''பின்னே? அவதானேடா உன் மொறப் பொண்ணு?''
''மொறையாவது கொறை யாவது? எனக்கு இஸ்டப்பட்ட வளைத்தான் கட்டுவேன்!''
''நீ இஸ்டப்பட்டவளா? அது யார்டா அந்த சித்ராங்கி?''
''கமலா...''
''எந்தக் கமலா?''
''ஆறுமுக நாயக்கரு மவ.''
''அடப்பாவி! மீசைக்காரன் மொறப் பொண்ணில்லே? நமக்கா குடுப்பாங்க? குடுத்தா லும் இவங்க சும்மா இருப்பாங் களா? அதோட கொளத்தூரான் விரோதம் வேறே, அவம் பொண்ணக் கட்டலேன்னு!''
''போம்மா! எனக்குக் கமலா வைக் கட்ட இஸ்டம்; அவ ளுக்கு என்னக் கட்ட இஸ்டம்! நீ போய்ப் பொண்ணு கேளும்மா!''
குளத்தில் குனிந்தவாறு தண்ணீர் மேல் படிந்திருந்த பாசியை மொடாவினால் துழாவி விலக்கிக் கொண்டிருக் கிறாள் கமலா. முழங்கால் முட்டுத் தண்ணீரில் குனிந்தபடி நிற்கும் அவள் அழகைக் கண்க ளால் பருகியவாறு, சற்று நேரம் நின்றான் இரும்பூரான். பின்பு, கரையில் நின்றபடி ஒரு சிறு கல்லை எடுத்து அவள் முதுகில் போட்டு, மரத்தின் பின்ன்னால் ஒளிந்துகொண்டான்.
அவள் திரும்பிப் பார்த்து, ஒருவரையும் காணாமல், நிதா னமாகத் தண்ணீரை மொண்டு கொண்டு கரை ஏறுகிறாள். மரத்தின் பின்னால் இரும்பூரா னைக் கண்டதும், ''நீதான் கல் லைப் போட்டியா?'' என்கி றாள்.
''உ...ஊம்! நான் போடு வேனா? ஆகாசத்துலேருந்து உய்ந்திருக்கும்...''
''ஆ...ங்! உயும் ஆகாசத்தி லேருந்து! ஓங் கன்னத்துலே ரெண்டு உயும் இப்போ!''
''இதப் பார், கமலா! உங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேக்கச் சொல்லி அம்மாகிட்ட சொன்னேன். அவ மாட்டேங் குறா. மீசைக்காரன் ஊட்டாருக் கும் பயப்படறா..!''
''ஆமா... அவங்க கடிச்சுத் தின்னுப்புடுவாங்களாமா இவங்கள? உங்க அம்மா வந்து பொண்ணு கேக்கலேன்னா, நீ என்னெக் கட்டிக்க மாட்டே? அவ்வளவுதானே விசயம்? அதெச் சொல்லவா இம்புட்டு தூரம் வந்தே ஆம்புளே?''
''அதில்லே கமலா, இப்ப என்னா செய்யறதுன்னு கேக்க றேன்...''
''ம்... ஊட்டுக்குப் போயி ஒரு பானை பழைய சோத்தைத் திங்கிறது!''
''ஐய..!''
''பின்ன என்னத்தைச் செய் யறதுன்னு கேக்கிறியே? பேசாம இந்த ஊரை உட்டு எங்கியானும் போயிடலாமா?''
''கல்யாணம் கட்டிக்காமயா?''
''கண்ணாளத்துக்கு என்ன? போற எடத்துலே, நடு ஊட் டுலே எனக்கு ஒரு தாலிக்கவுறு போட்டுட்டுப் போ!''
''அப்போ நாலரை மணிக்கி ஒரு வண்டி போகுதே, அதிலே போவமா?''
''ஓ..!''
''அப்போ, அம்மன் கோவி லுக்குப் பின்னாலே வந்து நில்லு. அங்கே யாரும் வர மாட்டாங்க..!''
நாலரை மணி 'ஷட்டில்' கூ... என்று கத்திக்கொண்டு புறப்படுகிறது.
இரும்பூரான் ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறான். தூரத் தில் ஒரு கோவில் கோபுரம் தெரிகிறது. அடுத்தாற்போல் ஒரு குன்று. இருப்புப் பாதை ஓரமாக ஒரு வாய்க்கால். அந்த வாய்க்கால் கரையில், ஒரு வாத்துக்காரன் தன் வாத்துக் கூட்டத்தை வாய்க்காலுக்கு ஓட்டிச் செல்கிறான்.
