அந்தப் பொம்மையின் இழப்பை எப்படி ஈடுசெய்வது என்று சிறுவனுக்குப் புரிவதே இல்லை.
உடைந்த மறு நிமிடம் பொம்மை அந்நியமாகிவிடுகிறது. அதுவரை கையில் வைத்துக் கொஞ்சிய பொம்மையை அள்ளிக் குப்பையில் போடுகிறார்கள். பொம்மையின் கண்கள் அதன் விதியை நினைத்து மௌனமாக நம்மை வெறிக்கின்றன.
|