''அம்மா! கேட்ல இருக்கிற செக்யூரிட்டி பேசினாங்க. உங்களைப் பார்த்துப் பேசறதுக்காக பெரியவர் மல்லய்யா வந்து இருக்காராம். உள்ளே அனுப்பவான்னு கேட்டாங்க.''
மின்மினி சற்றே பதற்றமானாள். ''இதுக்கு என்கிட்டே கேட்கணுமா? அவர் எப்ப என்னைத் தேடி வந்தாலும், உடனடியாக உள்ளே அனுப்பிவைக்கணும்னு செக்யூரிட்டிகிட்டே ஏற்கெனவே சொல்லியிருந்தேனே!''
''இதோ அனுப்பச் சொல்றேம்மா!'' வேலைக்காரி படிகளில் இறங்கி ஓட, மின்மினி செல்போனுக்கு உதட்டைக் கொடுத்து, ''ஸாரி மாலு... எனக்குப் பாட்டு சொல்லிக்கொடுத்த குருநாதர் கீழே வந்து வெயிட் பண்ணிட்டு இருக்காராம். சாயந்திரம் நாம பார்ப்போம்!''
''யாரு... அந்த பெல்லாரி மல்லய்யாவா?''
''பரவாயில்லையே! அவரோட பேரை அட்சரசுத்தமாக ஞாபகம் வெச்சிருக்கியே!''
எதிர்முனையில் அந்த மாலு சிரித்தாள்... ''தெலுங்கு சினிமா பட டைட்டில் மாதிரி இருக்கிற அவரோட பேரை அவ்வளவு சுலபத்துல மறந்துட முடியுமா என்ன?''
''ஏய்! பெரியவங்களைக் கிண்டல் பண்ணாதே! பெல்லாரியில் நான் அப்பா-அம்மாவை இழந்துட்டு அநாதையா நின்னப்ப, அவர்தான் எனக்கு ஆதரவாக இருந்து மஹிளா சமிதி விடுதியில் இடம் வாங்கிக் கொடுத்து...''
''ஸாரி மின்மினி! இந்த பெல்லாரி ஃப்ளாஷ்பேக் ரீல் ரொம்பவும் பழசாயிடுச்சு. புதுசா வேற ஒரு பிரின்ட் போட்டுக்கோயேன்.''
''சாயந்திரம் வா சொல்றேன்... உன்னை...'' - மின்மினி பற்களைக் கடித்து, செல்போனை அணைத்தாள். படிகளில் வேகவேகமாக இறங்கி ஹாலுக்கு வந்தபோது, மல்லய்யா வாசற்படிகள் ஏறி உள்ளே வந்துகொண்டு இருந்தார்.
மல்லய்யாவுக்கு 60 வயது இருக்கலாம். சராசரி உயரத்தில், சற்றே கனத்த உடம்பு. ரோமம் இல்லாத முன் மண்டையை மூன்று விபூதிக் கோடுகளும், ஒரு குங்குமப் பொட்டும் குத்தகைக்கு எடுத்திருக்க... பின்னந்தலையில் இருந்த நீளமான முடிகள் ஒரு குடுமியாக மாறியிருந்தன. ஆந்திரா பாணியில் கட்டப்பட்ட வேட்டியும், மார்பைச் சுற்றியிருந்த வெள்ளை வஸ்திரமும் அவரை மதிப்போடு பார்க்கவைத்தது.
மின்மினி ஒட்டமும் நடையுமாகப் போய் அவருடைய பாதங்களில் விழுந்தாள். அவர் மின்மினியின் தலையில் தன் வலது கையைவைத்தார். ''நீ என்னிக்கும் நல்லாயிருக்கணும்... எழுந்திரும்மா!''
மின்மினி எழுந்தாள். கும்பிட்ட கையோடு சொன்னாள், ''ஐயா! மன்னிக்கணும்...''
''எதுக்கு?''
''கேட்ல இருந்த சென்ட்ரி கான்ஸ்டபிள் உங்களை உடனே உள்ளே அனுப்பாம வாசல்ல நிக்க வெச்சதுக்காக.''