''வாக்... வாக்... வாக்..!''
இரும்பூரானின் மனக்கண் எதிரே அம்மன் கோவிலும், பின்னால் அதன் மதில் சுவர் ஓரமாக கமலா நிற்கும் காட்சி யும் தோன்றுகின்றன. கண்க ளில் நீர் முட்டுகிறது.
ரயில் நிலையத்துக்கு வரும் போது, அவன் எட்ட நின்று கோவில் பக்கம் பார்த்தான். தான் சொன்னபடியே கமலா ஒரு சிறு துணி மூட்டையுடன் நின்றிருக்கக் கண்டான். ஆனால், அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்லத்தான் அவனுக்கு மனம் வரவில்லை.
'கண்ணியமாகக் கல்யாணம் செய்து கொண்டால் அதன் தினுசே வேறு. இப்போது நாலு பேர் நாலு சொல்வார்கள். மறுபடி ஊர்ப்பக்கம் தலை காட்ட முடியாது. அருகிலேயே சேர்க்க மாட்டார்கள். தன்னால் கமலாவுக்கு ஏன் இந்த கதி? முறைக்காரனைக் கட்டிக் கொண்டு அவள் நல்லபடியாக...' அதற்கு மேல் அவன் சிந்தனை ஓட மறுத்தது.
ஆனால் காலம் ஓடுகிறதே!
இன்றும் ஒரு 'ஷட்டில்' வண்டி 'கூ...' என்று கூவிக் கொண்டு ரயில் நிலையத்தி லிருந்து புறப்படுகிறது.
பயங்கர மீசையுடனும், சிவந்த கண்களுடனும் ஓர் ஆள் தன் மனைவியுடன் வண்டி ஏறுகிறான். மேலே சட்டையில்லாமல், கருங்காலி மரத்திலே கடைசல் பிடித்த மாதிரி...
குழந்தையுடன் அவள் ஜன் னல் ஓரமாக உட்காருகிறாள். மீசைக்காரன், இடம் கிடைக் காமல் பெஞ்சுகளுக்கிடையே தரையில் உட்காருகிறான். நாட் டுப்புறத்தான்தானே?
நேரம் செல்கிறது. ஒவ்வொரு ஸ்டேஷனாக நின்று போகிறது ரயில் வண்டி. ஒரு ஜங்ஷனில் வண்டி நின்றபோது, பிளாட் பாரத்திலிருந்து பலவிதமான குரல்கள் கேட்கின்றன.
''பொம்மை... பொம்மை..!''
ஒரு மூங்கில் தட்டில் சின் னச் சின்ன பிளாஸ்டிக் பொம்மைகளை வைத்துக் கொண்டு, ஜன்னல் எதிரில் வந்து நிற்கிறான் பொம்மைக்காரன். பல நிறங்களில் யானை, குதிரை, சிங்கம், வாத்து, கோழி பொம்மைகள். அந்த இடத்தை விட்டு நகராமல் நிற்கிறான். ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருப்பவள் மடியில் குழந்தையைப் பார்த்துவிட்டான் அல்லவா?
''வாண்டாம் போய்யா!'' என்கிறாள் அவள்.
''ஓரணாம்மா!'' - கிலுகிலு என்று கிலுகிலுப்பையை ஆட்டுகிறான் பொம்மைக்காரன்.
''வாண்டாம் போய்யான்னா! ஓரணாவாம்..!''
கோபத்தில் உயர்ந்த அவள் குரலைக் கேட்டதும், பொம்மைக் காரன் திடுக்கிட்டு நின்றான்.
பிளாட்பாரத்திலிருந்து பிர காசமான வெளிச்சம் அவள் முகத்தில் விழுந்தபோது கூர்ந்து கவனித்துவிட்டு ''கமலா'' என்று முணுமுணுக்கிறான். பின்பு ஒரு பொம்மையை எடுத்து அவள் மடியில் இருந்த குழந்தை கையில் வைக்கிறான்.
''ஏய்யா... வேண்டாம்னா கேக்கமாட்டே? அடச்சீ..!''
வண்டி மறுபடி ''கூ...'' என்று கத்திக்கொண்டு கிளம்புகிறது. பொம்மையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளாமல், காசும் கேட்காமல், திரும்பி வேகமாக பிளாட்பாரத்தில் நடந்து செல் லும் பொம்மைக்காரன் முதுகு கூட்டத்தில் மறைகிறது.
குழந்தை கையில் இருக்கும் பொம்மையை எடுத்துப் பார்க்கிறாள் கமலா.
அது ஒரு வாத்து பொம்மை.
|