சில தயாரிப்பாளர்கள் தங்களுக்கும் இயக்குநருக்கும் ஜாதகம் பொருந்தி வருகிறதா என்று பார்த்த பின்தான் கதை கேட்கவே கூப்பிடுவார்கள். சில புத்திசாலி உதவி இயக்குநர்கள், அப்படியான தயாரிப்பாளர்களின் ஜாதகத்தைச் சுட்டு, பத்து பொருத்தம் இருக்கிற மாதிரி டுபாக்கூர் ஜாதகம் ரெடி பண்ணி, வாய்ப்பு வாங்கிவிடுவார்கள். தமிழ் சினிமாவின் ஒரு தயாரிப்பாளருக்கு விநோதமான சென்டிமென்ட். மொட்டைத் தலையர்களைப் பார்த்தாலே பதறிவிடுவார்.மொட்டைத் தலையர்களை உள்ளே விட்டால் கம்பெனியும் மொட்டை ஆகிவிடுமாம்.
ஷூட்டிங்கில் பெரும்பாலும் ஹீரோ சாமி கும்பிடுவது மாதிரி ஸீனைத்தான் முதலாவதாக எடுப்பார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் கேமரா லென்ஸ் வைக்கும் பாக்ஸைத் தெய்வம் போலப் பாதுகாப்பார் கள். அதை அவமரியாதை செய்தால், அவர்களின் சினிமா கேரியர் அதலபாதாளத்துக்குப் போய்விடும் என்று நடுங்குவார்கள். 'ஸ்ரேயாவின் கால் லென்ஸ் பாக்ஸின் மேல் பட்டதால்தான், அவர் இரண்டு வருடங்கள் சும்மா இருந்தார். பிறகு லென்ஸ் பாக்ஸ் முன்னால் நின்று பொதுமன்னிப்பு கேட்டார். உடனே, 'சிவாஜி' வாய்ப்பு கிடைத்தது' என்று அதற்கு உதாரணமும் காட்டுகிறார்கள்.
ஷூட்டிங் ஆரம்பிக்கும்போது யாராவது தும்மினால் மொத்த யூனிட்டும் அப்செட் ஆகிவிடும். தும்மியவருக்குத் திட்டோ, முறைப்போ கிடைக்கும். இதனாலேயே பல பேர் தும்மல் வந்தால் மூக்கைப் பிடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடுவது வழக்கம். 'அலைபாயுதே' படத்தில் மாதவனின் கேரக்டர் பெயர் கார்த்தி. அதனால்தான் அந்தப் படம் ஹிட் என்று பல படங்களுக்கு ஹீரோ பெயரை கார்த்தி என்று வைத்தார்கள். அதே போல சிவா என்கிற பெயரும்கோலி வுட்டில் படா ஃபேமஸ். ஹீரோயின் கேரக்டருக்கு ப்ரியா என்கிற பெயர்தான் ஏகோபித்த சாய்ஸ்.
|