பாகவதர் காலம் தொடங்கி 'பசங்க' காலம் வரை தமிழ் சினிமா ஒரு சென்டிமென்ட் கடல்தான்! சில துளி இங்கே...
அம்மா - தங்கச்சி: 'நாடோடி மன்னன்' எம்.ஜி.ஆர். தொடங்கி 'நந்தா' சூர்யா வரை அம்மா என்றாலே சென்டிமென்ட்தான். முன்பு ஆறு பாடல்களில் ஒன்றை அம்மாவின் பெருமையைப் பாட ஒதுக்கிவிடுவார்கள். அம்மாவுக்கு அடுத்த இடம் தங்கச்சிக்கு. ''தங்கச்சீ...'' என்று டெரராகக் கூவி சென்டிமென்ட்டை டெரரிஸமாக மாற்றியதில் டி.ஆருக்குப் பெரும் பங்கு உண்டு. கிளைமாக்ஸில்அம்மாவையும் தங்கச்சியையும் உயரமான கட்டடத்தின் உச்சியிலோ, ரயில்வே தண்டவாளத்திலோ கட்டிப்போட்டு வில்லன் மிரட்டுவார். ஹீரோ வந்து இருவரையும் காப்பாற்றி, காதலியைக் கைப்பற்றி கேமராவைப் பார்த்துச் சிரிப்பார்!
தாலி: கொஞ்சநாள் முன்பு வரை தாலிதான் சினிமா ஹிட்டாக வழி என்று இருந்தது. தாய்லாந்தில் கணவன் தடுக்கி விழுந்தால் இங்கே மனைவி கழுத்தில் தாலி அறுந்துவிழும். மனநோயாளியை விட்டு விதவைக்குத் தாலிகட்ட வைத்தார்கள். மொள்ளமாரி புருஷனாக இருந்தாலும் தாலியைக் கண்ணில் ஒற்றிக்கொள்ள வைத்தார்கள். ஹீரோயின் தாலியை வில்லனைவிட்டு அறுத்து எறியவைத்தார்கள். 'பிடித்த பெண்ணை அடைய வேண்டுமா?'... 'கட்றா தாலியை' என்று மஞ்சள் கயிற்றைச் சுழற்றினார் கள். 'கள் குடித்தாலும் கணவன்' என்று தாலியைக் கழற்றாமல் மனைவிகளைத் தவிக்கவிட் டார்கள். இப்போதுதான் 'தாலி'க்கு வந்து இருக்கிறது லைட்டாக வேலி!
காதல்:'காதல் இல்லாமல் சினிமா எடுக்க வேண்டும்' என்று சட்டம் கொண்டுவந்தால் எல்லோ ரும் படம் பார்க்க பக்கத்து மாநிலத்துக்குத்தான் போக வேண்டும். காதலிக்காகக் கடலில் மூழ்கி சங்கு எடுப்பது தொடங்கி, தனக்குத்தானே சங்கு ஊதிக்கொள்வது வரை காதலுக்காக தமிழ் சினிமா காதலன் இழந்தது ஏராளம். தங்கள் காதலைச் சொல்லாமலே மறைத்து தியாகம் செய்வது ஒரு சீஸன். பிறகு சொல்லாமலே காதல்,பார்க் காமலே காதல், பல் விளக்காமலே காதல், போன் காதல், போண்டா காதல் என்று எக்கச்சக்கமான காதல்கள் கோடம்பாக்கத்தை ஆட்டிப்படைத்தன!
|