பள்ளியில் எப்போதும் கேட்கப்படும் ஒரு கேள்வி, வளர்ந்து பெரியவன் ஆனதும் நீ என்னவாகப் போகிறாய் என்பது. டாக்டராக, இன்ஜினீயராக, கலெக்டராக என்று ஒவ்வொருவரும் அதற்கு ஒரு பதில் சொல்லி இருப்போம். ஆனால், எத்தனை பேர் அன்று சொன்ன பதிலை அப்படியே வாழ்வில் ஜெயித்துக் காட்டி இருக்கிறார்கள்.
விளையாட்டு வீரனாக வேண்டும், இசைக் கலைஞராக வேண்டும், ஓவியராக வேண்டும், பாடகியாக வேண்டும், உலகம் முழுவதும் சுற்றிவந்து சாதனை புரிய வேண்டும், என்று பள்ளி வயதில் கண்ட கனவுகளில் எத்தனையை நாம் நிறைவேற்றி இருக்கிறோம். ஏன் மறந்துபோனோம்?
'ஒரு மனிதனின் மிகப் பெரிய சாதனையாக எதைக் கருதுவது? எதைத் தனது குழந்தைப் பருவத்தின் கனவுகளாக, ரகசிய ஆசையாகத் தனக்குள்ளாக வளர்த்து வந்தானோ, அதை அவன் அடைந்து காட்டுவது' என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற கணிப்பொறித் துறைப் பேராசிரியர் ரான்டி பாஷ் தனது சிறப்புச்சொற் பொழிவில் குறிப்பிடுகிறார். அது 100 சதவிகிதம் உண்மை!
அமெரிக்காவின் பிட்ஸ்பெர்க்கில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் ரான்டி பாஷ் பேராசிரியராகப் பணியாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னைச் சாவு நெருங்கிக்கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்த ரான்டி, அதை ஏற்றுக்கொண்டு மீதம் இருக்கும் நாட்களை மகிழ்ச்சியாகச் செலவிடுவது என்று முடிவு செய்து, தனக்கு விருப்பமானபடி வாழ்ந்து 2008-ல் இறந்தார்.
புற்றுநோய் முற்றிய நிலையில், அவர் தனது பல்கலைக்கழகத்தில் கடைசி உரை என்ற பெயரில் சிறப்புச் சொற்பொழிவு ஒன்றினை நிகழ்த்தினார். கடந்த 10ஆண்டு களில் நான் கேட்ட மிகச் சிறந்த உரை அது. Randy Pausch Last Lecture என்ற அவரது சொற்பொழிவு முழுமையாக யூ டியூப்பில் இருக்கிறது. அதன் உரைவடிவ மும் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.
நமது சிறு வயது கனவுகள் எவை என்ற பட்டியல் நினைவில் இருக்கிறதா? ரான்டி தன் பால்ய வயதின் கனவுகளாக புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் பறப்பது. புட்ஃபால் சேம்பியன் ஆவது, கின்னஸ் ரிக்கார்டு புக்கில் இடம்பிடிப்பது, வால்ட் டிஸ்னியோடு பணியாற்றுவது என்ற கனவுகளின் நீண்ட பட்டியலை வைத்திருந்தார். அதில் எதை அடைந்தார். எப்படி அடைந்தார். எதைத் தவறவிட்டார் என்பதையே தனது உரையின் முக்கிய அம்சமாகக் குறிப்பிடுகிறார். அந்த உரையில் என்னைக் கவர்ந்த விஷயம் வாழ்வின் அடிப்படைகள் பற்றி அவர் சொல்லிய கருத்துக்கள்.
கால்பந்து விளையாடுவதற்காக அவர் தேர்வானபோது அவரது பயிற்சியாளர், 'இந்த விளையாட்டில் ஒரு பக்கம் எத்தனை பேர் இருப்பார்கள்?' என்று கேட்கிறார். உடனே ரான்டி, 'ஒரு பக்கம் 11 பேர், இரண்டு பக்கமும் சேர்ந்து 22 பேர் விளையாடுகிறார்கள்' என்றார். ஆனால், பந்து ஒரு நேரத்தில் எத்தனை பேரிடம் இருக்கிறது என்று பதில் கேள்வி கேட்டார் பயிற்சியாளர். 'ஒரு நேரத்தில் ஒரு ஆளிடம் மட்டுமே பந்து இருக்கிறது' என்று ரான்டி சொன்னதும், 'அதுதான் அடிப்படை. எத்தனை பேர் விளையாடினாலும் பந்து ஒரு நேரத்தில் ஒரு ஆளின் |