மல்லய்யா தன் கறை இல்லாத பற்களைக் காட்டிச் சிரித்தார். ''அட, என்னம்மா நீ... இதுக்கெல்லாம் போய் மன்னிப்புக் கேட்டுக்கிட்டு? நீ யாரு... ஒரு கலெக்டரோட மனைவி. யார் வேணும்னாலும் சர்வசாதாரணமா வந்து போறதுக்கு இது என்ன சத்திரமா? நான் இந்த வீட்டுக்கு வேண்டியவன்னு தெரிஞ்சிருந்தும் பாம் டிடெக்டர் வெச்சு சோதனை போட்டுத்தான் அனுப்பினாங்க. யார் யாருக்கு என்னென்ன கடமைகள் இருக்கோ, அதை அவங்க பண்ணியாகணும்!'' - மல்லய்யா சொல்லிக்கொண்டே போய், ஹாலில் போட்டிருந்த சோபாவில் சாய்ந்தார். மின்மினியும் எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.
''ஐயா! திடீர்னு கோயம்புத்தூருக்கு வந்து இருக்கீங்க. ஏதாவது விசேஷமா?''
''விசேஷம்தாம்மா! இங்கே வடவள்ளிக்குப் பக்கத்துல க்யூரியோ கார்டன் அவென்யூன்னு ஒரு காலனி இருக்கு. அந்தக் காலனியில் அம்சமான விநாயகர் கோயில் ஒண்ணு இருக்கு. ஆபத்சகாய சுந்தர விநாயகர்னு பேர். சக்தி வாய்ந்த விநாயகர். அந்தக் கோயிலோட கும்பாபிஷேகம் நாளைக்கு. அதுல கலந்துக்கச் சொல்லி எனக்கு அழைப்பு வந்தது. உடனே புறப்பட்டு வந்துட்டேன்.''
''ரொம்பச் சந்தோஷம். ஐயா, இன்னிக்குச் சாயந்திரம் நீங்க ஃப்ரீயா?''
''ஏம்மா கேட்கிறே?''
''ஐயா! இன்னிக்குச் சாயந்திரம் ஆர்.எஸ்.புரம் புரந்தரதாஸர் ஹால்ல என்னோட கச்சேரி. நீங்க அவசியம் முன் வரிசையில் உட்கார்ந்து கேக்கணும்.''
''பஞ்சாமிர்தம் சாப்பிடக் கூலியா?'' - சொல்லிச் சிரித்தவர் கேட்டார்... ''உன்னோட கணவர் எப்படி இருக்கார்மா? கல்யாணத்துல பார்த்தது. அதுக்கப்புறம் இந்த வீட்டுக்கு ரெண்டு தடவை வந்தும் அவரைப் பார்க்கவே முடியலை.''
''இன்னிக்கு அவரை நீங்க பார்த்துடலாங்கய்யா! மத்தியானம் லஞ்சுக்குக் கண்டிப்பா வர்றதாகச் சொல்லியிருக்கார். நாம எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம். அவரும் உங்களைப் பார்க்கணும்னு சொல்லிட்டு இருப்பார். 'எனக்கு ஒரு வானம்பாடியைப் பரிசாகக் கொடுத்த வள்ளல் அவர்'னு புகழ்ந்துட்டே இருப்பார். நீங்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சா, அவர் ரொம்பவும் சந்தோஷப்படுவார். இப்பவே போன் பண்ணிச் சொல்லிடறேன்.''
மின்மினி செல்போனை எடுத்தாள். தன் கணவரின் பெர்சனல் செல்போனுக்கு எண்களை அழுத்தினாள். மறுமுனையில் ரிங்டோன் போய், குரல் கேட்டது.
''யெஸ்!'' பங்கஜ்குமாரின் குரல்.
''என்ன யெஸ்! நான் உங்க மின்மினி.''
''ஸாரி... ராங் நம்பர்!'' - பங்கஜ்குமாரின் குரலைத் தொடர்ந்து, செல்போன் இணைப்பு அறுந்தது.
இந்த வாரக் கேள்வி
நியூயார்க் நகரம் எந்தத் தீவில் அமைந்துள்ளது? 1. அலாஸ்கா 2. மன்ஹாட்டன், 3. ஹவாய்
AVCRIME என்று டைப் செய்து, ஒரு ஸ்பேஸ் விட்டு, சரியான விடைக்குரிய எண்ணையும் டைப் செய்து, கூடவே மறக்காமல் இந்த அத்தியாயம் பற்றிய உங்கள் கமென்ட்டையும் பளிச்சென்று ஐந்தே ஐந்து வார்த்தைகளுக்குள் டைப் செய்து, 562636-க்கு உடனே எஸ்.எம்.எஸ். பண்ணுங்க! |
|
|
|
|