மறுநாள் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்க அவனைத் தேடி வருகிறான் ஜெர்மானியச் சிறுவன். யூதச் சிறுவன் கோபம்கொள்ளவில்லை. மாறாக, பிடிபட்டு அகதியாக உள்ளவன் அவமானங்களைத் தாங்கிக்கொள்ளப் பழகியிருக்கிறான் என்று மன்னிக்கிறான். இரண்டு சிறுவர்களுக்குள்ளும் நட்பு உருவாகிறது.
அதன் பிறகு, தன் வீட்டில் இருந்து ரகசியமாக ரொட்டி, கேக் எனத் திருடி வந்து, யூதச் சிறுவனுக்குத் தருகிறான். ஒரே வயது, ஒரே விருப்பம், விளையாட்டுத்தனம்கொண்ட இரண்டு சிறுவர்களில் ஒருவன் அகதியாகவும் மற்றவன் அதிகார வாரிசாகவும் இருப்பதும் எவ்வளவு முரண்பாடு. அகதிச் சிறுவன் அவமானத்தில் குறுகிப்போய் ஒடுங்கி மெலிந்திருப்பது அதிர்ச்சிகொள்ளவைக்கிறது.
இதற்கிடையில், யூத முகாமில் இருப்பவர்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்படுவதும், இறந்த உடலை மொத்தமாக எரிப்பதுமாக அழித் தொழிப்பு வேகமாக நடைபெறுகிறது. இந்த உண்மை அறிந்த ஜெர்மானிய அதிகாரியின் மனைவி அதிர்ச்சியடைகிறாள். கணவனோடு சண்டையிடுகிறாள். கணவன், 'ஹிட்லரின் கட்டளையை நாங்கள் மீற முடியாது. இது ஒரு தேசச் சேவை' என்கிறான். மனைவி, 'இந்தக் கொடுமையைக் காண என்னால் முடியாது' என்று பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஊருக்குக் கிளம்ப முடிவு செய்கிறாள்.
ஊருக்குப் புறப்படும் முதல் நாளில் யூதச் சிறுவன் தன் அப்பாவை முகாமில் காணவில்லை என்று சொல்லிக் கவலைப்படுகிறான். அவரைத் தேட தானும் அந்த முகாமில் வருவதாகச் சொல்கிறான் ஜெர்மானியச் சிறுவன். அதன்படி அவனுக்காக அகதி உடை ஒன்றைத் திருடி வந்து தருகிறான் யூதச் சிறுவன்.
இரண்டு சிறுவர்களும் முகாமுக்குள் போகிறார் கள். மனித அவலங்களைக் காண்கிறார்கள். ஹிட்லரின் அவசர ஆணைப்படி முகாமில் இருப்பவர்கள் மொத்தமாகக் கொல்ல அழைத்துப் போகப்படுகிறார்கள். அதில் இரண்டு சிறுவர்களும் மாட்டிக்கொள்கிறார்கள்.
|